ADVERTISEMENT

கலப்பைப் புரட்சி - விவசாயிகளுக்கான அறக்குரல்! - ப்ரியா பாஸ்கரன்

04:12 PM Jan 23, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ப்ரியா பாஸ்கரன்

ADVERTISEMENT

மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் குதித்திருக்கிறார்கள். அவர்களால் இந்தியத் தலைநகர் டெல்லியே குலுங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழக இலக்கிய உலகின் பங்களிப்பாக, விவசாயிகளுக்கான ஆதரவுப் போர்க் கவிதைகள் கவிஞர் ந.வே.அருளால் தொகுக்கப்பட்டு, அந்த நூல் இலக்கிய உலகில் பெரும் தகிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடல்கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் அந்த நூல் குறித்து அமெரிக்காவில் வசிக்கும் கவிஞர் ப்ரியா பாஸ்கரன் எழுதியிருக்கும் கட்டுரை இதோ;

விவசாயிகளுக்கான போர்க்குரல்

சங்ககாலம் தொட்டே தமிழ் ஆண்டுப் பிறப்பான சித்திரை முதல் நாளன்று ஏர்பூட்டி நிலத்தில் உழுது முப்போகத்திலும் மகசூல் பெருகச் சூரிய பகவானை வேண்டி விதை விதைப்பது விவசாயிகளின் பாரம்பரிய வழக்கம். இதனை ‘பொன் ஏர் பூட்டுதல்’, ‘மதி ஏர்’, ‘நல்லேர்’ என அழைப்பதுண்டு.

சிலப்பதிகாரத்தில்,

"கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்" - சிலப்.10:13:2-5)

என இவ்விழாவை ‘ஏர் மங்களம்’ என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.”

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது என்று இன்று நேற்றல்ல மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகப் பொதுமறையாம் திருக்குறளில் ஐயன் திருவள்ளுவன் உழவைப் போற்றும் விதமாக ஒரு அதிகாரத்தையே எழுதி இருப்பது நாம் யாவரும் அறிந்ததே.

ஸ்ரீ ராமாயணத்தில் மாதா சீதை, ஜனக மகாராஜாவுக்குத் தெய்வ அனுக்கிரகத்தால் கிடைத்த குழந்தை. அவர் பொன்னேர் பூட்டி ஒரு திருநாளில் உழுத போதுதான் நிலத்தடியில் சீதை கிடைக்கிறார். சீதை என்ற பேரே ஏர்கலப்பை நிலத்தில் உழுது செல்லும் பாதையைக் குறிப்பதாகும். ஏர்க்கலப்பையில் பாதையில் கிடைத்த குழந்தை எனவே சீதை என்று பேர் வைத்தார்கள்.

‘நான் முதலில் ஓர் உழவன். அதற்கடுத்ததுதான் மன்னன்’ என்று பறைசாற்றும் விதமாக, அந்நாளில் பொன் ஏர் உழவை மன்னர் துவக்கி வைப்பாராம். இன்னும் புராண இதிகாசங்கள் முதல் திருவிளையாடற் புராணம், கார்நாற்பது போன்ற சங்ககாலம் நூல்கள் முதல் பொன்னேர் பூட்டுதலை விழாவாகக் கொண்டாடி, தொழுது போற்றப் பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய சான்றுகள் பல உள்ளன.

அத்தகைய மகத்தான உழவுத் தொழிலுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு விதங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கார்பரேட் வல்லூறுகளுக்குக் கூஜா தூக்கத் தன்னை காலாகாலத்திற்கும் அடகுவைத்து மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் இந்த புதிய வேளாண் சட்டம் அமலுக்கு வந்தால் விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளவர்கள் எனப் பல தரப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.


இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் கடந்த சில மாதங்களாகக் கடும் போராட்டம் செய்கிறார்கள். அதில் விவசாயிகள் பலர் உயிர் இழந்தும் உள்ளார்கள். அவர்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துக் குரலெழுப்ப பாரதி புத்தகாலயமும், புக் டே இணைய தளமும் இணைந்து கவிஞர்களுக்கு அழைப்பு விடுத்தது.

அதனை ஏற்று மளமளவெனக் கவிஞர்கள் தன் எழுதுகோலின் கூர் வேலெனும் ஆயுதம் கொண்டு தொடுத்த கவிதைகள் ஏராளம் ஏராளம். அவை ஒவ்வொன்றும் ஒரு ரகம். கவிஞர்களின் எழுதுகோல் வில்லாகவும், கூர்முனையின் சொற்கள் அம்புகளாகவும் சீறிப்பாய்ந்து குறித்தப்பாமல் இன்றைய விவசாயிகளின் அவல நிலைகள், சமூகத்தின் மெத்தனங்கள், அரசியல் சூதாட்டங்கள், நிலையற்ற எதிர்காலங்கள், உழைப்பாளியின் ஏக்கங்கள், கலைந்துபோன கனவுகள், கருகுகின்ற நிதர்சனங்கள், பாலை நிலமாக்கப்படுகின்ற மருத நிலங்கள், கண்ணீர் விடும் காளைகள், புரட்சி செய்யும் கலப்பைகள், கார்ப்பரேட் நிறுவனத்தாருக்கும் சோறு விளைவிக்கும் தன்னலமற்றவர்கள், மண்வெட்டி கைகளின் காருண்ணியங்கள் எனப் பல்வேறு நிதர்சனங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதில் சிந்தனைச் சிற்பி பாலசுப்பிரமணியம் ஐயா, கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் ஐயா, ஸர்மிளா ஸய்யித், த.மு.எ.க.ச தலைவர் ஆதவன் தீட்சண்யா, பாடலாசிரியர் யுகபாரதி, யவனிகா ஶ்ரீராம் உள்ளிட்ட 60 கவிஞர்களின் போராட்டக் குரல்களோடு தன்னுடையதையும் சேர்த்து “கலப்பை புரட்சி” என்ற கவிதை நூலாகத் தொகுத்து அனைத்து விவசாயிகளுக்கும் காணிக்கையாக்கி இருக்கிறார் புக் டே இணையத்தள ஆசிரியர் திரு. நா.வே.அருள் அவர்கள். குறுகிய காலத்தில் பாரதி புத்தகாலயம் அதனைத் தொகுப்பாக வெளியிட்டது மிகச் சிறப்பு.

தொகுப்பில் முதல் கவிதையாக மூத்தக் கவிஞர். சிற்பியின் ‘உழவர் பேரணி’ என்ற தலைப்பில்,

“வயல்கள் வயல்கள்
வயல்கள் வயல்கள்
எங்கள் வீடதுவே
துயர்கள் துயர்கள்
துயர்கள் துயர்கள்” என்று தற்போதைய அவல நிலையைச் சுட்டிக்காட்டி அதற்குத் தீர்வாக.

“இறுகிய மனங்களில்
ஈரத்தைப் பொழிய மழையாய் வருகிறோம்
நாங்கள் வருகிறோம்
நாட்டின் பசியை
நீக்கும் உழவர்கள்
நாங்கள் வருகிறோம்” என ஆழமாய், தனது குமுறலைப் பதித்திருக்கிறார்.

கவிஞர். இந்திரன் ஐயா அவர்கள் ‘கலப்பையினால் ஒரு கோட்டுச் சித்திரம்’ என்ற தலைப்பில்,

“நாங்கள் விவசாயிகள்
தீவிரவாதிகள் அல்ல” என அதிரடியாய் ஆரம்பித்து

“உணவுகளைப் பிரசாதங்களை
எங்களை விரட்டியடிக்கும் காவலர்களுக்கும் வழங்கி”

“பசியெனும் நோய்க்கு மருத்துவம் பார்க்கும்
விவசாயிகளின் ஊர்வலம்” என்ற வரிகளில் நிதர்சனங்கள் அழுத்தமாய் பிரதிபலிக்கிறது.

கவிஞர். ஸர்மிளா ஸய்யித் ‘கலப்பை புரட்சி’ என்ற தலைப்பில்

“கோதுமை வயல்களில் கோஃல்ப் விளையாடும் உங்கள் கனவு பலிக்காது”

“பழங்குடி தெய்வங்களோடு இரவு நடனம் புரியும்
அவர்களின் பழுத்த கால்கள்
உங்கள் மயான நகரங்களுக்குள் நுழைவதால்
அங்கே சில புற்கள் முளைக்கட்டும்!” எனச் சவால் விடுகிறார். இவருடைய கவிதைத் தலைப்பே தொகுப்பின் தலைப்பானது சிறப்பு.

கவிஞர். ஆதவன் தீட்சண்யா, ‘காலுள்ளோர் நடக்கக்கடவர்’ என்ற தலைப்பில்

“விதையை வெள்ளாமையை மீட்டெடுக்க
ராப்பகலாய் நடந்து
கோட்டை புகும் அக்கால்களைப் பற்றியபடி
அவர்களோடே வரும் இக்கவிதை
அவர்களது வெறுங்காலுக்குச் செருப்பு
வெடித்த பாதங்களுக்குக் களிம்பு
வீங்கிய காலுக்கு ஒத்தடத் தவிடு”
என அவர்களது பொருளாதார நிலையை அப்பட்டமாய் கூறி அவர் அவலங்களுக்கு மருந்தாக்கி இருக்கிறார் அவரது படைப்பை.

கவிஞர். யவனிகா ஶ்ரீராம் ‘செப்பனிடும் காலம்’ என்ற கவிதையில்,

“கடவுளாலும் வாக்குறுதிகளாலும் உண்டான வரலாற்றுப் பாத்திரம்
அவனுக்குப் பிச்சை எடுக்கவும் ஆகாது”

“நிலத்தைத் தாயிடம் ஒப்படைத்து
வளத்தை மாயைகளிடம் ஒப்படைத்த
உலகத்தில் உங்கள் தகர்க்கும் குரல்களால்
தலைநகர் குலுங்கட்டும்” என ஓங்கி கனீர் குரலெழுப்புகிறார்.

கவிஞர். நேச மித்ரன் ‘தனுகு’ என அழகான தலைப்பில்,

“நான் காற்றில் பரவும் விதை
என் தொலைவை நீ அளக்க இயலாது
இது என் நிலம்
நான் இதன் தெய்வம்”

“என் பெயரில் இருந்த ஒருத்தியின்
உடலே ஆயுதம்
எனக்கு இன்னொரு பெயர்
விவசாயி” என மார்தட்டி விவசாயியே இந்த பிரபஞ்சம் என சிறப்பாய் பதிவிட்டிருக்கிறார்.

கவிஞர். நா. வே. அருள் ‘ஏர்’ என்ற கவிதையில் உழவர்களை

“நீங்கள் பருவத்தில் பயிர் செய்பவர்கள்
காலத்தில் களையெடுப்பவர்கள்
சிவப்பைப் பச்சையாக்கும் ரசவாதம் தெரிந்தவர்கள்” என்று அவர்களுக்காய்

“உங்கள் முதுகெலும்பின் முனையில் கோர்த்த
விலா எலும்புதான்
பாராளுமன்றத்தை அசைத்துப் பார்க்கும்
இந்தியாவின் ஏர்க்கலப்பை” என்று
பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வரிகளைச் சமர்ப்பணம் செய்கிறார்.

கவிஞர். இக்பால் ‘சாம்பல் நதி’ என்ற தலைப்பில்,

“உன் கார்பொரேட் நண்பர்களுடன்
கமிஷனுக்கு வாங்கிய துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டுகின்றாய்”

“இப்போதும் தகிக்கும் அவன் சாம்பலின் வெப்பத்தை
இதயத்தில் ஏந்தியபடி
உன் வாசலில் நிற்கின்றார்கள்
உன் ஆயுதங்களை எதிர்கொள்ள.” என்ற எழுச்சிமிகு வரிகள் கொந்தளிக்கின்றன.

கவிஞர். ஶ்ரீரசா ‘குளிர் நடுங்குகிறது’ என்ற கவிதையில்,

“ துணை இராணுவமும் காவல்துறையும்
கோபம் பொருந்திய
தண்ணீர்க் கணைகளை வீசியெறிகிறார்கள்

காறி உமிழ்ந்த எச்சிலொன்றாலேயே
விவசாயிகள் அதனைத் தடுத்தெறிகிறார்கள்” என்ற அத்தனைச் சொற்களிலும் தீப்பொறிகள் தெறிக்கின்றன.

கவிஞர். அன்பாதவன் ‘துயில் மறந்த ஏர்க்கொழுக்கள்’ கவிதையில்

“தூங்குவது போல நடிக்கும் ஊடகப்பாறைகளை உசுப்புவதெங்கனம்..?”

“துயில் புறந்தள்ளிக் குளிர்காயும் தீக்கொழுந்து சிவந்து
மலர்ந்தொளிர
அதிர்கிறது செங்கோட்டை” என உறக்கம் துறந்து போராடும் உழவர்களின் இன்றைய நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

கவிஞர். குமரன்விஜியின்

“என் உணவு என்னோடு பேசுகிறது
மறுக்க முடியவில்லை” என ஆரம்பித்து உணவு தன்னோடு உரையாடியதை எளிமையான, உணர்ச்சியான வரிகளில் கோர்த்து
“சோறு திண்ற கடனுக்காவது அவனோடு இரு.... உன் சோற்றில் நஞ்சு குறையும்” என்ற கனமான வரிகளில் முடித்திருக்கிறார்.

கவிஞர். வசந்ததீபன் ‘உழுகுடிகளின் முழக்கத்தால் இந்தியாவில் விடியட்டும்’ தலைப்பில்,

“தடைகளெல்லாம் உடைகின்றன
அவர்களின் வீறுநடையில்
விடைகள் கிடைக்கும்
அவர்களின் கோர்த்த கரங்களில்”
என வாழ்த்தி
“வெல்க உமது வீரம்
வீழ்க.. சூத நரிகளின் நயவஞ்சகம்” என்றும்

கவிஞர். சந்துருவின் ‘பனியையும் குளிரையும் உருட்டி விளையாடுபவர்கள்’ கவிதையில்,

“விளைச்சலை மட்டுமல்ல
மரபு சிதைந்த மலட்டு விதையெடுத்து
நிலத்தையும் விழுங்க வருகின்றன
கார்ப்பரேட் கருந்துளைகள்” என்ற நிதர்சன ஆதங்கத்தை
“ஆயுதமின்றி அகிம்சையின் குரலுயர்த்தி” போராடுவதே விவசாயிகள் ஒவ்வொருவருமே ஆயுதமென்ற கருத்தையும்

கவிஞர். ஆதிரன் ‘பயிர் பேசுது’ என்ற தலைப்பில்,

“மொடமொடவென்று உடுத்திய பருத்தியாடைகளின் நூலிழைகள்
வியர்வை நாளங்களின் வழியே உட்புகுந்துள்ளனவாம்
வேர்விட்டு முளைப்பதற்காய்” என விவசாயிகளில்லையெனில் நிர்வாணம் தான் என்ற நிலைதான் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.

கவிஞர். பூவன்னா சந்திரசேகர்

“நெல் பறிக்கத் திரியும்
நிலம் தின்னப் பிசாசுகளைத் துரத்த
தலைவெட்டிய தலைச்சம்பிள்ளையை
கொள்ளைபொம்மையாய் நடுவயலில்
நட்டு வைக்கிறாள்” என்ற கனமான
வரிகளும்

கவிஞர். பாரதி கவிதாஞ்சனின் ‘அவர்கள் வருகிறார்கள்’ தலைப்பில்

“சோற்றுக்குப் போராடுகிறவனின் வயிற்றுச் சுருக்கங்கள்
வாய் பிளந்திருக்கும் நிலத்தின் வெடிப்புகளின்றி வேரென்ன?”

“உழவன் கணக்கு பார்த்தால்
உழக்கும் மிஞ்சாது” என்றும் இனி எப்படி வாழ்வது இந்த எழவெடுத்த தேசத்தில் என்ற கேள்வியும் நெஞ்சத்தைப் பிளந்து குருதியை வடியவைக்கின்றன.

கவிஞர். ப. தனஞ்ஜெயனின் ‘முதுகெலும்பின் குரல்’ கவிதையில்,

“எத்தனை செயலியைப் பயன்படுத்தினாலும்
தோட்டத்தில்
விளைய வைக்க நாங்கள் வேண்டும்” என்ற குரலும்

கவிஞர். கலைவாணி இளங்கோவின்

“அதிகாரத்தை உனக்குத் தந்து
அடக்குமுறை நாங்கள் பெற்றது
மீளாத கொடுமைக்கா?
மாளாத வறுமைக்கா? என்ற
நேர்மையான கேள்விகளால் நியாயத்தின் வார்த்தைகளாய் முன் வைத்திருக்கிறார்கள்.

கவிஞர். ப்ரியா பாஸ்கரனின் ‘களத்து மேட்டுக் கனவு’ கவிதை வரிகளான

“வெளஞ்ச நெல்லுக்கு
வெல நிர்ணயம் செய்ய
வெதச்சவனுக்கு வழிவோணும்..

ஆத்தா இத எல்லாம் மீறி
எந்நிலத்து வருமானத்த
கார்பரேட்டு கம்பெனிகிட்ட இருந்து
காப்பாத்தவோணும்

வேகாத வெயில்ல
விளைஞ்ச உணவுக்கு
குளிர்பெட்டி அறையில வில நிர்ணயம் பண்ணாம இருக்கோணும்” என வட்டார மொழியில் ஒட்டுமொத்த எளிமையான விவசாயியின் அன்றாட வாழ்வைப் பிரதிபலித்திருக்கிறது.

கவிஞர். துரை வசந்தராசன், ‘இப்போது இல்லையென்றால் எப்போது? சலோ..’ தலைப்பில்,

“பால்கொடுத்த மார்பகங்களில்
புற்றுவைக்கத் துடிக்கிறது புதிய எசமானம்
என்ன செய்யப்போகிறீர்கள்?
வேடிக்கை பார்க்கும் உங்களைத்தான் எனக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்.

கவிஞர். வில்லியம்ஸ்
“ உடல் வளர்த்தவனின் உயிர் வளர்த்தவனின்
முதுகெலும்பு உடைக்க தலைநகரில் நிற்கிறார்கள்
கவச வண்டிகளில் காவல் வீரர்கள்” என்றும்

கவிஞர். கனகா பாலன், ‘நியாயம் கேட்கும் எசமானர்கள்’ தலைப்பில்,

“தலைமுழுகி தள்ளிவச்சா
பசிக்கும் வயித்துக்கு
பணந் திணிச்சா ஆறுமா.? என்றும்

கவிஞர். ஆதித் சக்திவேல், ‘போர்ச் சாலைகளான தார்ச் சாலைகள்’ என்ற தலைப்பில்,

“உழவரின் வயிற்றில் அடித்து
முதலாளிகளின் கருவூலம் நிரப்ப
எந்த அர்த்த சாஸ்திரம் சொல்கிறது என
அந்த சாணக்கியனைத் தட்டித் தீர்க்க வந்துள்ளனர்” என்றும்

கவிஞர். நவகவியின், ‘களை எடுப்பான் விவசாயி’ கவிதையில்,

“ஓநாய்க விடத்தில் ஒப்பந்தம் போடச்சொல்லி
விவசாயி வர்க்கத்தை கொல்லுறான்
ஆட்டுக்கு அறிவுரை சொல்லுறான்!
கோடீஸ்வரன் கோட்டுக் கோமணம் ஆகுமாம்! எனக் கூறி களையாய் முளைத்ததை களை எடுப்பார் விவசாயி என்று ஆருடம் சொல்லும் வரிகள் பச்சக்கென மனதில் ஒட்டிக்கொள்கிறது.

கவிஞர். உமா மோகன், ‘கைகளை கழுவ விடுங்கள்’ என்ற தலைப்பில்,

“பக்கத்திலிருக்கும் முதலாளிமார்க்கும்
தங்கத்தில் வேகவில்லை
தானியத்தில்தான் வேகிறது”
உண்டு கழுவ விரும்பும் கைகளுடைய நாங்கள்
உதறிக்
கைகழுவும் உங்களிடம்
இரத்தல் தகுமோ? என அநீதிகளைச் சுட்டிக்காட்டியும்

கவிஞர். கார்குழலின் ‘கைகள்’ கவிதை வரிகள்

“காலாவதியான தோட்டாக்கள்
உரசிச் செல்கையில் மண்ணில் சிந்தும்
ஒவ்வொரு துளி கண்ணீரும்
இன்னும் ஆயிரம்
விடுதலை விதை முளைக்க
வளம் பாய்ச்சும்” என ஏர் பிடித்த கைகளின் காருண்ணியத்தையும் பதிவிட்டிருக்கிறார்கள்.

கவிஞர். சசிகலா திருமால், ‘விவசாயிகள்’ தலைப்பில்,

“விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காதென்றனர் அன்று..
இன்றோ
விதைகள் உறங்கியதால் விவசாயியும் உறங்குவதேயில்லை
முளைத்து நிற்க வேண்டிய விதைகள்
இளைத்து நிற்பதால் விவசாயிகளும் இளைத்தே விட்டனர்..”. இந்த உலகமே விவசாயிகளால் இயங்குகிறது காக்க வாருங்கள் என்ற அழைப்பையும் விடுக்கிறார்.

கவிஞர். சார்லஸின், ‘விவசாயி’ என்ற குறுங்கவிதை

“உழும்போது நிலத்தில்
வியர்வையும்
போராட்டக் களத்தில்
ரத்தத்தையும் சிந்துகிறார்
விவசாயி” நெஞ்சை உறைய வைத்துக் குருதியைக் கசிகிறது.

கவிஞர். கார்த்திகேயன் செங்கமலை,

“உழவரோடு பேசு
வேண்டாம் உங்கள் காசு
உழவர் சுதந்திரம்
உலகில் உயர்தரம்
அடைக்காதே சட்டத்தில்
வதைக்காதே மொத்தத்தில்” என நெத்தியடியாய் உரைத்திருக்கும் வரிகள் பிரமாதம்.

கவிஞர். சிலம்பரசன் சின்னக்கருப்பன்,

“தீ மூட்டி
உடல்களை வாட்டி
அவித்த வள்ளிக்கிழங்கை
போலிருந்த சதைப்பிண்டங்களை
தின்னத் தந்தார்கள்.
பங்கிட்டுக் கொண்டோம்” என்ற வரிகள் அதிகார வர்க்கத்தின் குரூர எண்ணத்தை வெட்டவெளிச்சமாகிறது.

கவிஞர். சி பி கிருஷ்ணனின் “என்ன கேட்கிறோம் உன்னிடம்” கவிதையில்,

“ஐந்து வருடங்களில் எங்களின் வருமானத்தை
இரட்டிப்பாக்கி விடுவேன் என்றாயே
அதையா கேட்கிறோம் உன்னிடம்
இல்லை இல்லை இல்லவே இல்லை”

“சட்டம் போட்டு வதைக்காதே
திட்டம் போட்டுக் கொல்லாதே”
எங்களை வாழ விடு, தேர்தல் வாக்குறுதிகள் நீரில் எழுதப்பட்டவை என்பதனை விவசாயிகள் என்பதாக எடுத்துக்கொள்கிறேன்.

கவிஞர். ஜான் பாத்திமா ராஜின், ‘உழவனின் கண்ணீர்’ தலைப்பில்,

“விதைகளுக்கே முட்டி முளைக்கவா
தன்னம்பிக்கை கொடுக்கிறீர்கள்?”

“பார்த்து பதமாகக் கையாளுங்கள்
உங்கள் சட்டங்களையும் திட்டங்களையும்” எனச் சவால் விடுகிறார் விவசாயிகளின் சார்பில்.

கவிஞர். இராம பெருமாள் ஆச்சியின் வரிகள்,

“அழுக்கு முகங்களின் அழகர்கள்
வழக்கு வாழ்வியலின் அச்சாணிகள்”
ஆனால்
“களையெடுக்கத் தயங்காதவர்கள்
விளைச்சலுக்காக அரசியலிலும்” எனச் சந்தம் நிறைந்த வரிகளில் மிளிர்கின்றன.

கவிஞர். மு. பாலசுப்பிரமணியன்,

“ஏரைப் பிடிப்பவன் வீதிக்கு வருவது
ஏளனம் இல்லை அவமானம்
தேரில் செல்பவன் வேடிக்கை பார்ப்பது
நேர்மை இல்லை அவமானம்” எனச் சாடுவது சிறப்பு.

கவிஞன். புனிதன்,

“கலப்பையால் மீண்டும் உழ வந்திருக்கிறோம்
எங்கள் தேசத்தை மீண்டும்” என்று அறை கூவல் விடுவது டெல்லிவரை எதிரொலிக்கிறது.

கவிஞர். சூர்யமித்திரனின் “ஒரு கற்பனை’ கவிதையில்,

“கார்ப்பரேட் கம்பெனி
கதவுகளில்
‘வேலை காலி’
விளம்பரம் ஆரம்பமே அட்டகாசமாய்.

கவிஞர். கவிவாணனின்,

“இந்திய நிலங்கள்
இந்தியனுக்கு இல்லை என்பதே
எங்களின்-
குறிக்கோள் அதுவே- எங்கள்
செங்கோல்” என கார்ப்பரேட்டுக்காரனின் ஏளனங்களைப் பறைசாற்றியிருப்பது அருமை.

கவிஞர். பொள்ளாச்சி முருகானந்தனின், ‘நடப்பதற்காகவே சுதந்திரம் வாங்கினோம்’ என்ற கவிதையில்,

“சுதந்திர தேசத்தின் ஒருநாள்
மிட்டாய்க்கு இருக்கும் பவுசு கூட
எங்களுக்கில்லை” எனக் கூறி
“அனாதைகளாய்
தெருக்களில் நடக்கவாவது விடுங்கள்” எனத் தீர்மானமாய் சொல்கிறார்.

கவிஞர். மகாலெட்சுமியின் ‘வேளாண் சட்டம் திரும்பப் பெறு’ என்ற தலைப்பில்,

“உங்கள் கருங்கல் சுவர்கள் அவர்கள் கால்களைத் தடுக்க முடியாது..
ஏனெனில் அவர்களைச் சுமப்பது கால்களல்ல
தேசத்தின் வயிறுகள்” என்பது முற்றிலும் உண்மை.

கவிஞர். சிந்து,

“வயிற்றுக்கு உணவு அளித்தே பழகிய கருணை
இன்றைக்கு வீதியில் நின்று கையேந்தி பிச்சையெடுக்கிறது” என்ற வரிகளை வாசிக்கும் போதே உணவு உள்ளிறங்க மறுக்கிறது.

கவிஞர். (A.R) அருண் ரமணன், ‘தேசமே விவசாயி தான்’ என்ற தலைப்பில்,

“சோறு கொடுக்கும் விவசாயி
சோகமுற்றால் இச்செகத்தில்

வாழும் உயிர்கள் வாட்டமுற்று உடல் நலிந்து
உறுபசியில் உணவின்றி உயிர் துறக்கும்” என விவசாயமும், விவசாயிகளும் தேசத்தின் மூச்சென்பதைப் பதிவு செய்துள்ளார்.

கவிஞர். மதுரா, ‘உழவரைப் போற்றுவோம் என்ற கவிதையில்,

“கஜாவும் நிவருமாய்
கலங்கடித்தாலும்
மண்ணின் மேல்
மாறாக் காதல்
கொண்டவர்கள்” என்ற வரிகளில் நேசத்தின் வாடை.

கவிஞர். இளங்கோவன் வி.ஜி.யின் ‘என்னவென்று சொல்லுவேன்’ கவிதையில்,

“அடிக்கொரு தரம்
தற்கொலைச் சாட்டையால்
அடித்துக் “கொல்லும்” அதர்மத் திட்டத்தை! என்னவென்று சொல்வேன்? எனத் தொடுத்துள்ளார் பல வினாக்களை.

கவிஞர். சீனி. தனஞ்செழியனின், ‘ஏரடா உயிரியக்கத்தின் வேர்’ கவிதையில்,

“விலை வைக்கலாம் எனச் சொல்லி உலைவைத்த கதை ஊரறியும்
வியர்வை நிறைந்த எங்கள் வாழ்வை என்றடா இந்த நாடறியும்? எனக் கேள்வி விடுத்து பதில் கிட்டும் வரை தொடரும் ஏர்களின் கிளர்ச்சி எனச் சூளுரைக்கிறார்.

கவிஞர். கலை, ‘உழவர் உயர்வார்’ தலைப்பில்,

“பாக்கெட்டில் வாங்கி
பசிக்காமலே முழுங்கும்
பறக்கும் ஈக்களுக்கா புரியும்
உழவன் உயிர்கொடுத்து
உயிர் தந்தான் என்று.?” வரிகளில் விவசாயி வியர்வையின் ஈரத்தை உணரலாம்.

கவிஞர். பட்டுக்கோட்டை கவிப்பிரியன், ‘இசைப்பாடல்’ என்ற கவிதையில்,

“அத்தியாவசிய பொருள்
உரிமைக்கு ஆப்பு வைக்குது பாரு!
பகா சூர நிறுவனத்திற்கு
பட்டுக் கம்பளம் பாரு! என நையாண்டியுடன் இனிய இசையாக நிதர்சனங்கள் பாடலில் வலம் வருகின்றன.

கவிஞர். அகிலன் கண்ணன், ‘மாயன்’ கவிதையில்,

“விவசாயக் கோவணாண்டியைக்
கபளீகரம் செய்ய அதிவேக அடங்காப் பசியுடன்
பேயாட்ட அசுரகணமாய் நர்த்தனம்..”
எனவும் கவிஞர். முபாரக் வரிகள்

“நடிகைகளுக்குக் குழந்தை பிறந்தால்
தலைப்புச் செய்தியாக்கும் ஊடகங்கள்
பாரத தேசத்தின் பிள்ளைகள்
பசியால் மடிந்து கிடைக்கையில்
மயக்கத்தில் விழுந்து கிடக்கின்றன” என முழக்கமிடுகின்றன.

கவிஞர். லில்லி ஏஞ்சலின்(முத்தமிழ்) ‘சோறிடும் உயிர்களின் சோர்வு’ கவிதையில்.

“ பூக்களின் ரசிக்கும்
இவர்தான்.. வேர்களின்
வேதனையை உணர்வதில்லை!
இது காலங்காலமான
கலப்பைகளின் சாபம்” என்ற வேதனை வரிகளில் கனக்கிறது நெஞ்சம்.

கவிஞர். சசிகுமார், ‘வயலெங்கும் கண்ணீர்’ கவிதையில்.

“கேளாமலே உயிர் மண்ணைத் துளைத்து மீத்தேன் எடுப்பீர்கள்

அரசுக்குத் தேவையென்றால்
எதற்கும்
புறம்போக்கு நிலமெனப் பிடுங்கிக்கொள்வீர்கள்” என விளைச்சல் நிலங்களை எட்டுவழிச்சாலைகளாக்கிய அவலங்களைச் சாடி


“என்னடா உங்க அரசியல்!” அட போங்கடா நீங்க என்பது போல் முடித்திருப்பது அருமை.

கவிஞர். ஐ. தர்மசிங்கின் ‘கலப்பைகளின் காயம்’ கவிதையில்,

“ஊருக்கே பசிநீக்குபவன்
வயிறெரிந்தால்
வாசமிழந்துபோகும் மண்

கண்ணீரால் நிரம்பியது
கலப்பையின் காயம்” என மெய்யியல் உணர்வில் சொற்கள் மிளிர்கின்றன.

கவிஞர். சோலைமாயவனின் கவிதையில்

“அடுத்த மழைக்காகக் காத்திருப்பது போல்
உங்களிடம் தான்
சாலையில் கையேந்தி நிற்கிறார்

அட்சயபாத்திரத்தை அழவைத்துவிடாதே
நம் பசியின் விதை
அவர் கைரேகைகளுக்குள்”என்ற உருக்கமான வரிகள் எவரையும் ஒரு கணம் தன்வசமிழக்க வைத்திடும்.

கவிஞர். நிஷா வெங்கட் ‘விவசாயம்’ தலைப்பில்,

“கடைசியா எஞ்சியிருக்குற
அந்த விவசாயத்தையும்
அழிக்காமயிருந்தா சரிதான்..
ஏன்னா வாக்கரிசிகுன்னு நாளு நெல்லுமணியாவதுதேவைசாமீ..
பீட்சா பர்கர்லாம் செல்லாதுசாமீ..” என நெந்தியடி அடித்திருக்கிறார்.

கவிஞர். அகவின், ‘அவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல’ கவிதையில்,

“அதிகாரக்காடு
எரியத் தொடங்கி விட்டது தெரியாமல்
தண்ணீர் பீய்ச்சி
கூட்டத்தைக் கலைப்பதெல்லாம்
ஆகாச நெருப்பை
நாய்மூத்திரம் கொண்டு
அணைப்பது” என
சாட்டையைச் சுழற்றி அடித்து

“உரிமைக்காய் சிவந்த
ஏர் முனைகள்
அவர்கள்
நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்பன எச்சரிக்கும் எழுச்சிமிகு வரிகள்.

கவிஞர். சுசீலாவின், உழவனுக்கு உரித்தாக்குவோம்’ கவிதையில்,

“ எங்கள் வயிறு நிரப்ப
வயக்காடே கதியெனக் கிடக்கும்
கடவுள்கள் இவர்கள்” என்று வணங்கத்தகுந்தவர்களை வீதிக்கு இழுத்துவிட்ட ஆதங்கம் கொட்டிக்கிடக்கிறது.

கவிஞர். கார்த்திகாவின் வரிகள்,

“ காலத்தின் பெரும்பரப்பில்
என்றோ ஒருநாள் களமற்றுப் போன
உங்கள்
தானியக் குடுவைகள்
களவு போகக் கூடும்”

“அப்போது நாமும்
வரலாம் வீதிக்கு..” என எதிர்கால இந்தியாவின் நிலையை எடுத்துரைக்கும் மெய்யான வரிகள் இந்த சட்டங்கள் அமுலாக்கப்பட்டால்.

கவிஞர். ஜே.ஜே.அனிட்டாவின், ‘ஆறு பூதம்’ கவிதையில்,

“வெளங்கும்படி சொன்னா
விவசாயி கஞ்சிக்கு
வரி விதிக்காதீங்க
நாங்க பெத்த நெல்லுக்கு
நாங்க தான பேரு வைப்போம்” என்ற வரிகளில் பயிர்கள் உழவர்களின் மழலைகள், அவர்களின் உயிர் என்பதனைக் காட்டுகின்றன.

கவிஞர். சம்புகனின் ‘உலகளந்த உத்தமனே’ கவிதையில்,

“பொங்கியெழுந்தான் ஆழிப்பேரலையாய்
கிழவனும் கிழவியும் இளைஞனும்
யுவதியும் குஞ்சும் குளுவானுமாய்
படையெடுத்து வந்தான் பாரீர்” எனத் இவரின் வரிகளும் உருவெடுக்கின்றன
ஆழிப்பேரலையாய்.

கவிஞர். ஆசுவின் கவிதையில்,

“எங்கிருந்தோ வரும்
பெருந்திண்ணியின் பார்வையில்

இரையாக/ யாவரும் அனுமதிக்கப் போவதில்லை
எள்ளி காறி உமிழ்கிறது
ஒரு கண்ணீர்ப் பெருக்கு
ச்சீ என” வெகு உணர்ச்சியான
சொல்லாடல்.

கவிஞர். யுகபாரதியின் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ கவிதையில்,

“புழுதிபடிந்த ஏழைகளின்
போராட்டத்தைக் கலைக்க
நீரைப் பாய்ச்சும் நிர்மூடர்கள்
அதே தண்ணீரில் தங்கள்
ஆணவ அழுக்குகளை
கழுவிக்கொள்ளலாம்” எனச் சாடி

“அதிகபட்சம் அவர்களால்
நம்மைக் கொல்லமுடியும்
வெல்ல முடியாது” என ஆணித்தரமாய் பதித்திருக்கிறார் தனது கருத்துகளை.

கவிஞர். பாலைவன லாந்தரின் ‘ரொட்டி எனப்படுவது’ தலைப்பில்,

“ரொட்டிகளைப் பசிக்கென திருடுபவர்கள்
உலகின் மரியாதைக்குரியவர்கள்
ரொட்டிகளை விளைவிப்பவர்கள்
மரியாதையின் உலகிற்குரியவர்கள்”

“வியர்வைத் துடைக்கும் ஒரு நீளத்துண்டு
தோளில் கிடந்தால் என்ன
தலையில் டர்பனாக சுற்றப்பட்டிருந்தால் என்ன
நீயும் நானும் பங்காளி” என நிதர்சனத்தை ரொட்டித் தத்துவம் என்றே சொல்லலாம்.

திரைக்கவி திலகம் கவிஞர் மருதகாசி எழுதிய

“ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை!
என்றும் நம் வாழ்விற்குப் பஞ்சமே இல்லை” என்ற வரிகள் விவசாயத்தின் மகத்துவத்தையும், விவசாயிகளின் ஆனந்தத்தையும் எடுத்துரைத்த காலகட்டங்கள். அவை கார்ப்பரேட் கால சக்கரங்களில் மிதிப்பட்டு இன்று அடிமையாக்கப்படுகிறது என்று அறிந்தும் அதனைத் திணிக்கும் உணர்ச்சியற்ற, சுய லாபம் பார்க்க நினைக்கும் மூடர்களே உள்ளனர் என்பது பெரும் வருத்தத்திற்குரிய, கண்டனத்திற்குரிய செயலாகும்.

இந்த கவிதைத் தொகுப்பு நூல் கட்டாயம் அனைவராலும் வயது வித்தியாசமின்றி வாசிக்க வேண்டிய நூல். மிக முக்கியமாக அடுத்த தலைமுறையினருக்கு, விவசாயம் மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை உணர்த்த இதனை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.

கவிதைகளில் ‘கலப்பை புரட்சி’ செய்து தங்களது பேராதரவைப் போற்றுவதற்காக அல்லாமல் தங்களது கடமையென வடித்திருக்கிறார்கள் எண்ணிலடங்கா எழுச்சிமிகு சொற்களைக் கவிஞர்கள். அதில் கடுகை விடவும் சிறிய அளவிலான எனது வரிகள் எழுப்பிய கூக்குரலையும் சேர்த்து இத்தொகுப்புடன் இணைத்து எழுதுகோல் புரட்சி செய்திருக்கும் கவிஞர். நா. வே. அருள் அவர்களுக்குப் பேரன்பின் நன்றிகளுடன் இனிய வாழ்த்துக்கள். இதனை வெளியிட்டுத் தனது பேராதரவைத் தந்திருக்கும் பாரதி புத்தகாலயத்திற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.


~ ப்ரியா பாஸ்கரன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT