rahul dravid

இன்றைய இருபது ஓவர் காலத்தில், ஒரு பேட்ஸ்மேன் இரண்டு பந்துகளுக்கு டிஃபன்ஸ் ஆடினாலே ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்துவிடுவார்கள். இரண்டு ஓவர்களுக்கு மேல் டெஸ்ட் மேட்சில் டிஃபன்ஸ் ஆடினாலும் சிலசமயம் கோபம் வந்துவிடுகிறது.

Advertisment

உதாரணமாக கடந்த இந்தியா-நியூஸிலாந்து தொடரில் புஜாரா அதிகமாக டாட் பால்களை ஆடி ஆட்டமிழக்க, அதிகமான டாட் பால்களை ஆடியதால் தேவையில்லாத பிரஷர் உருவாகிவிட்டது எனவும், தவறான பந்துகளை தண்டிக்க தவறியதால் ரன்களும் வரவில்லை எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. கேப்டன் கோலியே அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். அதற்கு முன்பு ஆஸ்திரேலிய தொடரின்போது புஜாரா மிகவும் பொறுமையாக ஆடுவது இந்திய அணியின் வெற்றிக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என ரிக்கி பாண்டிங் விமர்சித்தார். இதெல்லாம் ஒருவகையில் உண்மையும்கூட. களத்தில் நிற்க நிற்க (spending time on the field ) ரன்கள் வரும் என்பது கிரிக்கெட் ஜாம்பவான்கள் அடிக்கடி கூறும் தத்துவம். தவறான பந்துகள் கண்டிப்பாக வரும், அதை ரன்களாக மாற்ற வேண்டும் என்பது அந்தத் தத்துவத்தின் விளக்கம். புஜாரா அந்த விளக்கத்தை உணராததால் விமர்சனக்கனைகளால் தாக்கப்பட்டார். ஆனால், அந்தத் தத்துவத்தை முற்றிலும் உணர்ந்த ஞானி ஒருவர் இருந்தார்.

Advertisment

அவர், ஓவர்களுக்கு மேல் ஓவர்களாக டாட் பால் ஆடினாலும் அவரை கொண்டாடித் தீர்த்தார்களே தவிர யாரும் விமர்சித்ததில்லை, ஏன்? தவறான பந்துகளை பவுண்டரிகளாக மாற்றுவது மட்டுமில்லை. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் பொறுமையின் சிகரமாக நின்று அணியைக் கரைசேர்க்க முடியும். போரின்போது, பீரங்கிக் குண்டுகளைத் தாங்கும்கோட்டைச் சுவர்,உள்ளே உள்ளவர்களைக் காப்பாற்றுவது போல, இந்திய அணியைத் தகர்க்க விக்கெட்டுகளைக் குறிவைத்து வீசப்படும் பந்துகளைத் தடுத்து நிறுத்தி அணியைக் காப்பாற்றும் பெருஞ்சுவர் அவர். அந்த இந்தியப் பெருஞ்சுவரின் பெயர் 'ராகுல் டிராவிட்'.

"நான் கணிதத்தில் சுமார். எனவே காமர்ஸ் (commerce) படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். இரண்டாமாண்டின் போது ஒருவேளை கிரிக்கெட் எனக்கு ஒத்துவரவில்லையென்றால், சி.ஏ (chartered accountant) படிக்கலாம் என நினைத்தேன். ஆனால், முதல் புத்தகத்தை திறந்ததும் நான் கிரிக்கெட் ஆடுவதற்கான எனது முயற்சியை இரட்டிப்பாக்கிவிட்டேன்" என்று ஒருமுறை குறிப்பிட்டார் டிராவிட். அவர் இரட்டிப்பாக்கினாரோ இல்லையோ அவரின் விக்கெட்டை வீழ்த்த பந்து வீச்சாளர்கள் இரட்டிப்பாக உழைக்க வேண்டியதிருந்தது. "முதல் பதினைந்து நிமிடத்தில் ராகுலின் விக்கெட்டை எடுக்க முயற்சியுங்கள் இல்லையென்றால் அவரை தவிர்த்து மற்ற விக்கெட்டுகளை எடுக்க முயற்சியுங்கள்" இது ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டிவ் வாஹ் பந்துவீச்சாளர்களுக்கு கூறிய அறிவுரை. டிராவிட் என்னும் பெருஞ்சுவர் களத்தில் தனது கால்களை அழுத்தமாக ஊன்றி நிற்க ஆரம்பித்துவிட்டால் அந்த சுவற்றை அசைத்துப் பார்ப்பது என்ன, ஒரு சிறிய கீறலைகூட இடமுடியாது. பந்துகளைப் பறக்கவிட்டு வாணவேடிக்கைகள் காட்டுவதற்கு இலக்கணம் வகுத்த வீரர்கள் பலர் இருக்கலாம். ஆனால், அழகான தடுப்பாட்டத்திற்கு இலக்கணமாய்த் திகழும் வெகுசிலரில் டிராவிட்டும் ஒருவர். அவரின் தடுப்பரணை உடைப்பது மிகப்பெரிய பந்து வீச்சாளர்களுக்கும் பெரிய விஷயம்தான். அவரின் டிஃபன்ஸை உடைப்பது எந்தளவிற்கு கடினமென்றால் "டிராவிட் எனும் கோட்டைச்சுவரை உடைக்க பன்னிரண்டு பீரங்கிகளை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்யவேண்டும்" என உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்வார்னேபுகழும் அளவிற்குக் கடினம்.

Advertisment

rahul dravid

ராகுல் டிராவிட் மெதுவாக ஆடுபவர் என்னும் பிம்பம் ஒன்று இருக்கிறது. 'புலிக்குப் பாய மட்டுமே தெரியும், வேட்டையாடத் தெரியாது' எனக் கூறுவது போன்றது அது. சூழ்நிலைக்கேற்ப வேகமாக அவரால் ரன்களைக் குவிக்க முடியும். இந்தியாவிற்காக ஒரு நாள் போட்டிகளில், இரண்டாவது வேகமான அரைசதம் அடித்துள்ளவர் டிராவிட். தனது ஒரே சர்வதேச இருபது ஓவர் போட்டியில் ஹாட்ரிக் சிஸ்சர்களைப் பறக்கவிட்டுள்ளார் டிராவிட். யூனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் "அவரால் என்னைப்போல் அதிரடியாக ஆட முடியும், ஆனால், என்னால் அவரைப்போல் நிதானமாக ஆடமுடியாது" எனச் சொல்லுமளவிற்கு டிராவிட்டால் வேகமாகவும் ரன்களைக் குவிக்க முடியும்.

இந்திய அணியைக் காப்பாற்றும் சுவராய் நின்ற டிராவிட், ஓய்விற்குப் பிறகு எதிர்காலத்தை வழிநடத்தும் பயிற்சிகளமாய் மாறினார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றது. இதற்கு முன்பு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் பங்கேற்றவர்களில், சீனியர் இந்திய அணிக்கு ஆடியவர்கள், ஆடுபவர்கள் குறைவு. ஆனால், டிராவிட் பயிற்சி அளித்த அணிகளில் இருந்து ரிஷப் பந்த், ப்ரித்வி ஷா, சுப்மன் கில் ஆகியோர் ஏற்கனவே இந்திய அணிக்கு ஆடிய நிலையில், இஷான் கிஷான், ரவி பிஷ்னோய், நாகர்கோட்டி, கார்த்திக் தியாகி எனப் பலர் இந்திய அணியின் கதவுகளை ஓங்கி தட்டிக்கொண்டிருக்கிறார்கள். தற்போது ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவரின் பயிற்சியில் இந்திய 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றுசாதித்ததைப்போல்போல், இந்திய அணியும் சாதிக்க வேண்டும் என்பதும், வீரராகசீனியர்அணிகளுக்கானஉலககோப்யைவெல்லாத அவர், பயிற்சியாளராகஉலகக்கோப்பையைவெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

லக்ஷ்மன் என்றைக்கும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான்! ஏன் தெரியுமா..?- கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #3