ADVERTISEMENT

மாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு!#2

07:10 PM Jul 30, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிளஸ்-2 முடிச்சாச்சு... அடுத்து என்ன படிக்கலாம் என்ற தடுமாற்றத்தில் இருப்போருக்கு 'நக்கீரன் இணையம்' வழங்கும் வழிகாட்டி தொடர் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். கோர் ஏரியா என்று சொல்லக்கூடிய முதன்மைப் பாடங்களைத் தவிர்த்த பிற வாய்ப்புள்ள பாடப்பிரிவுகள் குறித்தும், சந்தையில் அதற்கான தேவை குறித்தும் இங்கே விவரித்து வருகிறோம்.


கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புக்கும் மிகப்பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாகி இருக்கிறது. பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவை எடுத்த மாணவர்கள் பெரும்பாலும் பட்டப்படிப்பில் பி.காம்., பி.பி.எம்., பி.பி.ஏ., அல்லது பி.ஏ., பொருளாதாரம், கூட்டுறவு, வரலாறு இப்படி தெரிவு செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.


கலைப்பிரிவு மாணவர்கள் பலர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு என்றில்லாமல், பட்டய கணக்காளர் படிப்பைப் பற்றியோ, அதன் தனித்தன்மைகள் குறித்தோ தெரிந்து கொள்ள முனைவதில்லை. உண்மையில் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் என தொழில்சார் படிப்புகளைப் போல பட்டய கணக்காளர் படிப்பும் எப்போதும் தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும்.


பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவை படித்த மாணவர்கள் பி.காம்., பி.பி.ஏ., என்று இல்லாமல் பட்டயக் கணக்காளர் எனப்படும் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் என்ற தொழில்படிப்பில் சேர்ந்து படிக்க முடியும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாகவே ஆடிட்டிங் படிப்பில் சேரலாம். அதைப்பற்றி இங்கு காண்போம்.


கேள்வி: சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் (சிஏ) படிப்பில் சேர கல்வித்தகுதிகள் என்னென்ன?


சி.ஏ., படிப்பில் சேர பிளஸ்&2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் சி.ஏ., படிப்பில் நேரடியாகச் சேரலாம்.


கேள்வி: பிளஸ்-2 முடித்தவர்கள் சி.ஏ., படிப்பில் எப்படிச் சேர முடியும்?


பலரும் கருதுவதுபோல் பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவு முடித்தவர்கள்தான் சி.ஏ., படிப்பில் சேர முடியும் என்பது இல்லை. எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்தவர்களும் சி.ஏ. படிக்கலாம். பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சி.ஏ. படிப்பில் சேர்வதற்கு முன்பாக, 'சி.ஏ. பவுண்டேஷன்' படிப்பில் சேர வேண்டும். படிப்புக்காலம் ஓராண்டு ஆகும். நான்கு தாள்கள் கொண்டது. தேர்ச்சி பெற 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து, 'சி.ஏ. இன்டர்மீடியேட்' பாடப்பிரிவில் சேரலாம்.


கேள்வி: பட்டப்படிப்பு முடித்தவர்கள் சி.ஏ. படிப்பில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன?


பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சி.ஏ. படிப்புக் காலம் என்பது 4 ஆண்டுகளைக் கொண்டதாகும். பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., போன்ற வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் சி.ஏ. பவுண்டேஷன் பாடப்பிரிவில் சேராமலேயே, நேரடியாக சி.ஏ. இன்டர்மீடியேட் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். இது ஓராண்டு படிப்பு ஆகும்.


இதில் குரூப்-1, குரூப்-2 என இரு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 பாடங்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு குரூப்பில் உள்ள பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே, அடுத்து நேரடியாக யாராவது ஒரு ஆடிட்டரிடம் மூன்று ஆண்டுகள் நேரடிப் பயிற்சிக்குச் சேர்ந்து பயில்வது கட்டாயம்.


அங்கு இரண்டரை ஆண்டுகள் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் சி.ஏ. ஃபைனல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சி.ஏ. ஃபைனலிலும் குரூப்-1, குரூப்-2 என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் தேர்ச்சி பெற்ற பிறகு ஆடிட்டராக முறையாகப் பதிவு செய்து கொள்ளலாம்.


கேள்வி: வணிகவியல் சாராத பட்டப்படிப்பை முடித்தவர்கள் சி.ஏ. படிப்பில் சேர முடியாதா?


அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. எந்த ஒரு பட்டப்படிப்பை முடித்தவரும் சி.ஏ. படிப்பில் சேரலாம். பி.காம்., போன்ற வணிகவியல் படிப்பை முடித்தவர்களுக்கு, சி.ஏ. படிப்பது கொஞ்சம் எளிமையாக இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். யாராக இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 மணி நேரங்களாவது சி.ஏ. படிப்பிற்கு நேரம் ஒதுக்குவது அவசியம்.


பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.காம்., போன்ற வணிகவியல் பிரிவை முடித்தவர்கள் 55 விழுக்காடும், வணிகவியல் சாராத இதர பட்டப்படிப்பு முடித்தவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கும் குறைவான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், சி.ஏ., படிக்க வேண்டுமெனில் அவர்கள் பிளஸ்-2 மாணவர்களைப் போல் சி.ஏ., ஃபவுண்டேஷன் பாடப்பிரிவு மூலமாகத்தான் உள்ளே நுழைய முடியும்.


கேள்வி: சி.ஏ., படிப்புக்கு எதிர்காலம் எப்படி இருக்கிறது?


சி.ஏ., முடித்த ஆடிட்டர்களுக்கு இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் இப்போதைய நிலையில், 2.75 லட்சம் ஆடிட்டர்கள்தான் உள்ளனர். இன்றைய நிலையில், இன்னும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆடிட்டர்களுக்கு தேவைப்பாடு உள்ளது.


ஜி.எஸ்.டி. வரி அமலாக்கத்திற்குப் பிறகு ஆடிட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. தொழில் நிறுவனங்கள், தனி நபர்கள் வருமான வரி செலுத்த ஆடிட்டர்களின் உதவியின்றி செயல்பட முடியாது. சி.ஏ. முடித்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. சுயமாகவும் பிராக்டீஸ் செய்யலாம்.


கேள்வி: ஒரு தாளில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் எல்லா பாடத் தேர்வுகளையும் எழுத வேண்டும் என்கிறார்களே?


அப்படித்தான் பலரும் தவறான கற்பனையில் பேசி வருகின்றனர். திறமையான மாணவர்களைக்கூட, இதுபோன்ற தவறான புரிதல்கள் சோர்வு அடையச் செய்திடும்.


சி.ஏ., பவுண்டேஷன் படிப்பில் மட்டுமே இத்தகைய நிலை உள்ளது. அதில் மொத்தம் நான்கு பாடங்கள் உள்ளன. தேர்ச்சி பெற 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற வேண்டும். மொத்தமாக 50 விழுக்காடு அல்லது அதற்கு மேலும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு தேர்வில் தோல்வி அடைந்தாலோ அல்லது மொத்தமாக பெற வேண்டிய 50 விழுக்காட்டிற்குக் கீழ் மதிப்பெண் பெற்றிருந்தாலோ தோல்வி அடைந்தவராகக் கருதப்படுவர். அத்தகைய சூழ்நிலையில் மட்டுமே ஒரு தேர்வர் மீண்டும் நான்கு தாள்களையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.


இன்டர்மீடியட் மற்றும் ஃபைனல் படிக்கும்போது தோல்வி அடைந்த பாடங்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு எழுதினால் போதுமானது. இங்கும் தேர்ச்சிக்கு 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இன்டர்மீடியட் பிரிவில் குரூப்-1, குரூப்-2 என இரண்டு பிரிவுகளும், ஃபைனலில் குரூப்-1, குரூப்-2 என இரண்டு பிரிவுகளும் உள்ளன.


ஒவ்வொரு பிரிவிலும் தலா நான்கு தாள்கள் தேர்வு எழுத வேண்டும். நான்கு தாள்களிலும் சேர்த்து மொத்த சராசரி 60 விழுக்காடு (ஃபவுண்டேஷன் எழுதும்போது இது 50 விழுக்காடாக இருக்க வேண்டும் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறோம்) மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம். தோல்வி அடைந்த பாடங்களில் மறுதேர்வு எழுத, தொடர்ந்து மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.


ஒட்டுமொத்த சராசரி 60 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தாலும் அது முழுமையான தேர்ச்சியாக கருத்தில் கொள்ள முடியாது. அதனால் இன்டர்மீடியேட், ஃபைனல் எழுதும்போது ஒவ்வொரு தேர்விலும் சராசரியாக 60 விழுக்காடுக்கு மேல் மதிப்பெண்கள் பெறுவது அவசியம் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கேள்வி: தமிழ் வழியில் சி.ஏ., தேர்வு எழுத முடியுமா?


இப்போதைக்கு அந்த வாய்ப்பு இல்லை. ஆங்கிலம் அல்லது ஹிந்தி வழியில் மட்டுமே இந்தியாவில் சி.ஏ. படிப்புகள் வழங்கப்படுகின்றன.


கேள்வி: எங்கு, எப்படிப் படிக்கலாம்?


சி.ஏ. படிப்பு என்பது ஃபவுண்டேஷன், இன்டர்மீடியட், ஃபைனல் ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. சில பயிற்சி மையங்கள், ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்மீடியேட் வரை முழுநேரமாகக் கற்றுக்கொடுக்கின்றன.


மேலும், விவரங்களுக்கு, www.icai.in என்ற இணையதளத்தில் காணலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT