ADVERTISEMENT

மூர்த்தியை ஒருமுறை வழிபட்டாலே போதும்

11:15 AM Feb 20, 2019 | Anonymous (not verified)

வரலாற்றுப் புகழ்மிக்க வள்ளல் பாரி ஆட்சிசெய்த இடம் பிரான்மலை. பறம்பு மலை என்பதே பிரான்மலை என்று மருவியது. வள்ளல் பாரியின் மனம் கவர்ந்த உயர் பண்பாளர் புலவர் கபிலர். அவர் பறம்பு மலையில் பலகாலம் பாரியோடு வாழ்ந்ததால் பறம்புமலை தமிழ்ப்பதியாகவும் சிறந்தது.வெள்ளை எருக்கு மலரையும் தனக்குரியதாக ஏற்றுக்கொண்ட பேரருளாளன் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மலை.இத்தகைய பெருமை வாய்ந்த பிரான்மலை ஏழாம் நூற்றாண்டில் "திருக்கொடுங்குன்றம்' என்று அழைக்கப்பட்டிருப்பதை திருஞானசம்பந்தர் பதிகத்தால் அறிய முடிகிறது. திருநாவுக்கரசு சுவாமிகள் "கொடுங்குன்றன் காண், கொல்லை ஏற்றினான் காண்' என திருவாரூர் திருத்தாண்டகத்தில், இத்தல சிவபெருமானை வந்தனை செய்துள்ளார். சுந்தரமூர்த்தி நாயனார் "கொடுக்கிலாதானைப் பாரியே கூறினும் கொப்பாரில்லை' என வள்ளல் பாரியைப் புகழ்வதன்மூலம் இத்தலத்தை நினைவுகூர்கிறார். இங்கு வருகை புரிந்த அருணகிரிநாதருக்கு இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் திருநடனம் செய்து காட்சி தந்தருளியதாக வரலாறு.

ADVERTISEMENT

இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை திருக்கொடுங்குன்றநாதர் என்று அழைக் கின்றனர். 2,500 அடி உயரமுள்ள இந்த மலையை சங்கப்புலவர் கபிலரும் போற்றி யுள்ளார்.பாதாளம், பூமி, கயிலை என மூன்று பகுதிகளாக விளங்குகிறது ஆலயம். அதாவது மலையின் அடிவாரத்தை பாதாளமாகவும், அதற்கு மேல்பகுதியை பூமியாகவும், அதற்கும் மேலான உச்சிப் பகுதியை கயிலையாகவும் கொண்டுள்ள அமைப்பு வித்தியாசமானது. இம்மூன்று பகுதி திருக்கோவில்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய திருச்சுற்று மதில் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு சுந்தர பாண்டியன் திருமதில் என்று பெயர். இங்குள்ள மூன்று கல்வெட்டுகளில் "பாரீசுவரம்' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரீசுவரர் என்னும் பெயர் 12 மற்றும் 13-ஆம் நூற் றாண்டுகளில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளில்தான் இடம்பெற்றுள்ளது.மலையின் அடிவாரத்தில் தென்மேற்கு மூலையில் துவங்குகிறது பாதை. வழியில் மேற்கு முகமாகக் கட்டப்பட்டுள்ள துரைராஜா மண்டபத்தை அடைந்ததும், வடக்குப் பகுதி மதிலுக்குரிய திருக்கோவிலின் பிரம்மாண்டமான பிரதான வாசல் உள்ளது. அதைக் கடந்ததும், கோவிலின் தெற்கு மதிலுக்கும், வடக்குப் பகுதி மலையின் அடிவாரப் பாறைக்குமிடையே, கல்தளம் கொண்ட கிழக்குக் கோடியில் மது புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. இது தேனடி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.முக மண்டபத்தில் நந்தி கம்பீரமாய் காட்சி தருகிறது. மகா மண்டபத்திற்குள் நந்தி, பலிபீடம், சூரிய பிரபை ஆகியவை உள்ளன.

ADVERTISEMENT

பாரிவள்ளல் முல்லைக்கொடிக்குத் தேரளித்த காட்சி சுதைச்சிற்பமாக உள்ளது.மேற்கே லட்சுமி மண்டபமும், கிழக்கே மங்கைபாகர் ஆறுகால் மண்டபமும் உள்ளன. மங்கைபாகரின் திருக்கோலத்தைக் காண வருகைதந்த தேவர்கள் கூடியமர்ந்த இடம் தேவசபா மண்டபம் என்று அழைக் கப்படுகிறது. பாறையைக் குடைந்து நீண்ட சதுர வடிவில் தூண்களே இல்லாத வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடைவரையில், பாறையிலேயே செதுக்கி உருவாக்கிய அம்மையப்பர் திருமணக் கோலத்துடன் காட்சி தருவதால் தென் கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. இது காய்ச்சல் போக்கும் தலமாகவும், மகப்பேறு அருளும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. பரிகாரம் மகா மண்டபத்தின் மேற்கே மூன்று திருமுகங்கள், நான்கு கரங்கள், மூன்று பாதங்கள் கொண்ட சிறப்புமிக்க சிலாரூபத்தை ஜ்வரபக்த மூர்த்தி என்று கூறுகிறார்கள். கொடுமையான, தீராத காய்ச்சல் உள்ளவர்கள் இம்மூர்த்தியை ஒரே ஒருமுறை வழிபட்டாலே போதும்; எத்தகைய காய்ச்சலும் குணமாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் தேனடி தீர்த்தத்தில் நீராடி கொடுங்குன்றநாதரை தரிசித்தால் மகப்பேறு வாய்க்கும்; தீராத நோய்கள் உடனடியாக அகலும்; செல்வமும் செல்வாக்கும் சேரும் என்பது ஐதீகம்.மதுரை- சிங்கம்புணரியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிரான்மலை. பேருந்து வசதி உண்டு.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT