ADVERTISEMENT

கம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம்! - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்! 

05:47 PM Oct 28, 2020 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

தனது சொந்த ஊரை பிரிந்து இன்னொரு நகரத்திலோ, நாட்டிலோ பணி நிமித்தமாக வாழ்பவர்கள் ஒவ்வொருவருமே தனது ஊரை மிஸ் பண்ணுவார்கள். அப்படி மிஸ் பண்றதுக்கான காரணங்கள் என்னென்ன? ஊர்... ஊரிலிருக்கும் உறவுகள்... அடுத்ததா, ஊருக்கே உரிய உணவுகள். உண்மைதான், இப்போதும் ஊருக்கு சென்று வரும் ஒருவர் தன் ஊரின் ஸ்பெஷல் உணவு/இனிப்பை அலுவலக நண்பர்களுக்கு வாங்கி வர வேண்டுமென்பது எல்லா அலுவலகங்களிலும் எழுதப்படாத விதி. உணவு சம்மந்தமாக இன்னும் நூறு யூ-ட்யூப் சேனல்கள் தொடங்கப்பட்டாலும் மில்லியன் வ்யூஸ் கொடுக்க ரெடியாக இருப்பவர்கள் நம்மவர்கள். இப்படி, உணவோடு உணர்வுபூர்வமான உறவு கொண்ட பெருமைமிகு 'ஃபுட்டி'க்கள் (foodies) நம் மக்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, வரப்பிரசாதமாக ஒரு வெப்சைட் இருக்கிறது. 'நேட்டிவ் ஸ்பெஷல்' (www.nativespecial.com) தான் அது. உள்ளே சென்று பார்த்தால், சுரக்கும் எச்சிலில் லேப்-டாப்/மொபைல் ஃபோன் நனைந்துவிடும், உருவாகும் கூஸ்பம்ப்ஸில் உடம்பு சிலிர்க்கும். திருநெல்வேலி அல்வா, திருவில்லிப்புத்தூர் பால்கோவா, கருப்பட்டி மைசூர்பாக், கரூர் தேங்காய் மிட்டாய்... என நீண்டுகொண்டே போகிறது ஸ்வீட் லிஸ்ட். நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் ஊர் பண்டத்தை அதே ருசியோடு, அதே தயாரிப்பாளர்களிடம் வாங்கி அனுப்புகிறார்கள். எவ்வளவு பெரிய சேவை இது? எங்கு தொடங்கியது இது? தொடங்கியவர்களை தேடிப்பிடித்துப் பேசினோம்.

ADVERTISEMENT

நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் ஊர் பண்டத்தை அதே ருசியோடு, அதே பாரம்பரிய மணத்துடன் ஐந்தே நாட்களில் உங்கள் வசிப்பிடத்தில் ஹோம் டெலிவரி செய்கிறார்கள். எவ்வளவு பெரிய அசாத்தியச் சேவை சங்கிலி இது? எப்படி சாத்தியமாயிற்று? எங்கு தொடங்கியது இது? தொடங்கியவர்களை தேடிப்பிடித்துப் பேசினோம்.


"என்ஜினியர் டிகிரி, சாஃப்ட்வேர் வேலை, அமெரிக்க பயணம் என்ற ரெகுலர் நடுத்தர குடும்ப இளைஞர்களின் போக்கில் பயணித்த இளைஞர்கள் என்றாலும் நம் மொழி மற்றும் மண் சார்ந்த சிந்தனையில் இயல்பாகவே அதிக நாட்டம் கொண்டிருந்தோம். தூர தேச வாழ்வியல் நமது ஊரின் சிறப்புகளை நிறைய உணர்த்தியிருந்த காலகட்டம். அங்கு அலுவலகத்தில் அனைத்து நாட்டுக்காரர்களும் அவரவர் ஊர் சென்று திரும்பும் பொழுது அவர்களுது ஊரின் உணவுப் பண்டங்களைக் கொணர்ந்து தருவது வழக்கம். அது போல் ஒரு நாள் இத்தாலியில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட பதார்த்தம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. சரி நாமும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று ருசித்துப் பார்த்தால் அது நம்ம ஊர் தேங்கா மிட்டாய்தான். அந்த குறிப்பிட்ட தருணத்தில் சிறு புள்ளியாக துவங்கிய சிந்தனைதான் பிறகு இந்தியா திரும்பியதும் நேட்டிவ் ஸ்பெஷல் என முழுமைப் படுத்தப்பட்டு நண்பர்களுடன் சேர்ந்து செயல்படத் துவங்கியது.

வணிக ரீதியான தொழில் சார்ந்த சிந்தனை அடிப்படை இல்லாமல் நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களுக்கு ஒரு பொருளாதார அடிப்படையினை உருவாக்க வேண்டும் அதனைச் சார்ந்து இருக்கும் நம்ம ஊர் கிராமத்து உற்பத்தியாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அது அமைய வேண்டும் என்ற சிந்தனையில் செயல்படத் துவங்கியதால் லாபத்தினை பெரியதாகக் கொள்ளாமல் வருமானம் இல்லாத போதிலும் தொடர்ந்து இதில் செயல்படத் துவங்கினோம். வேலை செய்து கொண்டே இதனைச் செய்ததால் வார இறுதி நாட்களில் தமிழகம் முழுக்க பயணிப்பது, மாலை நேரங்களில் வரும் ஆர்டர்களை அனுப்புவது என மூன்று ஆண்டுகள் எந்த ஒரு பொழுது போக்கும் இன்றி இதற்காகவே இயங்கினோம். வருமானம் இல்லை என்றாலும் இப்படி ஒரு பிளாட்பார்மினை நிறுவுவது நம்ம ஊர் பாரம்பரிய உற்பத்தியாளர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கும் என்ற சிந்தனை ஒன்று மட்டுமே எம்மை உந்தித் தள்ளியது" என தங்களது அனுபவத்தினை சிரித்த முகத்துடன் பகிர்ந்தனர் அதன் இயக்குனர்கள்.

பிறர் எண்ணத் துணியாததையும், எண்ண மட்டுமே துணிவதையும் செய்பவர்கள்தானே சாதிக்கிறார்கள்? 2015 வரை இப்படித்தான் அவர்களின் தொழில்முயற்சி தொடர்ந்தது. ஏற்கனவே வாங்கிய வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் ஆடர் செய்தது, இவர்களுக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது.

இன்னும் இதனை வீரியமாக முன்னெடுக்க 'இதை முழு நேரத் தொழிலாக செய்தால் என்ன?' என்ற கேள்வி எழும்ப அதற்கான முயற்சிகளைத் துவங்கினர். "மெல்ல குடும்பத்தாருடன் இதனைப் பகிரத் துவங்கினோம் இப்பொருளினை ஆன்லைனில் விற்க முடியும் என்பதை யாரும் நம்பவில்லை. அவர்களுக்கு அது புதிதாக இருந்தது. ஆனாலும் நாங்கள் ஏற்கனவே பார்ட்-டைமாக இதை செய்யும்போது ஒரு சின்ன நம்பிக்கையை உருவாக்கியிருந்ததால் யாரும் தடுக்கவோ எதிர்க்கவோயில்லை."

மெல்ல 'நேட்டிவ் ஸ்பெஷல்'லில் விற்கப்படும் பண்டங்களின் எண்ணிக்கை வகைகளை அதிகரித்தனர். ஒவ்வொரு பண்டத்தையும் சேர்க்கும் முன் அவர்கள் செய்யும் களப்பணி ஆச்சரியப்பட வைக்கிறது. "மணப்பாறை முறுக்கு வாங்க மணப்பாறை போய் இறங்கினோம். முறுக்கு செய்றவங்க 200 பேருக்கு மேல இருந்தாங்க. அதுல நாம எதிர்பாக்குற தரத்தை யார் தருவாங்கன்னு தேர்ந்தெடுக்குறதுதான் நம்ம பிஸினஸோட முக்கிய பகுதி. ஒவ்வொரு ஐட்டம் புதுசா சேக்குறதுக்கு முன்னாடி நிறைய வேலை பாக்குறோம். அதனால் குவாலிட்டியில் எந்தக் குறையும் வராமல் பார்த்துக்க முடியுது" என்று ஊர் ஊராக சுற்றி உணவு வகைகளை சுவைத்த கதை சொல்கிறார்கள்.

"நிறைய டிராவல் பண்ணோம். எல்லா ஊரும் சுத்தினோம்... ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சுவை... கிடைச்ச பொருளை, இவ்வளவு தூரம் கொண்டு சேர்க்கணும்னா, அதை அவர்களது வழக்கத்தை விட அதிகமான தரத்தில் செய்யணும். அதுக்கு நிறைய பேர் ஒத்துக்க மாட்டாங்க. 'இவ்வளவு மெனக்கிட்டு தயார் செய்வது கஷ்டமாச்சே?'னு சிலர் தயங்குவாங்க. சிலர் ரொம்ப ஆர்வமாகி அவுங்களே ஆராய்ச்சி பண்ணி பல வகைகள் அனுப்புவாங்க. நாங்க எதிர்பார்க்குற உயர்ந்த தரத்துக்கு ஒத்துக்கொள்பவர்களைத்தான் செலக்ட் பண்ணுறோம். கன்னியாகுமரில சுட்ட முந்திரின்னு ஒரு ஐட்டம் இருக்கு, வெள்ளியணைல அதிரசம். மணல்மேடு முறுக்குன்னு ஒரு ஐட்டம். ஒரு காலத்துல கிராமம் முழுக்க அதுதான் தொழில். ஆனா, நாங்க போனப்போ ஒரே ஒருத்தர்தான் அதை செஞ்சார். அவர்கிட்ட வயசான நாலுபேர்தான் வந்து செஞ்சு கொடுத்தாங்க. முதலில் பயந்தார். நாங்க நம்பிக்கை கொடுத்து செய்யச் சொன்னோம். இப்போ இன்னும் கொஞ்ச பேர் வந்து செய்றாங்க. அழிவின் விளிம்பில் இருந்த, தன்னை அடுத்த காலத்துக்கு நகர்த்திக்கொள்ள முடியாத பல உணவுப்பொருட்கள் போயிருச்சு. அதுல சில விஷயங்களை நாங்க மீட்டோம் என்பது பெரிய திருப்தி" என்று அவர்கள் சொல்லும்போது நாம் அறியாத இந்தத் தொழிலின் பரிமாணம் விரிந்தது.

வெளிநாடு வரை சுவையைக் கொண்டு சேர்ப்பது சரி... தரத்தையும் சிந்தாமல் சிதறாமல் சென்றடைவதையும் எப்படி உறுதி செய்கிறார்கள்?

"பேக்கிங்ல அமெரிக்காவின் ஸ்டாண்டர்டில் அதிக பட்ச தரத்தை கடைபிடிக்குறோம், அதே தரத்தில்தான் இந்தியாவுக்கும் பண்றோம். ஆரம்பத்தில் முறுக்கு உடைந்து தூள் தூளாகப் போய் சேர்ந்திருக்கு. பஞ்சாமிர்தம் கீழே ஊத்தியிருக்கு... இப்படி சில தவறுகள். ஒரு முறை மும்பைல இருந்து ஒரு ஆடர். தனது கணவரின் பிறந்தநாளுக்காக விருந்தினர்களுக்குப் பஞ்சாமிர்தம் கொடுக்கவேண்டுமென்று ஆசை ஆசையாக ஆடர் பண்ணாங்க ஒரு அம்மா. ஆனா, எதிர்பாராவிதமா பஞ்சாமிர்தம் பேக்கிங் உடைஞ்சு ஊத்திருச்சு. முதலில் மனைவி கூப்பிட்டு புகார் செஞ்சாங்க, ரொம்ப கோபமாகப் பேசுனாங்க. எங்களுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. ஆனா பின்னாடியே கணவர் கால் பண்ணி, 'இது இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம். நீங்க ஆரம்ப கட்டத்தில் இருக்கீங்கன்னு தெரியும். அதுனால, என் மனைவி சொன்னதை வச்சு எதுவும் முடிவுக்கு வந்துறாதீங்க. இன்னும் நல்லா பண்ணுங்க..." என்று கூறி ஊக்கப்படுத்தினார். எங்களுக்கே அது புதுசா இருந்தது. அதன் பிறகு பேக்கிங்கில் சின்ன தவறு கூட நடக்கக்கூடாது என்பதில் மிக கவனமா இருக்கோம்.

ஒவ்வொரு முறையும் கஸ்டமர்கள் தந்த ஃபீட்பேக்தான் எங்களை நகர்த்தியது. UKயில் இருந்து ஒரு பெண்மணி பேசுனாங்க. 'இரவு 12 மணி, லேட் ஆய்டுச்சுன்னு தெரியும், இருந்தாலும் நாளைக்கு தள்ளிப்போட வேண்டாமென்று கூப்பிட்டேன். 30 வருஷமா நாங்க இங்க செட்டிலாகிட்டோம். இதை கண்ல பார்த்ததே பெரிய விஷயம். இளந்தவடை என்று ஒரு தின்பண்டம் இருக்கிறதென்பதே என் பொண்ணுக்கு தெரியாம போயிடுமோன்னு நெனச்சேன். உங்க மூலமா எங்க பொண்ணு அதை சுவைச்சுட்டா'ன்னு ரொம்ப நெகிழ்ச்சியா பேசுனாங்க. இப்படி பல அனுபவங்கள்" என்று ஸ்வீட்க்கொரு செண்டிமெண்ட் சைட் இருப்பதை நமக்கு உணர்த்தினார் பாஸ்கரன்.

பேசப்பேச நமக்கு நாவூறியது. 'நேட்டிவ் ஸ்பெஷல்.காம்'மின் டாப் - 5 உணவுப்பண்டங்கள் என்னவென்று கேட்டோம். "திருநெல்வேலி அல்வா, திருவில்லிப்புத்தூர் பால்கோவா இரண்டும் எப்போதும் டாப். கருப்பட்டி மைசூர்பாக்ன்னு ஒரு ஐட்டம் எமது முயற்சியில் நமது பாரம்பரிய கருப்பட்டியினைக் கொண்டு ஒரிஜினலாக கொண்டு வந்தோம், எல்லோருக்குமே பிடித்த ஐட்டம் இது. சின்ன வெங்காய முறுக்கு... பீட்பேக், விற்பனை இரண்டிலும் டாப். இவை தவிர அவ்வப்போது ஒவ்வொரு பண்டம் முன்னிலையில் இருக்கும்" என்று பெஸ்ட் செல்லர் லிஸ்ட் சொன்னார்.

கடைசியாக ஒரு கேள்வி மனதில் இருந்தது. ஐடி வேலையை விட்டுட்டு பிசினஸ் பண்றேன், விவசாயம் பண்றேன் என்பது ஒரு ஃபேஷன் மாதிரி ஆகிவிட்டது. உண்மையில் எப்படி உணர்கிறார்கள் இவர்கள்? கேட்டுவிட்டோம்... "எமது ஐடி நண்பர்களில் எம்மை விட அதிகம் சம்பாரிப்பவர்களும் இருக்காங்க, இன்னும் இந்த அளவுக்கு வராதவங்களும் இருக்காங்க. ஆனால், ஒரு விஷயம். எங்கள் நண்பர்களை சந்திக்கும்போது, அவர்களிடம் பேசும்போது, 'ஸ்ட்ரெஸ்' என்ற வார்த்தையை அடிக்கடி கூறாக கேள்விப்படுகிறோம். ஆனால், எங்களுக்கு அந்த வார்த்தை பொருந்தாது. ஞாயிற்றுக்கிழமையிலும் கூட அலுவலகம் வந்துவிடுவோம். வருமானம் குறைவுதான் என்றாலும் நம் சமூகம் சார்ந்த நலன் பயக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் மிகுந்த ஊக்கத்துடன் செயல்படுகிறோம்" என்றனர் திருப்தியுடன். எல்லோரும் இப்படி முயற்சியில் ஈடுபட முடியாது. ஒவ்வொருவர் வாழ்க்கையும் வெவ்வேறு. நாம என்ன செய்யலாம்? 'நேட்டிவ் ஸ்பெஷல்.காம்'மில் (www.nativespecial.com) ஆடர் செய்து 'ஸ்வீட் சாப்பிடுவோம், ஸ்ட்ரெஸ்ஸை மறப்போம்'. நம்மிடம் மிகுந்த உற்சாகத்துடன் பகிர்ந்த ’நேட்டிவ் ஸ்பெஷல்’ இயக்குனர்கள் பார்த்திபன், பாஸ்கரன் மற்றும் செல்வகுமார் ஆகியோரை வாழ்த்துவோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT