ADVERTISEMENT

தன்னை வளர்த்தெடுத்த அணிக்கு கோப்பையை பரிசளித்த நம்பிக்கை நாயகன்...

01:02 PM May 13, 2019 | tarivazhagan

2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளில் எகனாமி ரேட் 10. 2014-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 11 போட்டிகளில் விளையாடிய பும்ரா 5 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். 2015-ல் 4 போட்டிகளில் 3 விக்கெட்கள், எகனாமி ரேட் 12. ஆனால் பும்ராவின் திறமையை அறிந்திருந்த மும்பை அணியும், ரோஹித் சர்மாவும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்த வாய்ப்புகளே இன்று பும்ரா எனும் உலகின் மிகச்சிறந்த பவுலிங் ஆளுமையை இந்திய அணிக்கு அளித்துள்ளது. மேலும் தன்னை வளர்த்தெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வெல்ல அனைத்து விதத்திலும் உதவியுள்ளார் பும்ரா.

மலிங்கா தன்னுடைய பவுலிங்கில் சிறந்து விளங்கிய காலங்களில்கூட, அவரின் டெத் பவுலிங்கில் சில பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தது. சில சமயம் துல்லியமான யார்கர் தவறி, ஓவர் பிட்ச்சாக சிக்சருக்கு சென்றது. ஆனால் பும்ராவின் பவுலிங்கில் சிக்சர்கள் அடிப்பது அரிதிலும் அரிதாக உள்ளது. அந்தளவுக்கு பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார் பும்ரா.

ஐபிஎல் தொடரில் இதுவரை பும்ராவின் 45 பந்துகளை சந்தித்த தோனி 47 ரன்கள் மட்டுமே எடுத்து 3 முறை ஆட்டமிழந்துள்ளார். இதில் 18 டாட் பால்கள். பெஸ்ட் பினிஷர் என்று கருதப்படும் தோனியை 104.4 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே கொண்டு விளையாட வைத்தது பும்ராவின் ஸ்கில்களை காட்டுகிறது. பும்ராவுக்கு எதிராக சற்று தடுமாற்றத்துடன் தான் விளையாடியுள்ளார் தோனி.

ஒரு நாள் போட்டிகளில் 2016 முதல் இன்று வரை கிரிக்கெட் உலகில் பவுலிங்கில் இந்தியா அசத்தி வருவதற்கு முக்கிய பங்காற்றி வருபவர் பும்ரா. இன்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் ரபாடா மற்றும் இவரை போல யாரும் யார்கர் வீச இயலாது. ஓவரின் ஆறு பந்துகளையும் யார்கர் பந்துகளாக வீசுவதில் வல்லவர்.

திணறடிக்கும் பவுன்சர்கள், ஸ்லொவ் பால், பேட்ஸ்மேனின் அசைவை பொறுத்து அவரை நோக்கி பந்து வீசுதல் என உலகின் சிறந்த டெத் பவுலராக வலம் வருகிறார் பும்ரா. வாசிம் அக்ரம், லசித் மலிங்கா வரிசையில் இவரும் யார்கர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்.

கடந்த மூன்று வருடங்களில் ஐ.பி.ல்.-ல் 60 போட்டிகளில் 71 விக்கெட்கள், எகனாமி ரேட் 7 ரன்களை விட குறைவு. ஐ.பி.ல்.-ன் சிறந்த பவுலராக உருவெடுத்துள்ளார். இதுவரை 49 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 85 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார், எகனாமி ரேட் 4.5. சர்வதேச டி20-ல் 42 ஆட்டங்களில் 51 விக்கெட்கள், எகனாமி ரேட் 6.7. இப்படி விக்கெட்கள் வீழ்த்துவதிலும், ரன்களை கட்டுபடுத்துவதிலும் வல்லவரான இவர் இந்திய அணிக்கு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம்.

பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கே அதிக ரசிகர்கள் இருப்பார்கள். இது கிரிக்கெட்டில் இயல்பு. அந்த இயல்பை மாற்றி வருகிறார் பும்ரா. இவருக்கு சர்வதேச அளவில் நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது.

இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறும்போது கேப்டனின் முதல் அழைப்பு பும்ராவுக்கு தான் இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு துணைபுரிந்து வருகிறார். ஒருநாள் போட்டிகளில் 40-50 ஓவர்கள், டி20-ல் 15-20 ஓவர்கள் என இறுதி கட்ட ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி, விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை தடுமாற செய்வதில் இன்றைய காலகட்டத்தில் இவருக்கு இணை யாரும் இல்லை. ஐபிஎல் தொடரில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வெல்ல அசாத்தியத்தை நிகழ்த்திய பும்ரா அந்த அணிக்கு நம்பிக்கை நாயகன். இனி அடுத்து உலககோப்பையில் இந்திய அணிக்கு இதே போல அசத்துவார் என எதிர்பார்க்கலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT