Skip to main content

பேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண்! - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்!

 

zaheer khan

 

இந்திய கிரிக்கெட் அணி எப்போதும் பேட்டிங்கிற்குப் பெயர்போனது. அன்று சச்சின், டிராவிட், ஷேவாக், கங்குலி இன்று கோலி, ரோகித், தவான் என இந்தியாவில் எப்போதும் பேட்டிங் தூண்களுக்குப் பஞ்சமில்லை. இதேபோல இன்று பவுலிங்கிலும் பும்ரா, ஷமி போன்றோர் தூண்களாக வந்துவிட்டனர். ஆனால், அன்று இந்தியப் பந்துவீச்சின் தூணாக நின்றவர் ஜாகிர் கான்.

 

14 வருடங்கள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆடியிருக்கிறார் என்பதே மிகப்பெரும் சாதனை. விக்கெட் எடுக்கவில்லை என்றால், அணியில் இடம்  இருக்காது. இந்திய மைதானங்களோ வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது. அப்படியும் ஒருவர் 14 ஆண்டுகள் ஆடியிருக்கிறார். அதிலும், அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக ஆடியிருக்கிறார் என்பது சாதாரணமான ஒன்று அல்ல. இந்திய மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுவது என்பது நமது பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்புப் போல அரிதிலும் அரிதான ஒரு நிகழ்வு. அப்படிப்பட்ட இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சே அதிகம் ஒத்துழைக்கும்போது ஸ்விங் செய்யும் திறனையும் துல்லியமாக லைன் & லென்த்தில் பந்து வீசும் திறமையை வைத்தே ஏதிரணிகளைத் திணறடித்திருக்கிறார் என்றால் அது அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

 

இடதுகை பேட்ஸ்மேன்கள் என்றாலே ஜாகிர்கான் - ஜாலிகான் ஆகிவிடுவார். சவுத் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் ஹைடன், இலங்கையின் ஜெயசூர்யா இவர்களைப் பார்த்தாலே மற்ற பவுலர்களுக்கு 'ஆத்தி இவனா'  என்று மனதிற்குள் குரல் கேட்கும். ஆனால், ஜாகிருக்கோ மனதிற்குள் ஆட்டோக்கார தம்பியை பார்த்த வடிவேலுபோல் 'தேல்பத்ரிசிங்' என்ற வசனம் தான் கேட்கும். அந்த அளவிற்கு இவர்கள் ஒவ்வொருவரையும் பத்துக்கும் மேற்பட்ட முறை ஆட்டமிழக்கச் செய்து அசரடித்துள்ளார்.

 

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்திய அணி அயல்நாட்டில் வெற்றிகளைக் குவி்க்காததற்கு முக்கியக் காரணம் பவுலிங்கில் ஒரு சரியான கூட்டணி இல்லாததே. ஆசியாவிற்கு வெளியே  200 விக்கெட்டுகளை கும்ப்ளே  எடுத்திருந்தாலும் சுழற்பந்து எடுபடாத வெளிநாட்டு ஆடுகளங்களில் ஜாகீர்தான் ஓரே நம்பிக்கை. வெளிநாடுகளில் நடந்த தொடர்களில் ஜாகிர் 54 போட்டிகளில் 207 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெளிநாட்டு மண்ணில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் இஷாந்த் சர்மா  இருக்கிறார். அவர் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த வெஸ்ட்இண்டீஸ் தொடரின் போதுதான் அந்தச் சாதனையைப் படைத்தார். இஷாந்த் சர்மா 2007-இல் அறிமுகமானவர். அவரும் சில காலம் முன்புவரை அணிக்கு உள்ளே வெளியே என்று இருந்தவர்தான். இந்தச் சாதனை பட்டியலில் அவருக்கு அடுத்த இடத்தில் கபில்தேவ், மற்றும் ஜாகிர் கான் இருக்கிறார்கள். இதிலிருந்தே தெரியும் ஜாகிரின் சமகாலத்தில் அவருக்குத் துணையாக இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்பது. இன்று பும்ரா-இஷாந்த்- ஷமி கூட்டணி உலகின் சிறந்த பவுலிங் கூட்டணியாகத் திகழ்கிறது. ஒருவேளை ஜாகிருக்கும் அவ்வாறு ஒரு துணை  கிடைத்திருந்தால், இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் இன்னும் பல வெற்றிகளைக் குவித்திருக்கும்.

 

90'ஸ் கிட்ஸ்கள் பார்த்து வளர்ந்த இந்திய அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் சச்சின் என்றால் பவுலிங்கில் ஜாகிர். இது உலகக் கோப்பை போட்டியிலும் தொடர்ந்தது. 2003 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் சச்சின் என்றால், அந்த  உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர் ஜாகிர்கான். அதேபோல, 2011 உலகக் கோப்பையில் எதிரணிகளை திணறடிக்க knucle ball-ஐ கையிலெடுத்தார் ஜாகிர். அந்த பந்துவீச்சு முறையை ஜாகிர் முன்பே கண்டுபிடித்து பயிற்சி எடுத்திருந்தாலும், அதை எந்தத் தொடரிலும் பயன்படுத்தாமல் இருந்தார். அதை யாரும் எதிர்பாராத ஒரு யுக்தியாக உலகக் கோப்பை தொடரில் பயன்படுத்தினார். அதன்மூலம் விக்கெட்களையும் அள்ளினார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நன்றாக ஆடிய இயான் பெல்லை knuckle ball மூலம் ஆட்டமிழக்கச் செய்தது மட்டுமில்லாமல் சதமடித்த ஸ்டிராஸையும் ஆட்டமிழக்கச் செய்து ஆட்டத்தை ட்ரா செய்ய உதவினார். அந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு மிக முக்கியக் காரணம் ஜாகிர்.

 

zaheer khan

 

உலகக் கோப்பை மட்டுமல்ல இந்தியாவின் பல புகழ் வாய்ந்த வெற்றிகளுக்கு காரணமாக இருந்தார் ஜாகிர். 2002 நாட்வெஸ்ட் சீரிஸ் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. அந்த தொடரை வென்ற பிறகு, கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் தனது ஜெர்சியை கழற்றி சுழற்றியது இன்றும் ரசிகர்கள் நெஞ்சை விட்டு நீங்காதது. அந்த தொடரில், அதிக விக்கெட் எடுத்தவரும் ஜாகிர் கான் தான். இங்கிலாந்தில் நடக்கும் ஒரு தொடரில் 'இது உன் இடம், உன் ஆளுங்க, எனக்குப் பயம் இல்ல' என்பது போல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை விட அதிக விக்கெட்டுகள் எடுத்தாரென்றால் எவ்வளவு சிறப்பாகப் பந்து வீசியிருப்பார் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

 

cnc

 

ஜாகிர் கான் பல போட்டிகளை இந்தியாவுக்கு வென்றிருக்கிறார். ஆனால் அதை விடப் பெரிய சாதனை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இணையாக ரசிகர்களின் மனதை வென்றதுதான். பிரட் லீ, ஸ்டெயின் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் ஆக்ஷனையே  இமிடேட் செய்து கொண்டிருந்த இளைஞர்களையும் சிறுவர்களையும் தனது ஆக்ஷனையும் இமிடேட் செய்ய வைத்தார் என்றால், எந்த அளவிற்கு இந்திய அணியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பதை அறிந்து கொள்ளலாம். தோனி ஒருமுறை ஜாகிரை இந்தியப் பந்துவீச்சு துறையின் சச்சின் என்றார். அது மறுக்கமுடியாத உண்மை. இந்திய வேகப்பந்து வீச்சை தனது தோளில் சுமந்தவர் ஜாகிர். இந்திய சினிமாவில் கிங் கான் ஷாருக்கான் என்றால் கிரிக்கெட்டை பொறுத்தவரை கிங் கான் ஜாகிர்கான் தான்.