ADVERTISEMENT

"கண்ணன் தேவன் டீப்பொடி"... சி.எஸ்.கே-வின் கிண்டல் ட்வீட்!

06:35 PM Nov 07, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெங்களூரு அணி ரசிகர்களின் வீடியோவை கிண்டல் செய்யும் விதமாக சென்னை அணி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளது.

கடந்த பல சீசன்களாக பெங்களூரு அணியின் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த அவ்வணி ரசிகர்களுக்கு, நடப்பு ஐ.பி.எல் தொடர் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. தொடரின் துவக்கம் முதலே பெங்களூரு அணி அதிரடியான வெற்றிகள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முன்னேறியது. வழக்கமாக தரவரிசைப்பட்டியலில் பின்தங்கியிருக்கும் தங்கள் அணியை, முன்வரிசையில் பார்த்தது அவ்வணி ரசிகர்களுக்கு எந்தளவிற்குப் பரவசத்தைக் கொடுத்தது என்பதை, அவர்களது சமூக வலைதளப் பதிவுகளிலேயே பார்க்க முடிந்தது. பெங்களூரு அணி ரசிகர்கள், பிற அணி ரசிகர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவதுதான் வழக்கம். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அனைத்தும் தலைகீழாக இருந்தது.

குறிப்பாக, தரவரிசைப்பட்டியலில் பின்தங்கியிருந்த சென்னை அணியையும், அவ்வணி ரசிகர்களையும் மீம்ஸ்களால் கலாய்த்துத் தள்ளினர். பெங்களூரு அணியின் பெண் ரசிகர்கள் குழுவாகத் திரண்டு நின்று, 'கண்ணன் தேவன் டீப்பொடி' என்று பாடிய ஒருபாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனையடுத்து, இதை மையப்படுத்தியே பல மீம்ஸ்கள் வலம்வந்தன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெளியேற்றும் சுற்றில் பெங்களூரு அணி, ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. ஒவ்வொரு வருட ஐ.பி.எல் தொடக்கத்திலும், 'ஈ சாலா கப் நமதே' என்று தங்களுக்குத் தாங்களே ஆருடம் கூறிக்கொள்ளும் அவ்வணி ரசிகர்களுக்கு இந்த வருடமும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 'ஆடிய ஆட்டம் என்ன.. பேசிய பேச்சு என்ன..' என்கிற தொனியில் நேற்று இரவு முதலே பெங்களூரு அணி ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கின.

இந்நிலையில், சென்னை நிர்வாகம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பெங்களூரு ரசிகர்கள் வெளிட்ட வீடியோவை மறைமுகமாகக் கிண்டல் செய்யும் வகையில் ஒரு பதிவினைப் பதிவிட்டுள்ளது. அதில், சென்னை அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பயிற்சியில் ஈடுபடும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து 'புடி...புடி..' எனப் பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவிற்குக் கீழும் பெங்களூரு அணி ரசிகர்களைக் கிண்டல் செய்யும் வேலையை சென்னை அணி ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT