Skip to main content

விஜய்க்கு மட்டுமல்ல விஜயகாந்துக்கும் அஜித்துக்கும் இது நிகழ்ந்திருக்கிறது! - பழைய கதை பேசலாம் #1 

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி இருக்கிறது. பாதிப்பும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகமாகும் சூழ்நிலையில் அரசின் அறிவுறுத்தல்படியும் மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் நாம் வீட்டிலேயே தனிமைப்பட்டு இருக்க வேண்டியது நம் கடமையாகிறது. இன்னும் இருபது நாட்கள் வீட்டில் பொழுதைக்கழிக்க சிரமப்படும் உங்களுடன் சுவாரசியமாக சில பல பழைய தமிழ் சினிமா கதைகளை பேசலாமே என்று தோன்றியது...

 

captain vijayakanth



'கதைத்திருட்டு' என்ற வார்த்தை, தமிழ் சினிமா ரசிகர்கள் சமீபத்தில் அதிகம் கேட்ட ஒரு வார்த்தை. 'சர்கார்' பட விவகாரத்தில் அது மிக வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு நீதிமன்றம் வரை சென்று, குற்றச்சாட்டு வைத்த வருண் ராஜேந்திரனின் பெயர் சர்கார் டைட்டிலில் இணைக்கப்பட்டு 'நன்றி' கார்ட் போடும் வரை சென்றது. அவருக்கு ஒரு இழப்பீடும் வழங்கப்பட்டது. அதற்கு முன்பும் பின்பும் பல படங்களில் இந்தக் குற்றச்சாட்டு, பஞ்சாயத்து நடந்துள்ளது. 'பிகில்', '96', கத்தி, 'மெட்ராஸ்' என பல முக்கிய படங்கள் இந்த லிஸ்ட்டில் வரும். இப்போது, கதை திருட்டு குற்றச்சாட்டுகள் எப்படி கையாளப்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். குற்றச்சாட்டு வைப்பவர் நேரடியாக ஊடகங்களிலோ, சமூக ஊடகங்களிலோ அதை வெளியிடுகிறார். தனது கதை முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த சங்கத்திலும் புகார் செய்கிறார். அடுத்து இரு தரப்பும் மாற்றி மாற்றி ப்ரஸ் மீட் கொடுக்க, ஒரு சில நாட்கள் அதுதான் சோசியல் மீடியா விவாதப் பொருள் ஆகிறது. முடிவு கிடைக்கிறதோ இல்லையோ பிறகு அடுத்த டாபிக் வந்துவிடுகிறது.

 

director nandakumar

நந்தகுமார்



பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு சோசியல் மீடியா, ஏன், மீடியாவே இந்தளவுக்கு இல்லாத பொழுது எப்படி கையாளப்பட்டன  இவை? அப்போதெல்லாம் சினிமா சங்கங்கள் மிகவும் பலமாகவும் அதிகாரம் உள்ளவையாகவும் இருந்தன. அதனால் பெரும்பாலும் அதிகம் வெளியே தெரியாமல் முக்கிய புள்ளிகள் முன்னிலையில் பேசி முடிக்கப்பட்டன. இன்னொரு விதமாகவும் டீல் செய்யப்பட்டது. கதையை பறிகொடுத்தவரிடம் உண்மை இருப்பதாக தயாரிப்பாளர் உணர்ந்தால், அவரே அந்த கதாசிரியருக்கு பட வாய்ப்பு கொடுத்து ஈடுகட்டினார். 'ரமணா', விஜயகாந்துக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்த படம். விஜயகாந்த், திரையுலகில் மிக நல்லவர் என்ற பெயரெடுத்தவர். 'கேப்டன்' என்று அன்பாக அழைக்கப்பட்டவர். அந்த 'ரமணா' படத்தின் கதை  தன்னுடையது என்று கூறினார் இன்னொரு இயக்குனர். அவர், நந்தகுமார். அதற்கு முன்பு பிரம்மாண்ட தயாரிப்பாளராகத் திகழ்ந்த குஞ்சுமோன் தயாரிப்பில் 'கோடீஸ்வரன்' என்ற படத்தை இயக்கியவர். ஆனால் நிதி சிக்கலால் அந்தப் படம் வெளிவரவில்லை.

'கோடீஸ்வரன்' கைவிடப்பட்ட பிறகு அதிலிருந்து மீண்டு அடுத்த கதையை தயார் செய்தார் நந்தகுமார். 'பத்ரி' திரைப்படத்தை தயாரித்த நிறுவனத்திடம் அந்தக் கதையை சொல்லி ஓகே  பண்ணியிருந்தார். அவருடன் அதே நிறுவனத்தில் அதே நேரத்தில் கதை சொல்லியிருந்தது சீமான். தனது 'தம்பி' கதையை அப்போது 'திலீபன்' என்ற பெயரில் சொல்லி ஒப்புதல் வாங்கி இருந்தாராம். 'ரமணா' கதையை 'ஆசான்' என்ற பெயரில் தயார் செய்துவிட்டு படம் இயக்கக் காத்திருந்த நந்தகுமாருக்கு அதிர்ச்சி செய்தி வந்தது. தெலுங்கில், தனது அனுமதி இல்லாமலேயே அந்தப் பட வேலைகள் தொடங்கி ஷாஜி கைலாஷை இயக்க நியமித்திருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு இவர் எதிர்ப்பு தெரிவிக்க பின்னர் அந்தப் படமும் தமிழில் இவர் இயக்கவிருந்த படமும் கைவிடப்பட்டன.
 

kaadhal kotai ajith



கொஞ்ச நாள் கழித்து அதே கதையை விஜயகாந்த்துக்காக அவரது மேனேஜரிடம் கதை சொல்ல வந்தார் நந்தகுமார். கதையை கேட்ட மேனேஜர் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டாராம். என்னவென்று விசாரிக்க அதே கதையில் ரமணா படம் விஜயகாந்த் நடிப்பில் தயாராகிக்கொண்டிருந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள். பிரச்னை விஜயகாந்த் வரை செல்ல, நடிகர் சங்கத்தில் நெப்போலியன் உள்ளிட்ட பலர் முன்னிலையில் பேசப்பட்டது. பணமெல்லாம் வேண்டாம், தன் பெயர் திரையில் வரவேண்டுமென்பதே தன் நிபந்தனை என்று கூறிய நந்தகுமாரின் நேர்மையை உணர்ந்த விஜயகாந்த், தானே அழைத்து அவருக்கு படம் இயக்க வாய்ப்பளித்தார். அந்தப் படம்தான் 'தென்னவன்'. முரண் என்னவென்றால் 'ரமணா' பெற்ற பெருவெற்றியை 'தென்னவன்' பெறவில்லை.

இதே போல, அஜித் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த 'காதல் கோட்டை' படத்தின் கதை தன்னுடையது என்று குற்றம் சாட்டிய பாலு என்ற இயக்குனருக்கு அவரது திறமையை அங்கீகரித்து 'காலமெல்லாம் காதல் வாழ்க' என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார் 'சிவசக்தி' பாண்டியன். 'காதல் கோட்டை' படத்தை இயக்கிய அகத்தியன், தான் கதையை திருடவில்லை என்றும் 'இது உலகுக்கே பொதுவான கதை, தமிழ் இலக்கியத்திலிருந்துதான் தனக்கு இந்தக் கதை தோன்றியது' என்றும் தெரிவித்தார். 'காதல் கோட்டை', 'காலமெல்லாம் காதல் வாழ்க' இரண்டு படங்களிலுமே கதைக்கரு 'பார்க்காமலேயே காதல்' என்பதுதான். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்தது சிறப்பு.      

 

மேலும் பல கதைகள் பேசுவோம்...                              

 

 

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.