ADVERTISEMENT

உலகக் கோப்பை இறுதிப் போட்டி: யார் மகுடம் சூட அதிக வாய்ப்பு?

12:05 PM Nov 19, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் எப்படி விறுவிறுப்பாக இருக்குமோ அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய அணி உடனான போட்டியும் இருக்கும். சமீப காலங்களில் பாகிஸ்தான் அணியுடன் அதிக போட்டிகளில் விளையாடாத காரணத்தால், பாகிஸ்தான் அணி உடனான போட்டியை விட ஆஸ்திரேலியா அணி உடனான போட்டியே அதிகம் எதிர்பார்ப்பை கூட்டுகிறது. மேலும் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.

அந்த தோல்விக்கு பதிலடி தரும் வகையில் 20 வருடங்களுக்குப் பிறகு இன்று ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. இதற்கு இடையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நாக் அவுட் போட்டிகளில் சில முறை மோதி கொண்டாலும், குறுகிய வடிவிலான போட்டிகளில் 2003 க்கு பிறகு தற்போது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளன. 2003இல் ஆஸ்திரேலியா அணி எப்படி வலிமை வாய்ந்த அணியாக இருந்ததோ, அதேபோல தற்போது இந்திய அணி வலிமை வாய்ந்ததாக உள்ளது.

இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என நடைபெற்ற போட்டிகள் நமக்கு காட்டுகின்றன. கிரிக்கெட் விமர்சகர்களும் இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் சாதகமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆடுகளம் மெதுவாகவும் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

இதனால் இந்திய அணியில் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இருந்தால் அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கும் அஸ்வின், இந்திய அணியின் ஆடும் லெவனில் இருந்தால் அது கூடுதல் பலமாக இருக்கும் என்று சில கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரே அணியை வைத்துக்கொண்டு 5 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்று விட்டதால், கடைசி நேரத்தில் மாற்றம் தேவையில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களின் சிலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் இன்றைய போட்டியை வென்றே ஆக வேண்டும் என்கிற உயரிய நோக்குடன் இந்திய அணி விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கிடையில் பைனல் குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் ரோகித், இந்திய அணிக்காக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்கள் நிறைய செய்துள்ளார். அவருக்காகவாவது, இந்த உலகக் கோப்பையை நாங்கள் வென்று அவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றார்.

அகமதாபாத் மைதானத்தில் இதுவரை 30 ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 15 இல் முதலில் பேட்டிங் செய்த அணியும், 15 இல் இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன. இந்த உலகக் கோப்பையில் நடைபெற்ற நான்கு ஆட்டங்களில் சேசிங் செய்த அணியே மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், இறுதி ஆட்டம் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்யவே விரும்பும். டாஸ் என்பது நம் கையில் இல்லாததால் டாஸ் யார் ஜெயித்தாலும் இந்தியா ஆட்டத்தை வென்று உலகக்கோப்பை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

வெ.அருண்குமார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT