Skip to main content

வெங்கடேஷ் ஐயர் பதிவிட்ட வீடியோ; கடுமையாக விமர்சிக்கும் மக்கள் 

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Venkatesh Iyer Played cricket in kanchipuram temple viral video

 

இந்திய  கிரிக்கெட் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயரை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

 

ஐ.பி.எல். போட்டிகள் மூலம் அறிமுகமான கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர், தனது சிறப்பான ஆட்டங்களால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார். இந்திய அணியில் சில போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல்-லில் மொத்தம் 36 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் 956 ரன்களை எடுத்துள்ளார். இந்த வருடம் நடந்த 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தமிழக வீரரான வெங்கடேஷ் ஐயர் பங்கேற்று விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  ஏழாவது தரவரிசை பெற்று பிளேஆஃப்க்கு  செல்லாமல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. 

 

ஐ.பி.எல். போட்டி முடிந்துள்ள நிலையில், வெங்கடேஷ் ஐயர் தமிழகத்தின் கோவில் நகரமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  பல கோவில்களைச் சுற்றிப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல கோவிலுக்கு நேற்று சென்றுள்ளார். அந்தக் கோவிலில் வேத பாடசாலையும் இயங்கி வருகிறது. 

 

Venkatesh Iyer Played cricket in kanchipuram temple viral video

 

அந்த பாடசாலையில் பயின்று வரும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். மேலும், அந்த மாணவர்களுடன் வெங்கடேஷ் ஐயர் கோவில் வளாகத்திற்குள் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அதை அங்கிருந்த மாணவர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை வெங்கடேஷ் ஐயர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வைரலாகி வருகிறது. அதே சமயம், கோவிலுக்குள் வெங்கடேஷ் ஐயர் வேத பாடசாலை மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதை பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதே போன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தி.மு.க. வேட்பாளார் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு. எனவே ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். தி.மு.க. தொண்டர்கள் பொறுப்பேற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஜுன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் 100 ஆவது பிறந்த நாள் முடிந்து 101 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். நாம் அவருக்கு கொடுக்க கூடிய பரிசாக 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று, நாம் கை காட்டுபவரே அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனப் பேசினார்.

Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

முன்னதாக காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில், “பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி இல்லத்தில் இருந்து ‘மாநில உரிமைகளை மீட்க தலைவரின் குரல்’ 2 ஆம் கட்ட நாடாளுமன்ற பிரச்சாரப் பயணத்தை துவக்குவதில் பெருமை கொள்கிறோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக. தலைவர் தலைமையில் திராவிட மாடல் அரசு வெல்லட்டும். பாசிசம் ஒழியட்டும். BELONG TO THE DRAVIDIAN STOCK” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாநில சுயாட்சியின் உரிமைக்குரல் நம் அண்ணாவின் மண்ணில், பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஐ.பி.எல். இறுதிப் போட்டி; வெளியான முக்கிய தகவல்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
IPL Finals; Important information released

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதாவது முதலில் ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதன்படி நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட, கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மே 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக மே 21ஆம் தேதி முதல் தகுதிச் சுற்று அகமதாபாத்திலும், மே 24 ஆம் தேதி இரண்டாம் தகுதிச் சுற்று சென்னையிலும் நடைபெற உள்ளது. இதற்கிடையே எலிமினேட்டர் சுற்று மே 22ஆம் தேதி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது. ஏற்கெனவே சென்னையில் கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றிருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.