ADVERTISEMENT

கவனமுடன் இருக்கவேண்டிய காலகட்டம்!

03:43 PM Apr 12, 2019 | Anonymous (not verified)

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சராசரி மனிதன் தன் அன்றாட வாழ்க்கையை நடத்துவதென்பது கடினமாக உள்ளது. அதுமட்டுமின்றி வேலைக்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சைக்கிளில் சென்றவர் பைக்கில் செல்கிறார். பைக்கில் சென்றவர் காரில் செல்கிறார். நடைப்பயணம் மேற்கொண்டவர் ஆட்டோவில் பயணிக்கிறார். பொருளாதார நெருக்கடி எனக்கூறிவிட்டு, வாழ்க்கைத்தர உயர்வைக் கூறுகிறேன் என எண்ண வேண்டாம். நேரத்தை மிச்சப்படுத்த, உரிய நேரத்தில் நினைத்த இடத்திற்குச் சென்றடையத்தான் இந்த மாற்றங்கள்.

ADVERTISEMENT



தற்போதுள்ள சூழ்நிலைகளில் வாகனங்களின் சத்தமும், அவற்றால் உண்டாகும் மாசுக்களும் மூச்சையே நிறுத்திவிடும்போல இருக்கிறது. யார் எங்கு செல்கிறார்கள்- எதற்காகப் பயணிக்கிறார்கள் என ஒன்றுமே புரியவில்லை. அதுமட்டுமின்றி காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பும் ஒருவர் நல்லபடியாக வீடுவந்து சேர்ந்தால்தான் அன்றைய தினம் உண்மையாக வாழ்ந்ததற்கு அடையாளமாக இருக்கிறது. எத்தனை விபத்துகள்- எத்தனை உடலுறுப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலைகள்... என்ன கொடுமையிது என நினைத்து மனம் பதைக்கத்தான் செய்கிறது.

நவகிரகங்கள்தான் நம்மை ஆட்டுவிக்கின்றன. இப்படி விபத்துகளை சந்தித்து வாழ்க்கையையே இழக்கக்கூடிய அவலம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் ஜனன ஜாதகத்தில் அமையப் பெற்றவர்களுக்கு ஏற்படும் என பார்த்தோமானால், ஒருவருக்கு ஜென்ம லக்னமும் சந்திர லக்னமும் பலமாக இருப்பது அவசியம். ஜென்ம லக்னத்தைக் கொண்டுதான் அவரின் உடலமைப்பு, ஆயுள், ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். ஜென்ம லக்னமும் சந்திர லக்னமும் பலமாக அமைந்துவிட்டால் அவரின் உடலமைப்பு, ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதுவே ஜென்ம லக்னத்தை பாவ கிரகங்கள் சூழ்ந்திருந்தாலும், சனி போன்ற பாவ கிரகங்கள் பார்வை செய்தாலும், லக்னாதிபதி பலவீனமாக இருந்தாலும் அந்த ஜாதகருக்கு உடலில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படக்கூடிய நிலை, நல்ல நிலையிலிருந்தாலும் ஏதாவது ஒரு விபத்தின்மூலம் உடலுறுப்புகளை இழக்கக்கூடிய அவலம் உண்டாகும்.

ADVERTISEMENT



ஜனன ஜாதகத்தில் 6-ஆம் இடம் ருண, ரோக ஸ்தானமாகும். 8-ஆம் இடம் ஆயுள், ஆரோக்கிய ஸ்தானமாகும். 6, 8-ல் பாவ கிரகங்கள் அமையப்பெற்று சுபர் பார்வையின்றி இருப்பது நல்லதல்ல. குறிப்பாக, நவகிரகங்களில் செவ்வாய் ரத்த காரகனாவார். சனி மந்தகாரகனாவார்.அவர் உடல் உறுப்புகளுக்கும் அங்கஹீனங்களுக்கும் காரகம் வகிக்கிறார். செவ்வாய் ரத்த காயங்கள், வெட்டுக்காயங்கள், ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு காரகம் வகிக்கிறார். பொதுவாகவே சனி, செவ்வாய் சேர்க்கைப்பெற்று 6, 8-ல் இருந்தாலும், 6, 8-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும், சனி- செவ்வாய் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டலும் எதிர்பாராத விபத்துகளை சந்திக்க நேரிட்டு, ரத்தகாயங்கள், உடலுறுப்புகளில் பாதிப்பு போன்றவை உண்டாகிறது. குறிப்பாக சனி- செவ்வாய் சேர்க்கைப் பெற்றவர்களுக்கு சனி தசை- செவ்வாய் புக்தி, செவ்வாய் தசை- சனி புக்திக் காலங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன.

சனி அல்லது செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று 6, 8-ல் இருந்தாலும், மூவரும் இணைந்து 6, 8-ல் இருந்தாலும், 6, 8-ஆம் அதிபதிகளுடன் சேர்க்கைப்பெற்று சனி, செவ்வாய், ராகு ஆகியவர்களில் இருவர் இருந்தாலும், அக்கிரகங்களில் ஒருவரின் தசையில் மற்றொருவரின் புக்திக் காலங்களில் விபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. சனி, செவ்வாய், ராகு ஆகிய கிரகங்கள் சேர்க்கைப் பெற்று 6, 8-ல் அமைந்தால் போர் மற்றும் அசம்பாவிதம் போன்றவற்றாலும் ஆயுதத்தாலும் மரணம் ஏற்படும். சூரியன், செவ்வாய் 6, 8-ல் இருந்தால் இடி, மின்னல், நெருப்பு மற்றும் உஷ்ணம் சம்பந்தப்பட்டவற்றால் மரணம் உண்டாகும். வாகனகாரகன் என வர்ணிக்கப்படும் சுக்கிரன்- சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்களின் சேர்க்கைப் பெற்று 6, 8-ல் இருந்தால் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT