ADVERTISEMENT

திருப்பியடிக்க கற்றுத் தந்தார்... தலைவரான 'தாதா'!

06:52 PM Dec 31, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

"இந்திய அணி முன்பே திறமையான அணி. ஆனால், அமைதியான அணி. அவர்களுடன் ஆடுவது எப்போதும் இனிமையான அனுபவம். ஆனால், அவர் தலைமையேற்ற பிறகு இந்திய அணியோடு விளையாடுவது என்பது போர்க்களத்தில் போரிடுவது போன்று மாறியது" இங்கிலாந்து அணியின் கேப்டன் நசீர் ஹுசைன் கங்குலியைப் பற்றி கூறிய வார்த்தைகள் இவை.

அமைதியாக இருந்த இந்திய அணியை எரிமலை ஆக்கிய பெருமை கங்குலியையே சேரும். அறிமுக டெஸ்ட் போட்டியிலே லார்ட்ஸ் மைதானத்தில் சதத்தோடு தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியவர் கங்குலி. இந்தியாவுக்காக அதிக சர்வதேச ரன்கள் அடித்தவர்களில் நான்காவது இடம், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இடது கை பேட்ஸ்மேன்கள் வரிசையில் மூன்றாவது இடம், சச்சின், ரோஹித்திற்குப் பிறகு உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு அதிகம் சதம் அடித்தவர், உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு அதிக ரன்கள் அடித்த கேப்டன் என ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் கங்குலி அதிகம் கொண்டாடப்படுவது அவரது கேப்டன்ஷிப்பிற்காகத்தான்.

சச்சின் கிரிக்கெட்டின் ஜெண்டில்மேன்களில் ஒருவர். அவர் களத்தில் கோவப்பட்டு சண்டையிடுவது அரிது. அணியின் தோல்விகளால் சச்சின் கேப்டன் பதவியிலிருந்து விலக, கங்குலி அணிக்கு தலைமை ஏற்றார். அவரின் ஆக்ரோஷம் அணிவீரர்களின் எண்ணத்தில் ஏறியது. அதுவரை அமைதியான இந்திய கேப்டன்களை மட்டுமே பாத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு, இலங்கை வீரரை மைதானத்தில் எச்சரித்தது, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டிவ் வாகை டாஸ் போட காத்திருக்க வைத்தது, இந்தியாவில் தொடரை வென்றபிறகு மைதானத்தில் சட்டையைக் கழட்டிச் சுழற்றிய இங்கிலாந்து அணிக்கு பதிலடியாக நாட்வெஸ்ட் சீரிஸ்க்கு பின்பு லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சட்டையைக் கழட்டிச் சுழற்றியது என ஆக்ரோஷமான இந்திய கேப்டனை பிடித்திருந்தது. இந்திய அணித் தலைவர், ரசிகர்களுக்குத் தாதாவனார்.

ஆட்டுமந்தைகளை வழிநடத்தும் சிங்கங்களை விட, சிங்கத்தின் தலைமையில் இருக்கும் ஆட்டுமந்தை வலிமையானது என்பார்கள். ஏனென்றால், தலைவரின் குணத்தையே படைகளும் பிரதிபலிக்கும். சிங்கத்தின் தலைமையிலான ஆடுகளுக்கே வலிமை அதிகம் என்றால், கங்குலி எனும் சிங்கத்தின் தலைமையில் மற்ற இளம் சிங்கங்களும் இணைந்தால்? வெற்றிகள் குவியும்தானே? அதுதான் நடந்தது. இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்றால் அது கங்குலிதான். இந்திய அணி அவர் தலைமையில் வெளிநாட்டு மண்ணில் 11 வெற்றிகளைப் பெற்றுள்ளது. விராட் கோலி எட்டு வெற்றிகளோடு அடுத்த இடத்தில் இருக்கிறார். "நாங்கள் எழுந்துநின்று திருப்பி திருப்பி அடிக்க கற்றிருக்கிறோம், இதை ஆரம்பித்து வைத்தது தாதாவின் அணி, நாங்கள் அதை அப்படியே பின்பற்றுகிறோம்" தற்போதைய இந்திய அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்தையும் அதிரடி வெற்றிகளையும் பற்றி பேசுகையில் கோலி சொன்ன வார்த்தைகள் இவை. இதன் மூலமே தாதாவின் தாக்கத்தை உணரலாம். 2000-2001 சூதாட்டப் புயலுக்கு எந்த அணியாக இருந்தாலும் நிலைகுலைந்து போயிருக்கும். ஆனால், அந்த அணியை உலகக்கோப்பை இறுதிவரை அழைத்துச் சென்றார் தாதா. கங்குலி ஐசிசி கோப்பையை வென்றதில்லை என்பார்கள். ஆனால், ஜெயித்திருக்கவேண்டிய சாம்பியன்ஸ் ட்ரோஃபியை மழையின் காரணமாக இலங்கையோடு பகிர்ந்துகொள்ள வேண்டியதாகிவிட்டது என்பதை மறந்துபோனார்கள்.

கங்குலி கேப்டனாக போட்டிகளை மட்டும் வெல்லவில்லை, எதிர்காலத்திற்கான அணியையும் உருவாக்கினார். மிடில் ஆர்டரில் ஆடிய சேவாக்கை ஒப்பனராக அனுப்ப, அவர் ஒப்பனர்களின் இலக்கணத்தையே மாற்றினார். கோலி, அஸ்வின், ஜடேஜா எனப் பல இளம் வீரர்களுக்கு துவக்ககாலச் சறுக்கல்களில் எண்ணிலடங்கா வாய்ப்புகளை வழங்கிய தோனிக்கு, அவரது தொடக்க கால சொதப்பல்களில் வாய்ப்பு வழங்கியதோடு, அவரை இந்திய அணியின் கேப்டனாகவும் மாற்றினார் கங்குலி. கங்குலியைப் போல் என்னிடம் நம்பிக்கை வைத்த கேப்டன் யாருமில்லை என்றார் யுவராஜ். ஹர்பஜன் சிங்கை போராடி அணிக்குள் அழைத்து வந்தார். கங்குலி அணியில் சிங்கக் குட்டிகளாய் இருந்தவர்கள் கங்குலி வைத்த நம்பிக்கையால் சிங்கங்களாகச் சீறி 'இருபது ஓவர் உலகக்கோப்பை', இருபத்தெட்டு வருடத்திற்குப் பிறகு 'ஒருநாள் உலகக் கோப்பை'களை வெல்ல காரணமாயிருந்தார்கள். கங்குலி உலகக்கோப்பையை வென்றதில்லை. ஆனால், இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றியில் அவருக்கும் பங்கு இருக்கிறது. அதை யாராலும் மறுக்க முடியாது.


'தாதா' இன்று இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர். பகல்-இரவு ஆட்டங்களுக்கு கோலியை வினாடிகளில் சம்மதிக்க வைத்தது. பல தடைகளைக் கடந்தும் ஐபிஎல் போட்டிகளை நடத்தியது என இன்றும் அதிரடி காட்டுகிறார் தாதா. பெண்கள் கிரிக்கெட்டை முன்னேற்றவும் நடவடிக்கைகள் தொடக்கியுள்ளார். பிசிசிஐ -க்கு சரியான தலைமை இல்லாமையால் இந்திய கிரிக்கெட் அணியும், நிர்வாகமும் சிக்கல்களையும் அவப்பெயரையும் சந்தித்தது. அப்போது கங்குலி தலைவராக வாய்ப்பு என்றதும் ரசிகர்களை உற்சாகம் தொற்றியது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அவர் நடவடிக்கைகள் இருக்க, உற்சாகம் இரட்டிப்பானது. கங்குலியின் தலைவர் பதவி குறித்து அடுத்தாண்டு நீதிமன்றம் முடிவெடுக்க இருக்கிறது. தலைவராக, வங்கப்புலியின் பாய்ச்சல் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதுவே, இந்திய அணியின் பாய்ச்சலைத் தீவிரப்படுத்தும் என்பதை மறுக்க இயலாது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT