ADVERTISEMENT

16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டரான தமிழர்

12:03 PM Mar 11, 2019 | tarivazhagan

ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான ஃபொடோர்சக்கை வீழ்த்தி தரவரிசைப் பட்டியலில் 2500 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார் 16 வயதான ஈரோட்டை சேர்ந்த இனியன் பன்னீர்செல்வம். இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான முழுத்தகுதிகளைப் பெற்றார். இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இனியன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் இனியனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 1987-ஆம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஒருவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவாரா என்று நினைத்தோம். ஆனால் தற்போது மாதம் ஒரு கிராண்ட் மாஸ்டர் உருவாகிக்கொண்டே உள்ளார்கள் என்று ஆனந்த் கூறினார்.

இனியனுக்கு ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பாக டிசம்பர் 2015-ஆம் ஆண்டு முதல் ஸ்பான்சர் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் சுகாதார மேலாண்மை, தண்ணீர் மேலாண்மை மற்றும் பல சமூக சேவைகளை செய்து வருகிறது ஒளிரும் ஈரோடு அமைப்பு. அதே நேரத்தில் இந்த அமைப்பு ஈரோட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க ஊக்குவித்து வருகிறது.

ஒளிரும் ஈரோடு அமைப்பின் ஆதரவு மூலம் வெளிநாட்டில் கிட்டத்தட்ட 45 சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டிகளில் விளையாட முடிந்தது என்று இனியன் தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக விஸ்வேஸ்வரன், இனியனுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இவரின் பயிற்சி தான் இனியனுக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல பெரிதும் உதவியாக இருந்தது. இனியன் ஈரோட்டிலுள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்துகொண்டு உள்ளார்.

இனியனின் தந்தை நெடுஞ்சாலைத் துறையில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இனியன் தனது 5 வயதிலிருந்து செஸ் விளையாடி வருகிறார். 6 வயது இருக்கும்போது திருமுருகன் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வந்தார். பின்னர் சக்திவேல் என்பவரிடம் பயிற்சி பெற்றார். இனியனின் வீட்டிலிருந்து ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து பயிற்சி பெற்று வந்தார். வாரத்திற்கு மூன்று முறை பயணம் செய்து சக்திவேல் அவர்களிடம் பயிற்சி பெற்றார். சக்திவேல் பயிற்சியின் கீழ் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் அண்டர்-8 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இனியனின் குடும்பம் பல சோதனை காலங்களில் இனியனுக்கு உறுதுணையாக இருந்தது. 2010-ஆம் ஆண்டு விசா தொடர்பாக ஒரு பிரச்சனையை எதிர்கொண்டார். டிராவல் ஏஜென்ட்டின் தவறான கருத்துப் பரிமாற்றத்தால் இனியன் டெல்லியில் உள்ள கிரேக்க தூதரகத்தில் நடந்த நேர்காணலை தவறவிட்டார். ஆனால் அதிர்ஷ்டம் அவரது பக்கத்தில் இருந்தது. பல வீரர்களின் விசா நிராகரிக்கப்பட்டது. அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) மேற்கொண்ட முயற்சியில் எட்டு மணி நேரத்திற்கு முன்னர் இனியனுக்கு விசா கிடைத்தது. கிரீஸில் நடைபெற்ற அந்த தொடரில் வெண்கலம் வென்றார்.

2016-ஆம் ஆண்டு லோர்கா ஓபன் செஸ் தொடரில் இனியனின் லேப்டாப் திருடப்பட்டது. லேப்டாப்பில் இனியனின் பிளஸ், மைனஸ், 7 வயதிலிருந்து இனியன் பற்றிய தகவல்கள், மற்ற வீரர்களின் பிளஸ், மைனஸ், பயிற்சியாளர் விஸ்வேஸ்வரனின் வழிகாட்டுதல்கள் போன்றவை இருந்தது. ஆனால் அந்த இழப்பையும் தாண்டி அந்த தொடரில் 2590 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்தியாவில் 1987-ஆம் ஆண்டு வரை செஸ் போட்டிகளில் ஒருவர்கூட கிராண்ட் மாஸ்டர் இல்லை. 1988-ல் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார். இன்று 61 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள். ரஷ்யர்கள் மட்டுமே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வந்த செஸ் போட்டிகளில், இந்தியாவை உலக அரங்கில் தனிமுத்திரை படைக்க வைத்தவர் விஸ்வநாதன் ஆனந்த்.

செஸ் விளையாட்டில் இந்திய அணி ஆண்கள் பிரிவில் நான்காவது இடத்திலும், பெண்கள் பிரிவில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 1991-ல் உலகின் சிறந்த டாப் 10 செஸ் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஆனந்த், இன்றும் அந்த பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT