ADVERTISEMENT

அண்ணாமலை, பாட்ஷா... இரண்டிற்கும் முதலில் யார் டைரக்டர் தெரியுமா? பழைய கதை பேசலாம் #3

01:51 AM Mar 30, 2020 | vasanthbalakrishnan

திரையுலகில் ஒரு விஷயம் நடந்து முடியும் வரை எதுவுமே நிச்சயமில்லை. இது அனைத்திற்கும் பொருந்தும். ஒரு திரைப்படத்திற்காக, எல்லா விஷயங்களும் பேசி, முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தம் செய்யப்பட்டு வைத்திருந்தாலும் கடைசி நேரத்தில் மாற்றங்கள் நேர்ந்த சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. பல சூப்பர்ஹிட் படங்களில் முதலில் வேறு நாயகர்கள் நடிப்பதாக இருந்து பிறகு வேறு ஒருவர் நடித்திருப்பார். நடிப்பில் மட்டுமல்லாமல் ஒரு படத்தின் கேப்டன் ஆஃப் த ஷிப் என்று சொல்லப்படக்கூடிய இயக்குநர் விஷயத்திலும் கூட இப்படி நடந்திருக்கின்றன. அப்படி ஒரு கதையைத்தான் இன்று பேசப்போகிறோம்.

ADVERTISEMENT



ரஜினிகாந்த், இன்று வரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இந்த இடத்திற்கு அவர் வர பல காரணங்கள். அவரது ஸ்டைல், கதைத்தேர்வு, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு... எனச் சொல்லிக்கொண்டே போகலாம். சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி, அந்த இடத்தை நோக்கி நடத்திய பயணத்தில் முக்கிய மைல் கற்களாக பல படங்கள் இருந்தன. அவற்றில் மிக முக்கியமான இரண்டு படங்கள் அண்ணாமலை, பாட்ஷா. அதுவரை சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டு, முதல் இடத்தில் இருந்த ரஜினியை அதற்கு அடுத்த கட்டத்திற்கு, அதற்கு அடுத்த மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற படம் 'அண்ணாமலை'. தமிழ் சினிமாவின் மாஸ் கமர்சியல், பொழுதுபோக்குத் திரைப்படங்களுக்கான இலக்கணத்தில் ஒரு அப்டேட்டாக அமைந்தது 'அண்ணாமலை'. ரஜினியின் பல படங்களில், டைட்டிலில் சூப்பர்ஸ்டார் என்று ஒரு மாஸான இசையுடன் வரும். அது உருவாக்கப்பட்டது அண்ணாமலை படத்தில்தான். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த அந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. ஆனால், அந்தப் படம் குறித்த ஆரம்பகட்ட அறிவிப்புகளில் படத்தை இயக்கப்போவது வசந்த் என்றே தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

சுரேஷ் கிருஷ்ணா



சுரேஷ் கிருஷ்ணா, வசந்த் இருவருமே பாலச்சந்தரின் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள். சுரேஷ் கிருஷ்ணா, பாலச்சந்தரிடம் சில படங்களில் பணியாற்றிவிட்டு, கமல் நடித்த 'சத்யா' படம் மூலம் இயக்குநராகிவிட்டார். அதைத் தொடர்ந்து தெலுங்கில் வெங்கடேஷ் - ரேவதி நடித்த பிரேமா, கமல்ஹாசன் நடித்த 'இந்த்ருடு சந்த்ருடு' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். ஹிந்தியில் சல்மான்கான் - ரேவதி நடித்த 'லவ்' படத்தையும் இயக்கினார். இப்படி பிஸியான இயக்குநராக இருந்தார் சுரேஷ் கிருஷ்ணா. வசந்த், பாலச்சந்தரிடம் பணியாற்றிய பின்னர், 'கேளடி கண்மணி' படம் மூலம் இயக்குநரானார். பிறகு 'நீ பாதி நான் பாதி' படத்தை இயக்கியிருந்தார். வசந்தின் படங்கள், அவரது குருநாதர் பாலச்சந்தரை நினைவுபடுத்தின. ஆனால், சுரேஷ் கிருஷ்ணா சென்றதோ வேறு பாதை. இந்நிலையில் கவிதாலயா நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து தயாரிக்கவிருக்கும் படத்தை இயக்க வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்ட செய்தி வெளியானது.

படத்தின் பூஜை தேதியும் அறிவிக்கப்பட்டு வேலைகள் நடந்துவந்த நிலையில் திடீரென படத்திலிருந்து விலகினார் வசந்த். பூஜைக்கு வெகு சில நாட்களே இருந்த நிலையில் திடீரென அழைக்கப்பட்டார் சுரேஷ் கிருஷ்ணா. என்ன கதை, என்ன மாதிரியான படம், என்ன பட்ஜெட் என்று எதுவுமே தெரியாமல் தனது குருநாதர் அழைத்ததால் உடனே வந்து படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் சுரேஷ் கிருஷ்ணா. ரஜினி, ஒரு மாஸ் ஹீரோவாக உருவாகிவிட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ரஜினிக்கு படத்தின் இயக்குநர் குறித்து ஒரு சந்தேகம் இருந்தது. முதலில் வசந்த், இப்போது சுரேஷ், இருவருமே பாலச்சந்தரின் சீடர்கள். என்னதான் ரஜினியை அறிமுகம் செய்தது பாலச்சந்தர் என்றாலும் ரஜினியின் ஸ்டைல் வேறு மாதிரி உருவாகியிருந்தது. அதனால்தான் இந்த சந்தேகம். ஆனால், சுரேஷ் கிருஷ்ணா படத்தை ரஜினிக்கு ஏற்றபடி மாஸாக உருவாக்கியிருந்தார். 'அண்ணாமலை', ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதே கூட்டணி மீண்டும் 'வீரா' படத்தைக் கொடுத்தது.


வசந்த்



'அண்ணாமலை' ஒரு உயரம் என்றால் 'பாட்ஷா' அடுத்த மிகப்பெரிய உயரமாக ரஜினிக்கு அமைந்தது. இன்று வரை ரஜினியை துரத்தும் அரசியல் அன்று தொடங்கியதுதான். அரசியல் பேசும், வாய்ஸ் கொடுக்கும் தன்னம்பிக்கையை ரஜினிக்குக் கொடுத்தது 'பாட்ஷா' பெற்ற மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். 'பாட்ஷா' படத்தைத் தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது அவர்களது அமைச்சரவைகளில் இடம் பெற்றவர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர். எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களைத் தயாரித்தவர். அவரது 'சத்யா மூவீஸ்'ஸின் தயாரிப்புதான் 'பாட்ஷா'. ரஜினிக்கு அண்ணாமலை, வீரா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்திருந்த சுரேஷ் கிருஷ்ணா மூன்றாவதாக இந்தப் படத்தை இயக்கினார். ஆனால், அவருக்கு முன்பாக இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தவர் யாரென்று தெரிந்தால் நமக்கு ஆச்சரியம் ஏற்படும். இன்று நகைச்சுவை நடிகராக நம்மால் நன்கு அறியப்பட்ட மனோபாலாதான் அவர்.

மனோபாலா



மனோபாலா, இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றியவர். 'ஆகாய கங்கை' என்ற படத்தின் மூலம் இயக்குநரான அவர், ரஜினிகாந்த் நடிப்பில் 'ஊர்க்காவலன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தை தயாரித்ததும் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ்தான். பிறகு சில விஜயகாந்த் படங்கள், ஹிந்தி படமொன்று உள்பட சில படங்களை இயக்கிய மனோபாலாவை மீண்டும் அழைத்தாராம் ஆர்.எம்.வீ. மனோபாலா அழைக்கப்பட்டது தெரியாமல், ரஜினி தரப்பு சுரேஷ் கிருஷ்ணாவை பரிந்துரைக்க, பின்னர் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியதும் படம் பெற்ற வெற்றியும் நாம் அறிந்ததே. பிறகு, ரஜினியும் சுரேஷ் கிருஷ்ணாவும் இணைந்த ‘பாபா’ வெற்றிபெறவில்லை. மனோபாலா, பின்னர் சில படங்களை இயக்கிவிட்டு. கே.எஸ்.ரவிக்குமாரின் 'நட்புக்காக' படத்தின் மூலம் நடிகராகி புகழ்பெற்றார். பின்னர் 'சதுரங்க வேட்டை' மூலம் தயாரிப்பாளருமாகிவிட்டார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மிகப்பெரிய மாஸ் வெற்றிப் படங்களாக அமைந்த 'அண்ணாமலை', 'பாட்ஷா' படங்களை வசந்த், மனோபாலா இயக்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? நடந்திருந்தால்தான் சொல்ல முடியும். சினிமா உலகில் நடந்தால்தான் எதுவும் நிச்சயம்.

இன்னும் கதைகள் பேசுவோம்...

சென்ற கதை...

இவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி! பழைய கதை பேசலாம் #2

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT