Skip to main content

மூவர் கூட்டணியால் 300-ஐ தாண்டிய இந்தியா

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

 India sri lanka worldcup score update

 

உலகக் கோப்பையின் 33 ஆவது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

 

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித்தின் சொந்த ஊர் என்பதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அவர் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். அதிக பட்சம் இந்த மைதானத்தில் ரோஹித் 20 ரன்களே எடுத்து உள்ளார். இந்த போட்டியில் அதை மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர் கதையாகி உள்ளது. அடுத்து வந்த கோலி, கில்லுடன் இணைந்து பொறுப்பாக ஆடினார். இருவரும் ஒன்று, இரண்டு என ரொட்டேட் செய்தாலும், தவறான பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட தவறவில்லை. சதமடிப்பார் கில் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் 92 பந்துகளில் மதுஷங்கா பாலில் அவுட் ஆனார்.

 

அடுத்து கோலியாவது சதமடிப்பாரா என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவரையும் மதுஷங்கா 88 ரன்களில் அவுட் ஆக்கினார். அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து இணைந்த ராகுல், ஷ்ரேயாஸ் இணை நிதானமாகத் தொடங்கியது. ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யா மிரட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 ரன்களுக்கு வீழ்ந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்ததால், ஷ்ரேயாஸ் தனது அதிரடியைக் காட்டத் தொடங்கினார். இலங்கை பந்து வீச்சை சிக்ஸருக்கு விரட்டிய வண்ணம் இருந்தார். 6 சிக்ஸர்கள் அடித்து சதத்தை நெருங்கும் நேரத்தில் திரும்பவும் மதுஷங்கா அதற்கு முட்டுக்கட்டை போட்டார். ஷ்ரேயாஸ் 82 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் ஜடேஜாவின் கடைசிக் கட்ட அதிரடியான  35  ரன்கள் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட்டுகள் இழப்பிற்கு  357 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், சமீரா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்க உள்ளது.

- வெ.அருண்குமார்  

 


 

 

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.