ADVERTISEMENT

“பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி” - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு:17

11:16 AM Apr 17, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

தன்னுடைய வழக்கறிஞர் பணியில் தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

மாலா என்கிற பெண்ணுடைய வழக்கு இது. அரசாங்க வேலையில் இருக்கும் கணவன். எட்டு வயதில் ஒரு குழந்தை. மகிழ்ச்சியான குடும்பம். குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் இந்தப் பெண் வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கிறாள். ஆசிரியர் பணி. கணவர் வீட்டுக்குத் தாமதமாக வருவதை அவள் உணர்கிறாள். ஆபீஸ் வேலை என்று கணவர் காரணம் சொல்கிறார். சில நேரங்களில் எரிச்சலை வெளிப்படுத்துகிறார். துணி துவைக்கும்போது கணவரின் பேண்ட் பாக்கெட்டில் இரண்டு சினிமா டிக்கெட்டுகள் இருப்பதை அவள் கவனிக்கிறாள்.

அடுத்த நாள் அது குறித்து கணவரிடம் கேட்கிறாள். இதை எப்படி கண்டுபிடித்தாள் என கணவனுக்கு அதிர்ச்சி. இருந்தாலும் சமாளிக்கிறான். நண்பனுடன் சினிமாவுக்கு சென்றதாகச் சொன்னான் கணவன். அவளும் அதை நம்பி ஏற்றுக்கொண்டாள். ஒருநாள் சக ஆசிரியை ஒருவர் அவளையும் அவளுடைய கணவரையும் பீச்சில் பார்த்ததாகச் சொன்னார். அவள் தன்னுடைய கணவரோடு பீச்சுக்கு செல்லவில்லை. பின் யாரோடு அவர் சென்றார்? தன் கணவன் மீது ஏதோ ஒரு தவறு இருப்பது அவளுக்குப் புரிந்தது. பீச்சுக்கு அவன் சென்றது பற்றி அவனிடமே கேட்டாள். சரியான பதில் இல்லை.

ஒருநாள் பள்ளியில் தலைசுற்றல் ஏற்பட்டு பாதியில் அவள் வீட்டுக்கு வந்தாள். வந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. ஒரு பெண்ணும் அவளுடைய கணவரும் ஒன்றாக இருந்தனர். தன்னுடைய வாழ்க்கையில் அதிகபட்ச அதிர்ச்சியை அடைந்தாள். சில நாட்கள் கழித்து அந்தப் பெண் என்னிடம் வந்தாள். தன்னுடைய கணவரை விட்டு தான் பிரிந்து இருக்க விரும்புவதாகவும் தாய் வீட்டிற்குச் செல்லப்போவதாகவும் அவள் தெரிவித்தாள். அதன்பிறகு அவளுடைய பெற்றோர் அவளை சமாதானம் செய்து கணவர் வீட்டில் கொண்டுவந்து விட்டனர். கணவரோடு பேசுவதையே அவள் நிறுத்தினாள்.

கணவருடைய பெற்றோருக்கு இவளுடைய அமைதி கேள்வியை உருவாக்கியது. ஏன் என்று அவர்கள் விசாரித்தபோது இவளுடைய நடத்தை பற்றி அவன் தவறாகப் பேசினான். கொதித்துப் போன அவள் இவனுடைய வண்டவாளம் பற்றி மனதுக்குள் இருந்தவற்றை வெளிப்படுத்தினாள். இனி அவனோடு தான் வாழப்போவதில்லை என்கிற முடிவை எடுத்தாள். இணையர் இன்னொருவருடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் அதை வைத்து விவாகரத்து வாங்கலாம். விவாகரத்து என்றில்லாமல் அவர்கள் பிரிந்து வாழலாம் என்கிற முடிவு எடுக்கப்பட்டது.

சில காலத்துக்குப் பிறகு அவளுடைய கணவன் திருந்தி அவளிடம் வந்தான். இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், திருமணத்தில் பிரச்சனை வருவது இயல்புதான். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ வேண்டும். அன்றையைவிட இன்று பெண்களுக்கு நிறைய புரிதலும் சுதந்திரமும் இருக்கிறது. நம்பிக்கை துரோகம் செய்கிற ஒருவரோடு வாழ இன்று யாரும் தயாராக இல்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT