ADVERTISEMENT

"விக்கெட் என்பது நாம் எடுப்பது, அவர்களாக கொடுப்பது அல்ல..." - வார்னே கூறிய கோல்டன் வார்த்தை!!!

12:49 PM Mar 05, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

"டெஸ்ட் போட்டியோ, ஒருநாள் போட்டியோ ஒரு கிரிக்கெட் வீரரை அவரின் சராசரி ரன்னுக்குள் (avearge) அவுட்டாக்க வேண்டும். அதைத் தாண்டி ஒரு பவுலர் ஒரு பேட்ஸ்மென்-ஐ அவுட்டாக்கினால் அது அவர் பெருமைப்பட கூடிய விஷயமல்ல, மாறாக பேட்ஸ்மென் கொடுத்த விக்கெட்டாகவே அதனை பார்க்க வேண்டும்" சரியாக 29 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரராக இருந்த ஷேன் வார்னே கூறிய வார்த்தைக்கள் இவை. இதை யாரும் வெறும் வார்த்தைகளாக மட்டுமே கடந்துவிட முடியாது. அவரையும், அவரது ஆட்டத்தையும் உற்று கவனித்திருந்தால் அவர் தான் கூறியபடி கடைசிவரை வாழ்ந்துள்ளது நமக்கு புலப்படும்.

கிட்டத்தட்ட 1001 கிரிக்கெட் வீரர்களை தன்னுடைய மாயாஜால சுழலில் சிக்கவைத்து பெவிலியனுக்கு அனுப்பிய சாதனைக்கு சொந்தக்காரரான அவர், சில விக்கெட்டுக்களை எடுக்கும் போது அவர் எவ்வித சந்தோஷத்தையும் முகத்தில் காட்டாமல், நேராக அடுத்த பந்தை வீச ஆயத்தமாவார். ஆம், அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அந்த வார்த்தையை தன்னுடைய இறுதி காலம் வரை கடைப்பிடித்தார். விக்கெட் என்பது நாம் எடுப்பது, அவர்களாக கொடுப்பது அல்ல, என்பதைத் தனக்கு தானே வரையறையாக வைத்துக்கொண்டு கிரிக்கெட்டை தன்னளவில் வாழ்ந்து முடித்த அவரை, இயற்கை தன் சுழலில் சிக்க வைத்து நம்மை விட்டு அவரை பிரித்துச் சென்றுள்ளது.

90 வருட கிரிக்கெட் வரலாறு பிராட்மேனில் தொடங்கி இன்றைய ஸ்டுவர்ட் பிராட் வரை எத்தனையோ கிரிக்கெட் வீரர்களை பார்த்துள்ளது, பார்க்க இருக்கிறது. ஆனால் அவர்களை விட ஷேன் வார்னே சற்று வித்தியாசமானவர், விசித்திரமானவர். "தன்னுடைய ஓவரில் அதிக ரன்கள் கொடுக்காமல் எப்படியாவது மேட்ஸ்மென்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பவுலர்கள் துடித்துக்கொண்டிருந்த அந்த கால கட்டத்தில், எப்படியாவது இவரின் ஓவர் முடிந்துவிடாதா? என்று பேட்ஸ்மேன்களை ஏங்க வைத்தவர்தான் இவர். இதை அவர் காலத்தில் விளையாடிய யாரும் மறக்கமாட்டார்கள், மறுக்கவும் மாட்டார்கள் என்பது மட்டும் நிஜம். கிரிக்கெட்டில் இதுவரை எத்தனையோ சாதனைகள் நடத்தப்பட்டுள்ளது, இதில் பல்வேறு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது, மேலும் முறியடிக்கப்படாத சாதனைகளும் இன்னும் சில காலத்தில் முறியடிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் இருக்கிறது.


பிராட்மேன் கிரிக்கெட் ஆட்டத்தை 1940-களின் இறுதியில் முடித்துக்கொண்ட போது உலகம் இன்னொரு கிரிக்கெட் வீரரை இதுபோல் இனி காணாது என்று கிரிக்கெட் வல்லூநர்கள் கூறினார்கள். ஆனால், சரியாக 50 ஆண்டுகளுக்கு பிறகு அதே பிராட்மேன் சச்சினை கூப்பிட்டு, நீங்கள் விளையாடுவது நான் விளையாடுவது போன்றே இருக்கிறது எனக்கூறி உச்சிமுகர்ந்து வாழ்த்தி, அவர் (பிராட்மேன்) விளையாடிய கிரிக்கெட் மட்டையை சச்சினுக்கு பரிசளித்தார். அதே போன்று பிராட்மேன் ஓய்வு பெற்று 60 ஆண்டுகளுக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் தனது ஓய்வை அறிவித்தார். இந்திய உள்ளிட்ட கிரிக்கெட் உலகம் இப்படியொரு வீரரை இனி எப்படி காண்போம் என்று வாயாரக் கூறியது. ஆனால் டெண்டுகரின் ஆட்டத்தை மேலும் நவீனப்படுத்தி புதிய பரிமாணங்களில் கிரிக்கெட்டை அடுத்து கட்டத்துக்கு எடுத்து சென்றார்கள் டோனியும், கோலியும். முறியடிக்கவே முடியாத பல சச்சினின் சாதனைகளை சத்தமே இல்லாமல் முறியடித்து வருகிறார் கோலி.

ஆனால், ஷேன் வார்னேவின் பல சாதனைகள் இன்றளவும் யாராலும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறது. ஷேன் வார்னே 92ம் ஆண்டில் தொடங்கி 16 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 16 ஆண்டுகள் ஆகிறது. பிராட்மேன், சச்சின், கோலி என உலகின் ஆகச்சிறந்த பேட்ஸ்மென்களை வரிசைப்படுத்த முடிந்த நம்மால், ஒரு வீரரை கூட ஷேன் வார்னே முன்னால் நிற்கவைக்க முடியாது என்பதே ஷேன் வார்னே செய்த வரலாற்று சாதனை. 20 மற்றும் 21 என இரண்டு நூற்றாண்டுளிலும் சிறிது காலம் கிரிக்கெட் விளையாடிய அவரை, ஓவர்டேக் செய்யும் வகையில் ஒரு புவுலர் கிரிக்கெட் உலகத்துக்கு இன்றளவும் கிடைக்கவில்லை என்பதே ஷேன் வார்னேவின் அசைக்க முடியாத வரலாற்று சாதனை.

குறிப்பாக 90களின் ஆரம்பத்தில் தென்ஆப்பரிக்க வீரர் கேரி கிரிஸ்டனை அவர் அவுட்டாக்கியதை யாராவது இன்று பார்த்தால் கூட ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைவார்கள். வார்னேவால் பிச்சுக்கு வெளியே வீசப்பட்டு கண்டிப்பாக ஒய்டு பாலாக போகிறது என்று எல்லோரும் கணித்திருந்த நிலையில், ஆப் ஸ்டெம்பை தட்டி தூக்கி நான் கணிப்புக்கு அப்பாற்பட்டவன் என்றுகூறி காலரை தூக்கிக்காட்டினார் ஷேன் வார்னே! பேட்ஸ்மேன்கள் யோசித்து முடிப்பதற்கு ஆட்டத்தை காலி செய்து பெவிலியனுக்கு அனுப்பு வித்தையைத் 'தன்வசம்' வைத்திருந்தார். இவரை விட ஒரு சிறந்த ஸ்பின்னரை கிரிக்கெட் உலகத்தால் இன்றளவும் கண்டறிய முடியவில்லை என்பதே வார்னே யார் என்பதை கிரிக்கெட் உலகம் புரிந்துகொள்ள போதுமானது. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பார்கள், ஆனால் கிரிக்கெட்டில் வார்னே இடத்தை? போய் வாருங்கள் வார்னே!!


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT