ADVERTISEMENT

அறுகம்புல் நாயகனின் அறுபடை வீடுகள்

03:02 PM Mar 27, 2019 | Anonymous (not verified)

அயன்புரம் த. சக்தியநாராயணன்

அழகுத் திருமுருகனுக்கு மட்டுமல்ல; அவருடைய அண்ணன் அறுகம்புல் நாயகன் ஆனைமுகனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன.

1. அல்லல்போம் விநாயகர்

பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குக்குரிய தலமான திருவண்ணாமலையில் இருக்கிறது அல்லல்போம் விநாயகர் ஆலயம். அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த விநாயகரையும் வழிபட்டால் துன்பம் அகலும் என்பது ஐதீகம். இந்தத்தலம் பிள்ளையாரின் முதல் படைவீடாகும்.

ADVERTISEMENT

2. ஆழத்துப் பிள்ளையார்

தேவாரப்பாடல் பெற்ற- காசிக்குச் சமமானதாகக் கருதப்படுகிற விருத்தாசலத்தில் உள்ள பிரம்மாண்டமான ஆலயம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம். இங்கு எழுந்தருளியுள்ளார் ஆழத்துப் பிள்ளையார். பெயருக்கேற்றவாறு ஆழத்தில் சந்நிதி கொண்டுள்ளார். படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றுதான் விநாயகரை தரிசிக்கவேண்டும். இவரை வணங்கினால் கல்வியும் செல்வமும் கிடைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை. இது இரண்டாவது படைவீடு.

ADVERTISEMENT

3. வாரணப் பிள்ளையார்

சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக காலனையே காலால் உதைத்த திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருத்தலத்தில் உள்ளது வாரணப் பிள்ளையார் ஆலயம். இவர் பக்தர்களின் உள்ளத்தைக் கவர்வதால் கள்ள வாரணப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அளிக்கவல்லவர். இது மூன்றாவது படைவீடாகும்.

4. சித்தி விநாயகர்

அப்பரும், சம்பந்தரும் பாடிய திருத்தலமான மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார் சித்தி விநாயகர். அம்மன் சந்நிதிக்குள் நுழையும்போதே சித்தி விநாயகரை தரிசிக்கலாம். மணிவாசகர் பாண்டிய மன்னனுக்காக குதிரை வாங்கப் புறப்பட்டபோது இவரை வணங்கிய பின்பே சென்றதாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதான இந்த சித்தி விநாயகரை வணங்கினால் எடுத்த காரியம் சித்தியாகும் என்பது நம்பிக்கை. இது நான்காவது படைவீடாகும்.

5. கற்பக விநாயகர்

விநாயகப் பெருமானின் மிகப்பிரம்மாண்டமான ஆலயமாகக் கருதப்படுவது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம். இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் துண்டிராச விநாயகர் எழுந்தருளியிருக்கிறார். எல்லா பேறுகளைப் பெற்றாலும் இறுதியில் நமக்குத் தேவைப்படுவது வீடுபேறு ஆகும். இதனை அருள்பவராக காசி துண்டிராச கணபதி திகழ்கிறார். அங்கு சென்று இந்த விநாயகரை வழிபட இயலாதவர்கள், சிவலிலிலிலிங்கத்தைக் கையில் வைத்து பூசை செய்கின்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினாலே போதும்- காசிக்குச் சென்ற பலன் கிடைக்குமாம். இது ஐந்தாவது படைவீடாகும்.

6. பொள்ளாப் பிள்ளையார்

சிற்பியின் உளியால் பொள்ளப்படாமல் தோன்றியதால் இந்த விநாயகர் பொள்ளாப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். பொள்ளாப் பிள்ளையாரின் அருளால்தான் நம்பியாண்டார் நம்பிகள் தேவாரத் திருமுறைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார். வலம்புரி விநாயகராகக் காட்சி தரும் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் ஆலயம் விநாயகரின் ஆறாவது படைவீடாகத் திகழ்கிறது.

இந்த அறுபடை வீடுகளையும் தரிசித்து அறுகம்புல் நாயகனின் திருவருளைப் பெறுவோம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT