ADVERTISEMENT

காற்றின் குழந்தை; நீங்கள் ஒரு ரத்தினம் - பாராட்டு மழையில் இந்தியாவின் வேக மன்னன்!

01:05 PM Apr 03, 2024 | arunv

இந்தியாவின் வேகப்பந்து வீச்சின் புதிய முகமாக உருவெடுத்துள்ளார் லக்னோ அணியின் வீரரான மயங்க் யாதவ். அறிமுகமான இரண்டு போட்டிகளிலேயே ஒட்டுமொத்த கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பிரபலமடைந்துள்ளார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் புகழும் அளவுக்கு என்ன செய்தார் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

ADVERTISEMENT

டெல்லியைச் சேர்ந்த 21 வயதே ஆன மயங்க் யாதவ் ஒரே ஒரு முதல் தர போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். List A கிரிக்கெட்டில் 17 ஒரு நாள் போட்டிகளிலும், 12 டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 2023 ஆம் வருடம் ஐபிஎல் ஏலத்தில் 20 லட்சத்திற்கு லக்னோ அணியால் எடுக்கப்பட்டார். ஆனால், காயம் காரணமாக அந்த சீசனில் விளையாடவில்லை.

ADVERTISEMENT

இதையடுத்து இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார் மயங்க் யாதவ். அறிமுக ஆட்டத்திலேயே அசத்தினார். 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய வீரர்களான பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜித்தேஷ் ஷர்மா விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். தான் வீசிய அனைத்து பந்துகளும் 140கி.மீ வேகத்துக்கு குறையாமல் வீசுவதால், முதல் ஆட்டத்திலேயே கவனம் பெற்றார். சீரான வேகத்தில் வீசுவதால் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

இந்நிலையில், ஐபிஎல் 2024இன் 15 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, லக்னோ அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும், தயால், டாப்லி, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 19.4 ஓவர்களில் பெங்களூரு அணி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்ததன் மூலம் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவர் எடுத்த இந்த மூன்று விக்கெட்டுகளும், அவரின் 156.7 கி.மீ வேகமும் தான் கிரிக்கெட் உலகத்தில் பேசுபொருளாகி உள்ளது. நேற்றைய பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரால் வீசப்பட்ட இரண்டாவது ஓவரின் முதல் பந்து 156.7 கி.மீ வேகத்தில் வீசப்பட்டது. இதுவே இந்த 2024 சீசனில் தற்போது வரை மிகச்சிறந்த வேகமாகும். இவருக்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவின் பர்கர் 153 கி.மீ வேகத்தில் வீசியுள்ளார். தற்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிவேகத்தில் வீசிய இரண்டாவது வீரராக சாதனை படைத்துள்ளார். உம்ரான் மாலிக் 157 கி.மீ வேகத்தில் முதலிடத்தில் உள்ளார்.

இவரின் 156.7 கி.மீ வேகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அதிலும் முக்கியமாக வேகப்பந்து வீச்சின் ஜாம்பவனான வெஸ்ட் இண்டீஸின் இயான் பிஷப் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மயங்க் பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “இந்த மயங்க் யாதவ் காற்றின் குழந்தை போல பந்து வீசுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கவின் முன்னாள் வேகப்பந்து நட்சத்திரம் ஸ்டெயினின் பதிவில் “இது ஒரு தீவிரமான வேகம்” என குறிப்பிட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் பதிவில் “என்ன ஒரு வேகம்” எனவும், புகழ்பெற்ற வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே “ நீங்கள் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு மயங்க் யாதவ் பந்து வீசுவதைப் பாருங்கள். லக்னோ, நீங்கள் ஒரு ரத்தினத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இருபது ஆண்டுகளில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இந்தியாவின் முனாஃப் பட்டேலுக்கு இப்படி ஒரு வரவேற்பு இருந்தது. பின்பு வருண் ஆரோன்,பும்ரா,உம்ரான் மாலிக் ஆகியோருக்கு இப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது. ஆனால், பும்ரா தவிர்த்து ஆரோனும், உம்ரானும் வேகத்தில் செலுத்திய கவனத்தை துல்லியத்தில், மயங்க் அளவுக்கு செலுத்தவில்லை. அதனால் அவர்கள் விக்கெட் எடுக்கத் தடுமாறினர். ஆனால், மயங்க் வேகம் மற்றும் துல்லியமான பந்துவீச்சின் மூலம் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

பும்ரா,ஷமி,சிராஜுக்குப் பிறகு பெரிதாக வேகப்பந்து வீச்சில் யாரும் இந்த அளவுக்கு ஈர்க்கவில்லை. பேட்டிங்கில், கோலிக்கு பிறகு, கில், யசஸ்வி, இஷான், ரிங்கு, திலக் வர்மா என முக்கிய வீரர்களாக பலர் உருவாகி வருகிறார்கள். தொடர்ந்து சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர். ஆனால், பந்து வீச்சில் பும்ரா அளவுக்கு யாரும் ஈர்க்கவில்லை. பும்ராவுக்கு அடுத்து யார் முக்கிய வீரராக இருக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் பேசி வந்த நிலையில், இந்தியாவின் வருங்கால வேகப்பந்து வீச்சு கூட்டணியில் இவர் ஒரு முக்கிய வீரராக இருப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT