Skip to main content

முதலில் டப்பிங் கொடுத்தார், அப்புறம் டஃப் கொடுத்தார்! விக்ரம் - அஜித்... சில ஒற்றுமைகள்! பழைய கதை பேசலாம் #4 

Published on 09/04/2020 | Edited on 11/04/2020


கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி இருக்கிறது. பாதிப்பும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகமாகும் சூழ்நிலையில் அரசின் அறிவுறுத்தல்படியும் மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் நாம் வீட்டிலேயே தனிமைப்பட்டு இருக்க வேண்டியது நம் கடமையாகிறது. இன்னும் சில நாட்கள் வீட்டில் பொழுதைக்கழிக்க சிரமப்படும் உங்களுடன் சுவாரசியமாக சில பல பழைய தமிழ் சினிமா கதைகளைப் பேசலாமே என்று தோன்றியது...

 

old vikramதமிழ் திரையுலகில் எப்போதுமே பெரிய பின்புலமில்லாமல் வந்து ஜெயித்தவர்களுக்கு ஒரு தனி மரியாதை உண்டு.அதிலும் நீண்ட காலம் போராடி ஜெயித்தவர்களுக்கு நல்ல மதிப்பு உண்டு.இதற்கு, நடிகர்களில் நாம் அறிந்த சிறந்த உதாரணங்கள் அஜித், விக்ரம் போன்றவர்கள்.விக்ரம், ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்து சில ஆண்டுகளாகிவிட்டாலும் அவர் மீது அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் ஒரு மதிப்பு உண்டு.அவரது போராட்டம் அப்படி, போராடி வென்ற பொழுதில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் அப்படி.

அஜித்திற்கும் விக்ரமிற்கும் சில ஒற்றுமைகள் உண்டு.விக்ரமின் தந்தை வினோத் தாஜும் நடிப்பு மீது ஆர்வம் கொண்டு வந்திருந்தாலும் சினிமாவில் பெரிதாக சாதித்தவரில்லை.நடிகர் தியாகராஜன்,விக்ரமின் உறவினராக இருந்தாலும் அந்த பின்புலமும் விக்ரமிற்கு பெரிதாக உதவவில்லை.அஜித்தைப் போலவே முதல் அறிமுகத்திற்கும் வெற்றிக்கும் மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலைதான் விக்ரமிற்கு இருந்தது. இருவருமே திரைப்பட அறிமுகத்திற்கு முன் சில விளம்பரங்களில் நடித்துள்ளனர்.'என் காதல் கண்மணி' என்ற படத்தில் அறிமுகமான விக்ரமிற்கு அடுத்த படமாக தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனரான, இயக்குனர் ஸ்ரீதரின் 'தந்துவிட்டேன் என்னை' அமைந்தது. ஆனால் அந்தப் படமும் வெற்றி பெறவில்லை.

 

 

vikram torino AD

 

http://onelink.to/nknapp

 

ajith old ADநடிப்பு முயற்சிகளின் ஆரம்ப கட்டத்திலேயே விக்ரமிற்கு நடந்த ஒரு விபத்தில் காலில் பெரிய முறிவு ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக நடக்க முடியாமல் இருந்து, தனது நம்பிக்கையாலும் முயற்சியாலும் மீண்டு வந்தார். பின்னாளில் 'தூள்', 'சாமி' போன்ற சில படங்களில் அவர் ஓடுவது வித்தியாசமாக இருப்பதைக் கிண்டல் செய்தவர்களும் உண்டு.ஆனால், அதன் காரணம் அந்த காயம் என்பது பலருக்கும் தெரியாது. அஜித்திற்கும் சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே பெரிய விபத்து நடந்து முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இப்படிச் சில ஒற்றுமைகள் இருந்தாலும் 'ஆசை' படத்தின் மூலமாக அஜித்திற்கு வெற்றி சற்று சீக்கிரமே அமைந்தது.விக்ரம், அதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.ஆனால், அவர் தன் துறையை விட்டுச் செல்லவில்லை. தொலைக்காட்சி தொடர்கள், பிற நடிகர்களுக்கு டப்பிங் பேசுதல் என்று சினிமாவிலேயேதான் இருந்தார்.அஜித்தின் முதல் படமான அமராவதியில் அஜித்திற்கு டப்பிங் கொடுத்தவர் விக்ரம்.அப்பாஸ், பிரபுதேவா போன்றோருக்கும் அவர்கள் நாயகனாக நடித்த முதல் படங்களில் குரல் கொடுத்தது விக்ரம்தான். அழகான இளம் நாயகனாக அஜித் பிரபலமான பிறகு அவருடன் இணைந்து 'உல்லாசம்' படத்தில்   நடித்தார் விக்ரம்.அதுவும் வெற்றி பெறாமல் போனது.ராதிகாவுடன் இணைந்து 'சிறகுகள்' என்ற டெலிஃபிலிமில் நடித்தார் விக்ரம்.

 

vikram ajithஇப்படி நீண்டுகொண்டே போன அவரது வெற்றியை நோக்கிய தேடல், பாலாவின் 'சேது' படத்தின் மூலம் வென்றது.அதன் பிறகு 'தில்', 'ஜெமினி' 'தூள்' என மேலே வந்த விக்ரம் 2003ஆம் ஆண்டில் உச்சத்தில் இருந்தார்.விஜய், அஜித் இருவருக்குமே கடும் டஃப் கொடுத்தார்.அந்த ஆண்டில் 'தூள்', 'காதல் சடுகுடு', 'சாமி', 'பிதாமகன்' என அவரது நான்கு படங்கள் வெளியாகின.'காதல் சடுகுடு' தவிர பிற மூன்று படங்களும் பெரிய வெற்றி.'பிதாமகன்' படத்திற்காகத் தேசிய விருதையும் பெற்றார் விக்ரம்.இப்படி, விக்ரம், 'சீயானாக' வெற்றி பெற்ற கதை, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் போராட்டம்.உண்மையிலேயே நமக்கு உத்வேகம் கொடுக்கக்கூடியது.

இன்னும் சில கதைகள்...

அண்ணாமலை, பாட்ஷா... இரண்டிற்கும் முதலில் யார் டைரக்டர் தெரியுமா? பழைய கதை பேசலாம் #3

இவர் விஜய் ரசிகர், ஆனா ஒரு விஷயத்தில் அஜித் மாதிரி! பழைய கதை பேசலாம் #2

விஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது! - பழைய கதை பேசலாம் #1 


 

 

 

 

Next Story

பூஜையுடன் தொடங்கிய ‘பைசன்’ படப்பிடிப்பு (புகைப்படங்கள்)

Published on 06/05/2024 | Edited on 06/05/2024

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இனைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருவதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகுவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. போஜை விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினராக விக்ரமும் கலந்து கோண்டார். மேலும் கிளாப் போர்டு அடித்து படப்பிடிப்ப தொடங்கி வைத்தார்.   

Next Story

விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
case against vikram regards veera dheera sooran movie poster

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இதையடுத்து சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அடுத்ததாக துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இப்படத்தில் இனைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து கடந்த விக்ரம் பிறந்தநாளான 17ஆம் தேதி, விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அதே நாளில் படத்தின் டைட்டில் அடங்கிய புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் தனது இரு கைகளிலும் அறுவா வைத்திருக்கும்படி புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

case against vikram regards veera dheera sooran movie poster

இந்த நிலையில் அந்த போஸ்டரை சுட்டிக்காட்டி விக்ரம் மீது ஆன்லைன் வாயிலாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் கொடுத்திருக்கும் நிலையில் அந்த புகாரில், “விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் போஸ்டரில் விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.