Thank you to the Government of Tamil Nadu Gukesh 

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

Advertisment

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார்.

Advertisment

அதே சமயம் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கனடாவில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர் குகேஷூக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தொடரில் முதல் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. அதாவது கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர் உதவியாக இருந்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.

Advertisment

முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.