/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Santhakumari_0.jpg)
போதைப்பழக்கம் உள்ள கணவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம். பல கனவுகளுடன் திருமண வாழ்வுக்குள் அடியெடுத்து வைக்கும் பெண்கள் தன்னுடைய கணவர் ஒரு குடிகாரர் என்று தெரிந்த பிறகும் அனுசரித்து வாழ்கின்றனர். அந்தப் பெண்களை அவர்களுடைய கணவர்கள் செய்யும் டார்ச்சர் கொஞ்சநஞ்சமல்ல. அப்படி ஒரு வழக்கு பற்றி குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.
பொங்கல் விழாவிற்காக கிராமத்திற்குச் சென்றபோது ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவளைப் பற்றி விசாரித்த போது அவள் திருமண வாழ்வில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து என் சகோதரிகள் விவரித்தனர்.அவளுக்கு விவாகரத்து வாங்கித் தருமாறும் வலியுறுத்தினர். அந்தப் பெண்ணை அழைத்து நடந்தவை குறித்துக் கேட்டேன். பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடத்தி வைக்கப்பட்ட திருமணம் தான் அவளுடையது. அவளும் அழகானவள், பையனும் அழகானவன். இருவரும் படித்தவர்கள்.
"ஆரம்பத்தில் அவர் மிகவும் நன்றாக என்னுடன் பழகினார். நான் நன்றாக நடனமாடுவேன். அதைத் தெரிந்து என்னுடைய நடனத் திறமை பற்றி சிலாகித்தார். நாங்கள் தனிக்குடித்தனமாகத் தான் இருந்தோம். முதல் நாளிலேயே அவர் மிகவும் தாமதமாக வீட்டிற்கு வந்தார். வரும்போது மிகுந்த குடிபோதையில் அவர் இருந்தார். அலுவலகத்தில் ஒரு பார்ட்டி என்றும் தன்னை மன்னித்துக் கொள்ளுமாறும் கெஞ்சினார். இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த அவர், மூன்றாவது நாள் மீண்டும் குடித்துவிட்டு வந்தார். அப்போது என்னை அவர் திட்டவும் தொடங்கினார். சிறிது காலம் காத்திருப்போம் என்று நான் முடிவு செய்தேன்.
சில நாட்களில் அவருடைய நண்பர்களை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அனைவருக்கும் சமைத்து உணவு பரிமாறினேன். அனைவரும் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் முன்னிலையில் அவர் என்னை நடனமாடச் சொன்னார். நான் மறுத்தபோதும் என்னை அவர் கட்டாயப்படுத்தினார். என் புடவையைப் பிடித்து இழுத்த அவரைத் தள்ளிவிட்டு பக்கத்து அறைக்குச் சென்றேன். அப்போது என்னைக் காப்பாற்ற அங்கு யாருமே இல்லை. அடுத்த நாள் காலையில் என்னுடைய பெற்றோருக்கு போன் செய்தேன். நடந்த அனைத்தையும் கூறினேன். அவர்கள் வந்து என்னை அழைத்துச் சென்றனர்" என்றாள்.
திருமணமாகி ஒரு வருடத்திற்குப் பிறகுதான் விவாகரத்து பெற முடியும் என்பதால் அவளால் விவாகரத்து பெற முடியவில்லை. ஆனால், ஒரு வருடத்திற்கு முன்பே விவாகரத்து கேட்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது என்பதை விளக்கி வழக்கு தொடுத்தோம். அவனும் நீதிமன்றத்திற்கு வந்தான். ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டிருந்தான். நீதிமன்ற கவுன்சிலிங்கின் போது, நடந்த அனைத்தையும் அந்தப் பெண் கூறினாள். அவன் அனைத்தையும் மறுத்தான். ஆனால், வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் நாய் குரைப்பது, நண்பர்கள் உள்ளே வருவது என்று அனைத்தும் பதிவாகியிருந்தது. அது தெரிந்தவுடன் அவனுக்கு பயம் வந்தது.
இருவரும் விவாகரத்து பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். இந்த மாதிரி வழக்குகளில் விவாகரத்து தான் பெற முடிகிறதே தவிர, குற்றம் செய்தவனுக்கு தண்டனை வாங்கித்தர முடிவதில்லை. அதைச் செய்ய குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். பல நடைமுறைகள் மாற வேண்டும். அதுவரை இருக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி தங்களுக்கான நீதியைப் பெற வேண்டும். மறுமணம் செய்யவும் பெண்கள் தயங்கக் கூடாது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)