Skip to main content

"எல்லாம் படிக்க படிக்கத் தித்திக்கும்... தேனாய் தித்திக்கும்..."- முருக கடவுள் குறித்து நாஞ்சில் சம்பத் 

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

"Everything will be read and read....Tenai will be read...."- Sampath interview in Nanji about Lord Muruga!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "உலகெங்கும் வாழும் 'ஓம் சரவண பவ' நேயர்களுக்கு நாஞ்சில் சம்பத்தின் வணக்கங்கள். தமிழக மக்களின் வழிபடும் கடவுளாக உள்ளந்தோறும் ஆட்சி செய்கிறவன் குமரன் முருகன். அப்பனுக்கு உபதேசம் செய்தவன். சூரர்களைச் சம்ஹாரம் செய்தவன். கேட்ட வரம் தருகிறவன். வாய் பேச முடியாமல் ஊமையாக இருந்தவனை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழையும், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழையும் பாட வைத்தவன். அவர் தான் குமரகுருபரர். 

 

அவர் அருளி செய்திருக்கிற பிரபந்தங்கள் எல்லாம் படிக்க, படிக்கத் தித்திக்கும். தேனாய் தித்திக்கும். வயிற்று வலியால் அவதிப்பட்டார் பகலிக்கூத்தர். அவருக்கு அருள் செய்ததனால் அவரிடமிருந்து திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ். பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் பெரிதும் பேசப்படுகிற நூல். ஆகவே, முருகன் மனது வைத்தால் வாய் பேச முடியாதவனையும் பேச வைப்பான். முருகன் மனது வைத்தால் வயிற்று வலியால் அவதிப்படுகிறவனையும் வாழ வைப்பான். முருகன் மனது வைத்தால் மரத்தில் உச்சியில் இருக்கிறவனை நிலவின் உச்சிக்குக் கொண்டு வைப்பான் என்ற ஒரு நம்பிக்கை காலம் காலமாக தமிழர்கள் மத்தியில் இருக்கிறது. 

 

பழனியிலும், திருச்செந்தூரிலும் தைப்பூச நன்நாளைக்கு வருகின்ற பக்தர்கள் அலையலையாய் வருகிறார்கள். அணி அணியாய் வருகிறார்கள். ஒரு கோடி தமிழர்கள் ஒரு கோவிலில் கூடக் கூடிய அளவுக்கு கடலோரம் செந்தில் வேலனைச் சந்திப்பதற்கும், அவன்தாழ் பணிவதற்கும், அவனைக் கண்டு தரிசிப்பதற்கும் மக்கள் வந்து குவிகிறார்கள். அது என்ன முருகன் மீது மட்டும் மக்களுக்கு இப்படியொரு நம்பிக்கை. இந்த முருகனை வைத்துத்தான் தமிழ்நாட்டின் அரசியல் கூட கடந்த காலத்தில் சுழன்றது. 

 

தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று கவலைப்பட்டவர்கள் எல்லாம், முருகன் பெயர் சொல்லி வேல் யாத்திரை கூட நடத்திப் பார்த்தார்கள். ஆனால் முருகன் தமிழ்க் கடவுள் தான். முருகன் நம்புகிறவனை வாழவைப்பவன் என்றொரு நம்பிக்கை. இந்த மண்ணில் காலங்காலமாக இருந்து வருகிறது. தமிழர்களுடைய இறை வழிபாட்டில், தெய்வ வழிபாட்டில் முருகனைக் கும்பிடுவது இன்று, நேற்று அல்ல, சங்ககாலம் என்கிற தங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் முருகனை ஆராதித்து வருகிறார்கள். அப்படி ஆராதித்தார்கள் என்பதற்கான அடையாளமாகப் பரிபாடலில் பல பாடல்கள் முருகன் பற்றி வருகின்றன. 

 

சங்க இலக்கியங்களில் பல இடங்களில் முருகனைப் பற்றிய செய்திகள் வருகின்றன. மனிதர்கள் முதன்முதலில் மலையில் தான் பிறந்தார்கள். அப்படியென்றால், இந்த மலை அன்றைக்கு அழகாக இருந்தது. மலைகள் தோறும் பச்சை மரங்கள் நின்றன. பவள ஊற்றுகள் வடிந்து கொண்டிருந்தது. துள்ளி ஓடியது புள்ளி மான்கள். மலை இவ்வளவு அழகாக இருக்குமானால் இந்த மலையைப் படைத்த மகேசன் எவ்வளவு அழகாக இருப்பான் என்று, ஒரு அழகான சிலையைச் செய்து அதற்கு முருகன் என்று பெயர் சூட்டி தமிழர்கள் வழிபடத் தொடங்கினார்கள்" எனத் தெரிவித்தார்.