Skip to main content

தோனி கேப்டனானது எப்படி? - ரகசியம் சொல்லும் ஷரத் பவார்!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

sachin dravid dhoni

 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுபவர் மகேந்திர சிங் தோனி. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இவரது தலைமையில் இந்தியா இருபது ஓவர், ஒருநாள் உலகக்கோப்பைகளை வென்றது. தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டபோது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் ஷரத் பவார். அவர் தற்போது தோனி எவ்வாறு இந்திய அணிக்கு கேப்டனானர் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "2007ஆம் ஆண்டில் இந்தியா இங்கிலாந்து சென்றது எனக்கு நினைவிருக்கிறது. அந்த நேரத்தில், ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தார். அப்போது என்னை சந்திக்க வந்த டிராவிட், இந்தியாவை இனி வழிநடத்த விரும்பவில்லை என்றும், கேப்டன் பொறுப்பினால் தனது பேட்டிங் பாதிக்கப்படுவதாகவும், எனவே தன்னை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பின்னர் நான், அணியை வழிநடத்துமாறு சச்சின் டெண்டுல்கரிடம் கேட்டேன், ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார்.

 

இதனையடுத்து நான் சச்சினிடம், ‘நீங்கள் மற்றும் டிராவிட் இருவருமே அணியை வழிநடத்தவில்லை என்றால், யார் நாட்டை வழிநடத்துவார்’ எனக் கேட்டேன். அதனையடுத்து அவர், ‘அணியை வழிநடத்தக்கூடிய இன்னொரு வீரர் இருக்கிறார்’ எனத் தெரிவித்தார். அது வேறுயாருமில்லை தோனிதான். அதன்பிறகு நாங்கள் தோனிக்கு தலைமை பொறுப்பை அளித்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Next Story

சரத்பவார் கட்சிக்கு புதிய தேர்தல் சின்னம் ஒதுக்கீடு!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Allotment of new election symbol for Sarathpawar party

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

மேலும் பாஜக கூட்டணியில் இணைந்த அஜித் பவார் உட்பட 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாஜக கூட்டணி அமைச்சரவையில் இணைந்த அஜித் பவார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவை சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையில் 2 அணிகளாக செயல்படத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, தங்களுக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சி கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார் மற்றும் அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இரு தரப்பு மனுக்களையும் விசாரித்து வந்த தேர்தல் ஆணையம் கடந்த 6 ஆம் தேதி (06-02-24) அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்தது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருந்தது.

அதே சமயம் தேர்தல் ஆணையம் சரத்பவார் அணிக்கு புதிய கட்சி பெயரை தேர்வு செய்ய 3 விருப்பங்களை தாக்கல் செய்யுமாறு கால அவகாசம் வழங்கி இருந்தது. அதன்படி, சரத்பவார் தலைமையிலான அணி சார்பில், ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார்’, ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்ராவ் பவார்’ மற்றும் ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார்’ ஆகிய 3 பெயர்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், அவர்கள் வழங்கிய முதல் பெயரான ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார்’ என்ற பெயரை ஏற்று ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்திர பவார் கட்சியின் தேர்தல் சின்னமாக “மனிதன் கொம்பு இசைக்கருவியை ஊதுவது” (Man blowing Turha) போன்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 27 ஆம் தேதி 6 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில், ‘தேசியவாத காங்கிரஸ் - சரத்சந்தர பவார்’ என்ற பெயருடன் சரத்பவார் அணி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.