ADVERTISEMENT

"கண்ணகியிடம் கோவலன் கேட்டான்... நான் இல்லாத நேரத்தில் நீ..." - நாஞ்சில் சம்பத் பகிரும் சுவாரசியம்

03:07 PM Nov 04, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதிலிருந்து, "காலங்காலமாகக் கட்டிக் காப்பாற்றி வந்த பண்பாடு, கண் முன்னாலே உடைந்து சிதறி உருமாறிக் கொண்டிருக்கிறது. யாசிப்பவனுக்கு யாசகம் கொடுப்பதிலே மகிழ்ச்சி அடையலாம். ஆனால், அதிலே விளம்பரம் தேடிக் கொள்கின்ற மனிதர்களை நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கோவிலில் எரிந்து கொண்டிருக்கின்ற டியூப் லைட்டின் வெளிச்சத்தை அடைத்துக் கொண்டு, அதைக் கொடுத்தவனுடைய பெயர் பதிவு செய்யப்படுகிறது.

ஆகவே, விளம்பரப் பிரியர்களாக இந்த நாட்டில் சராசரி மனிதர்கள் கூட இருக்கிற இந்த நிலைமை நேற்றிருந்ததா என்று பார்த்தால், இல்லை. சேதுபதி சீமையில் நெல் வயல் சூழ்ந்த; கழனி சூழ்ந்த திருத்தலம் இளையான்குடி. அந்த இளையான்குடியிலே, 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் என்கிற நாயனார் இருந்தார். 63 அடியார்களுக்கும் தனித்தனி பெருமை இருக்கின்றது என்றால், இந்த இளையான்குடி மாறனாரின் பெருமை, தமிழ்ப் பண்பாடான விருந்தோம்புவது தான்.

வருகிற விருந்தைப் பேண வேண்டும். அடுத்த விருந்துக்குக் காத்திருக்க வேண்டும். அப்படி காத்திருக்கிறவன் எவனோ, அவன் வானத்தில் இருப்பவர்களுக்கு விருந்தாவான் என்று வான்புகழ் வள்ளுவன் சொல்லி வைக்கிறான். விருந்து உபசாரம் செய்வது என்பது தமிழர்களின் பண்பாடு. கண்ணகி கோவலனை பிரிந்திருந்த காலத்தில், மீண்டும் கோவலனோடு கண்ணகி சேர்ந்த பிறகு கண்ணகியிடம் கோவலன் கேட்டான். நான் இல்லாத நேரத்தில் நீ எதற்காவது வருந்தினாயா கண்ணகி? என்று கேட்ட பொழுது, கண்ணகி அறம் பேசினாள்.

நீங்கள் இல்லாததால் வீட்டில் யாரும் உங்களைத் தேடி வரவில்லை. உங்களைத் தேடி யாரும் வீட்டில் வராத காரணத்தால், வீட்டில் யாருக்கும் நான் அமுது செய்யவில்லை. யாரும் தேடி வராத காரணத்தால், பசித்தவர்களுக்கு நான் பால்சோறு போடவில்லை. யாசகர்கள் வந்து பிச்சை கேட்கவில்லை. சாதுக்கள் என்னை தேடி வரவில்லை. நீங்கள் வீட்டில் இருந்தால், நாலு பேர் வருவார்கள். நாலு பேருக்கும் நான் விருந்து உபசாரம் செய்வேன். அந்த வாய்ப்பை நான் இழந்தேன் என்று கண்ணகி சொன்னாள். ஆகவே, விருந்து சமைப்பது மட்டுமல்ல. விருந்தை, வந்த விருந்தினர்களுக்கு அன்புடன் பரிமாறுவது என்பதும் தமிழ்ப் பண்பாடு.

அப்படித்தான் 63 அடியார்களின் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் விருந்து சமைப்பதும், விருந்தை அடியார்களுக்கு பரிமாறுவதும், இதுவே வாழ்க்கை முறையாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் என்பார்கள். ஆனால், கொடுத்துக் கொடுத்து அவருடைய வாழ்க்கை சிவப்பாகிப் போய்விட்டது. எல்லாவற்றையும் கொடுத்து விட்டார். ஆனாலும், வந்துகொண்டே இருக்கிறார்கள். வந்துகொண்டே இருப்பவர்களுக்கு ஏதாவது கொடுத்தாக வேண்டும் என்கிற, விதை நெல்லைக் கூட சமைத்துப் போடுகிற அளவுக்கு ஒரு நெருக்கடியான தருணத்திலும், அதை மகிழ்ச்சியுடன் செய்தார்". இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT