ADVERTISEMENT

'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன? #1

10:01 PM Jul 28, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாணவர்களின் வாழ்வில் முக்கியத் திருப்புமுனையான காலக்கட்டம் என்றால், அது பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான காலமாகத்தான் இருக்க முடியும். மாணவர்கள், தங்களின் எதிர்காலத்தை அடுத்து எப்படி அமைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் இடம் இதுதான். சொல்லப்போனால் பிளஸ்-1 இல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கும்போதே அவர்கள் கிட்டத்தட்ட தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டதாகச் சொல்லலாம். எனினும், தேர்வு முடிவுகளைப் பொருத்தே, அவர்களின் இலக்கு இன்னும் துல்லியமாகத் தீர்மானிக்கப்படுகிறது.


அடுத்து என்ன மாதிரியான படிப்புகளைப் படிக்கலாம், எங்கே படிக்கலாம், அதற்கான வழிமுறைகள், வேலைவாய்ப்புகள் குறித்து நக்கீரன் இணையத்தில் (www.nakkheeran.in) தொடர்ந்து காணலாம்.


நாம் ஆரம்பப்பள்ளியில் படிக்கும்போதே, பெரிய ஆளாக ஆன பின்னர் என்னவாகப் போகிறாய் எனக் கேட்டால் பட்டென்று, 'டாக்டராகப் போகிறேன்' என்றுதான் சொல்லி இருப்போம். அந்தளவுக்கு, மருத்துவர் என்றால் ஓர் உன்னதமான தொழில் என்ற எண்ணம் சமூகத்தில் நிலவுகிறது.


தொழில்படிப்புகள் என்றாலே மருத்துவமும், பொறியியலும் என்ற நிலைதான் இன்றைக்கும் இருக்கிறது. முதலில் மருத்துவம் மற்றும் அத்துறை சார்ந்த படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதைக் காண்போம்.


எம்.பி.பி.எஸ்:


பிளஸ்-2வில் கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் அல்லது தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியில் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரலாம். மொத்தம் 5 1/2 ஆண்டுகால படிப்பு இது. இதில், ஆறு மாத கால சி.ஆர்.ஆர்.ஐ. எனப்படும் நேரடி மருத்துவப் பயிற்சியும் அடங்கும்.


தேர்வு முறை:


எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (பல் மருத்துவம்) ஆகிய படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம். நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் எந்த ஒரு மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்து பயிலலாம். கட்-ஆப் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.


அதேநேரம், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் உள்ளிட்ட நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர அவை தனியாகவும் நுழைவுத்தேர்வை நடத்துகின்றன. இப்போதுவரை மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் சேர தனியாகவும் ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

ஜிப்மர் நுழைவுத்தேர்வு விவரங்களை www.jipmer.edu.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


எய்ம்ஸ் நடத்தும் நுழைவுத்தேர்வு விவர அறிவிப்புகளை www.aiimsexams.org என்ற இணையத்தளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். புது டெல்லி, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்பூர், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.


புனேயில் உள்ள இந்திய ராணுவத்தின் கீழ் இயங்கும் ஏ.எப்.எம்.சி. மருத்துவக் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கும் தனியாக நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இதுகுறித்த அறிவிப்புகளை www.afmc.nic.in என்ற இணையத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.


சண்டிகரில் உள்ள மத்திய அரசின் மருத்துவக் கல்லூரியிலும் பயிலலாம். அங்கு சேர்வதற்கு நீட் தேர்வு மட்டுமே போதுமானது. அக்கல்லூரி பற்றிய விவரங்களை www.gmch.in என்ற இணையத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.


முன்பே சொன்னதுபோல, தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் தேர்வு மட்டுமே போதுமானது. நீட் தேர்வு முறை அமல்படுத்துவதற்கு முன்பு வரை பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அளவிலான கலந்தாய்வு மூலம் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. சேர்க்கை தொடர்பான விவரங்களை www.health.org.in என்ற இணையத்தளம் மூலம் அறியலாம்.


எம்.பி.பி.எஸ். படிப்பவர்கள் அடுத்து முதுநிலையில் எம்.டி., எம்.எஸ். படிப்புகளை படிக்கலாம். அதேபோல பி.டி.எஸ். முடிப்பவர்கள் எம்.டி.எஸ். படிப்பில் சேரலாம். இப்படிப்பை முடிப்பவர்கள் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், அரசு பொது சுகாதாரத்துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறலாம். தவிர, சொந்தமாக மருத்துவமனைகள் தொடங்கலாம். மேலும், மருத்துவ ஆராய்ச்சிகளிலும் ஈடுபடலாம்.


இப்போதைய நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 21 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 26 தனியார் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. அடுத்த ஆண்டில் மேலும் அரசுத்தரப்பில் மேலும் 11 மருத்துவக்கல்லூரிகள் முழுமையாகச் செயல்படத் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கலாம்.


இக்கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள், தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஒதுக்கப்படும். எஞ்சியுள்ள 85 சதவீத இடங்களில் அந்தந்த மாநில அரசுகள் உரிய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளப்படும். தமிழக அரசைப் பொருத்தவரை நடப்புக் கல்வி ஆண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பல் மருத்துவம்:


பி.டி.எஸ்., எனப்படும் இளநிலை பல் மருத்துவப் படிப்பிற்கும் நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.


பிளஸ்-2வில் உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தவர்கள் பி.டி.எஸ். படிப்பில் சேரலாம். படிப்புக்காலம் 5 ஆண்டுகள்.


மத்திய அரசின் கீழ் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், டாக்டர் ஹர்வன்ஸ் சிங் ஜட்ஜ் பல் மருத்துவப் பல்கலையிலும் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இப்பல்கலைக்கழகம் குறித்த விவரங்களை www.gmch.gov.in என்ற இணையத்தளம் மூலம் அறியலாம்.


தமிழகத்தில், சென்னையில் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும், மாநிலம் முழுவதும் 25 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளும் செயல்படுகின்றன.


அரசு பல் மருத்துவக்கல்லூரிகளுக்கான தேர்வு முறை உள்ளிட்ட இதர விவரங்களை www.tnhealth.org என்ற இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.


பி.டி.எஸ்., படிப்பு முடித்த மருத்துவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல் மருத்துவராகப் பணியாற்றலாம். மேலும், எம்.டி.எஸ்., உள்ளிட்ட உயர்மருத்துவம் படிக்கலாம். சொந்தமாக பல் மருத்துவமனையும் தொடங்க முடியும். இப்படிப்பிலும், மொத்த மாணவர் சேர்க்கையில் தேசிய அளவிலான ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

தொடரும்...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT