ADVERTISEMENT

டையபர்ஸுடன் விளையாடிய சச்சினின் போராட்டமும்... டிராவிட்டின் அர்ப்பணிப்பும்...

05:33 PM May 31, 2019 | santhoshkumar

கிரிக்கெட்டில் பல சாதனைகளை “முதன்முறை” படைத்த சச்சின், உலகக்கோப்பை தொடர்களிலும் சாதனை மன்னன் தான். அதிக ரன்கள், அதிக பவுண்டரிகள், அதிக சதங்கள், அதிக அரைசதங்கள் என உலகக்கோப்பையிலும் அவரின் ராஜ்ஜியம் தான்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பல கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட இந்தியா போன்றதொரு மிகப்பெரிய தேசத்தின் சார்பாக விளையாடிய 6 உலகக்கோப்பை தொடர்களிலும் லீடிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது இமாலய சாதனை தான்.

2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை வென்றது. ஆனால் அந்த போட்டியில் நெதர்லாந்தின் பந்து வீச்சில் இந்தியாவின் டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். 204 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது. சச்சின் மட்டுமே 52 ரன்கள் எடுத்தார். ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே ஆகியோரின் சிறப்பான பவுலிங் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 41.1 ஓவர்களில் 125 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. அதிகபட்சமாக சச்சின் 36 ரன்கள் எடுத்தார். 22.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வென்றது ஆஸ்திரேலியா. மோசமான ஆட்டத்தை எதிர்பார்க்காத ரசிகர்கள் இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்குலி உள்ளிட்ட சிலரது வீடுகளை கல் வீசித் தாக்கினார்கள்.

அந்த தாக்குதல்களுக்கு பிறகு நடைபெற்ற லீக் போட்டிகளில் அபாரமாக ஆடி இந்திய அணி வென்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக விளையாடிய சச்சின் 75 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜோகன்ஸ்பர்க்கில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது வயிற்று வலி பிரச்சனையுடன் விளையாடினார் சச்சின். ஐசோடானிக் ட்ரிங்க்ஸ் அதிக அளவில் எடுத்துக்கொண்ட போதும் உடல்நிலை சரியாகவில்லை. பின்னர் உப்பு கலந்து குடித்தும் வயிறு பிரச்சனை குறையவில்லை. வேறு வழியின்றி உள்ளாடையில் டிஸ்யூ பேப்பரை வைத்துக்கொண்டு பேட்டிங் செய்ய சென்றேன் என தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்திருந்தார் சச்சின்.

பேட்டிங் செய்யும் போது மிகவும் சிரமமாக இருந்தது. ஆட்டத்தின் நடுவில் கிடைத்த ட்ரிங்க்ஸ் பிரேக்கில் ஓய்வறைக்கு செல்லும் கட்டாயம் ஏற்பட்டது. ஒரு மோசமான அனுபவத்தோடு விளையாடிய அந்த போட்டியில் 97 ரன்கள் எடுத்தது மறக்கமுடியாத சம்பவமாக அமைந்ததாக குறிப்பிட்டிருந்தார் சச்சின். அந்த போட்டியில் இந்திய அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

சச்சின் இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த லீக் போட்டியில் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். அதிலிருந்து ஓரளவு குணமாகி வந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது வயிற்று கோளாறு ஏற்பட்டது. சச்சினின் சாதனைகள் பல போராட்டங்களுக்கும், இன்னல்களுக்கும், பயிற்சிகளுக்கும், விடாமுயற்சிகளுக்கும் பிறகு படைக்கப்பட்டவை என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லீக் போட்டியையும், இறுதி போட்டியையும் தவிர வேறு எந்தப் போட்டியிலும் இந்தியா தோற்கவில்லை. 2003 இறுதிப் போட்டியில் இந்தியா தோற்றாலும், 1983 உலகக்கோப்பைக்கு பிறகு 2003 உலகக்கோப்பை இந்தியாவின் சிறந்த தொடராக அமைந்தது. அதற்கு காரணம் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது தான்.

2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி சாதிக்க சச்சின், கங்குலி பேட்டிங்கில் முக்கிய காரணமாக இருந்தனர். மேலும், மற்றொரு காரணம் தியாக உள்ளம் கொண்ட டிராவிட் தான். உலகக்கோப்பை தொடரில் விக்கெட் கீப்பிங் செய்யவும் ஒப்புக்கொண்டிருந்தார். இதன் மூலம் இந்தியா மிடில் ஆர்டரில் மேலும் ஒரு வீரரை சேர்க்க முடிந்தது. அந்த வகையில் விளையாடிய தினேஷ் மோங்கியா சில போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

கீப்பிங் செய்து அதிக அனுபவம் இல்லாத டிராவிட் உலகக்கோப்பையில் கீப்பிங் செய்ய முன்வந்தது அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. அணியின் தேவையே என் சேவை என்ற டிராவிட்டின் கொள்கை 2003 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பலம் சேர்த்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT