ADVERTISEMENT

உலகக்கோப்பையில் விளையாடப்போகும் இந்திய அணியின் 15 வீரர்களின் ஐ.பி.எல் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருந்தது?

03:44 PM May 14, 2019 | tarivazhagan

இங்கிலாந்திலும், வேல்ஸ் நகரத்திலும் இந்த ஆண்டு மே 30-ம் தேதி முதல் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 நாடுகளும் 150 கிரிக்கெட் வீரர்களும் விளையாடவுள்ளனர். இதில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்) ஷிக்கர் தவான், விஜய் சங்கர், எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஷ்வேந்தர் சாஹல், தினேஷ் கார்த்திக், கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய அணியில் விளையாடவுள்ளனர்.

ADVERTISEMENT


இவர்கள் அனைவருமே தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளுக்காக களமிறங்கி தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பின் மூலம் தங்களின் வலிமையையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களின் ஐ.பி.எல் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருந்தது என்பதைப்பற்றி பார்ப்போம்.

ADVERTISEMENT

விராட் கோலி (கேப்டன்): ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக விளையாடிய விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 464 ரன்களை குவித்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 141.46 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் கோலி இரண்டு அரை சதங்களும் ஒரு சதமும் அடித்துள்ளார்.

ரோஹித் சர்மா (துணை கேப்டன்): மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய ரோஹித் சர்மா தனது தலைமை பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு கோப்பையை பெற்று தந்துள்ளார். இவர் இந்த தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 128.57 ஸ்ட்ரைக் ரேட் கொண்டு 405 ரன்களை எடுத்துள்ளார். இந்த தொடரில் ரோஹித் சர்மா இரண்டு அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிக்கர் தவான்: டெல்லி அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக விளங்கிய ஷிக்கர் தவான் உலகக்கோப்பையிலும் அணிக்கு வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கலாம். இந்த ஐ.பி.எல். தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய ஷிக்கர் தவான் 521 ரன்களை குவித்துள்ளார். இதில் ஐந்து அரை சதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சங்கர்: ஹைதராபாத் அணியில் மிடில் ஆர்டரில் இறங்கிய விஜய் சங்கர் 15 போட்டிகளில் 244 ரன்களை அடித்துள்ளார். இவர் சராசரியாக 40 முதல் 35 ரன்களை எடுத்துள்ளார். இந்த தொடரில் இவரின் ஸ்ட்ரைக் ரேட் 160+ என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.தோனி: சென்னை அணியின் கேப்டனான தோனி இந்த தொடரில் 15 போட்டிகளில் 416 ரன்கள் எடுத்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 134.63. சென்னை அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார். 7 முறை 30+ ரன்கள் அடித்து சென்னை அணியின் வெற்றிக்கும் வழிவகுத்தார். மேலும் இந்த தொடரில் தோனி மூன்று அரை சதம் அடித்துள்ளார். தோனி அடித்த 111 மீட்டர் இமாலய சிக்ஸரே இந்த தொடரில் மிக உயரமான சிக்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது.


கேதர் ஜாதவ்: மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 162 ரன்களை எடுத்துள்ளார். சென்னையில் பஞ்சாப் அணியை சென்னை எதிர்கொண்டபோது ஜடேஜா எரிந்த பந்தை தடுக்க முயன்றார். அப்போது அவரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் கேதர் ஜாதவ் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறுவாரா என்பது கேள்விக்குறியே.

ஹர்திக் பாண்டியா: ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் 191+ ஸ்ட்ரைக் ரேட் கொண்டு 402 ரன்களை எடுத்துள்ளார். மேலும் இவர் 14 விக்கெட்களையும் 11 கேட்ச்களையும் பிடித்துள்ளார். குறிப்பாக இந்த தொடரில் 17 பந்துகளில் அரை சதம் அடித்து இந்த தொடரில் குறைந்த பந்துகளில் அதிவேக அரை சதம் அடித்தவர் என்ற இடத்தையும் பிடித்துள்ளார்.

முகமது ஷமி: வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி பஞ்சாப் அணிக்காக விளையாடி இந்த தொடரில் 19 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவரது எகனாமிக் ரேட் 8.68.

ஜஸ்ப்ரித் பும்ரா: உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரில் ஒருவரான ஜஸ்ப்ரித் பும்ரா இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் பந்து வீச்சாளரில் மிக முக்கியமானவர். நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய இவர் 19 விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக இவரின் எகனாமிக் ரேட் 6.63 என்பது குறிப்பிடத்தக்கது.

புவனேஷ்வர் குமார்: உலகக்கோப்பை தொடரில் அடுத்த முக்கியமான வேகப்பந்து வீச்சாளரில் புவனேஷ்வர் குமார் இருக்கிறார். சன்ரைஸஸ் அணிக்காக விளையாடிய புவனேஷ்வர் குமார் இந்த ஐ.பி.எல் தொடரில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதுவே கடந்த 2017-ம் ஆண்டு தொடரில் 26 விக்கெட்களையும் 2016-ம் ஆண்டு தொடரில் 23 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குல்தீப் யாதவ்: சுழல் பந்து வீச்சீல் மிகமுக்கியமான வீரர் குல்தீப் யாதவ். இவர் இந்த ஐ.பி.எல். தொடரில் 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

யுஷ்வேந்தர் சாஹல்: இவர் இந்த ஐ.பி.எல் தொடரில் 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் ஐ.பி.எல். போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய 14 வது வீரர் சாஹல் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் கார்த்திக்: தினேஷ் கார்த்திக் 50 பந்துகளில் 97 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அடித்தார். இருந்தபோதிலும் இவர் இந்த தொடரில் எடுத்தது 253 ரன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இரண்டு அரை சதம் அடித்துள்ளார்.

கே.எல்.ராகுல்: கே.எல்.ராகுல் இந்த தொடரில் 593 ரன்கள் எடுத்து வார்னருக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். குறிப்பாக இந்த தொடரில் ஆறு அரை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா: ஆல் ரவுண்டரான ரவிந்தர் ஜடேஜா இந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இருந்தபோதிலும் பந்து வீச்சு பிரிவில் இவரின் பங்கு அதிகம். இந்த தொடரில் மொத்தம் 15 விக்கெட்களை எடுத்துள்ளார். குறிப்பாக இவரின் எகானமி ரேட் இவரின் பலத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஐ.பி.எல். தொடரில் 6.35 எகானமி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT