Skip to main content

மருத்துவம் படிக்க சீட் வேண்டுமா...? - லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

Man arrested for swindling Rs 8 lakh for buying seats study MBBS in Erode

 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஜாகிர் உசேன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் டெய்லர் கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவரது மகளுக்கு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில சீட் வாங்க முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த கடலூரைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர், ஜாகிர் உசேனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் உங்கள் மகளுக்கு சீட் வாங்கித் தருவதாக அவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

 

இதை ஜாகிர் உசேன் உண்மை என்று நம்பியுள்ளார். பின்னர் சந்திரமோகன் அவரிடம் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்க பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். இவ்வாறாக ஜாகிர் உசேனிடமிருந்து சந்திரமோகன் பல தவணைகளாக மொத்தம் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் பெற்றுள்ளார்‌. ஆனால் அவர் கூறியது போன்று மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி கொடுக்கவில்லை. தொடர்ந்து ஜாகிர் உசேன் சந்திரமோகனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது போனை எடுக்காமல் பல நாட்கள் இருந்துள்ளார். இதனை அடுத்து போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜாகிர் உசேன்,  ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

 

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கருங்கல்பாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்து வந்த சந்திரமோகனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் சந்திரமோகன் சென்னையில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், சென்னை சென்று சந்திரமோகனைக் கைது செய்து ஈரோட்டிற்கு அழைத்து வந்தனர். மேலும் சந்திரமோகனிடம் நடத்திய விசாரணையில்,  அவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்து வருவதாகவும், அதன் மூலம் ஜாகிர் உசேனின் எண்ணை அறிந்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் மோசடிக்குப் பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்‌. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜானகிராமன் கணேசன், கௌசல்யா ஆகியோரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மீது கடலூரில் பண மோசடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.