ADVERTISEMENT

மகிழ்ச்சியான மணவாழ்க்கை!

04:22 PM May 10, 2019 | Anonymous (not verified)

மாறுபட்ட சூழலில் வளர்ந்துவந்த இரண்டு தனி மனிதர்கள், வாழ்நாள் முழுவதும் ஒன்றிணைந்து வாழ அமைக்கப்படும் அடித்தளம் திருமணமாகும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ பணம் தேவையில்லை. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் மனம் இருந்தால்போதும். "வாழ்ந்தால் அவர்களைப்போல வாழவேண்டும்' என மற்றவர் உதாரணம் கூறுவதற்கேற்ப வாழ்ந்துகாட்ட வேண்டும். எந்தப் பிரச்சினைகளுக்கும் இடம்கொடுக்காமல் அன்போடு வாழும் குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகளின் மனநிலையும் சிறப்பாக அமையும் என்பது அறிவுப்பூர்வமான உண்மை.

ADVERTISEMENT



ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுடன், இன்ப- துன்பங்களை சமமாக ஏற்று, குடும்பத்தை நல்லவழியில் நடத்திச் செல்வதன் மூலமே அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது குடியேறும். "வாழ்வது ஒருமுறை; வாழ்த்தட்டும் தலைமுறை' என்பதைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.திருமணம் என்ற பந்தத்தை அமைப்பதற்கு முன்னர் ஆண்- பெண் இருவருடைய பிறந்த ஜாதகங்ளின் கிரக நிலைகளை ஆராய்ந்து, அவையிரண்டும் இருவரின் மனமொத்த வாழ்க்கைக்குத் துணைவருவதாக இருந்தால் மட்டுமே இணைத்துவைப்பது நல்லது. இருவரின் ஜெனன ஜாதகத்திலும் மணவாழ்க்கைக்கு ஏற்ற கிரகங்களின் ஆதிக்கங்கள் பலமாக இருந்தல் மிகவும் அவசியம்.

ஜோதிடமும் சிறப்பான வாழ்க்கையும்

இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு, ஜென்ம லக்னத்திற்கோ சந்திரா லக்னத்திற்கோ 7-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர ஸ்தானமான 1, 4, 7, 10-ஆம் வீடுகளிலோ, திரிகோண ஸ்தானங்களாகிய 1, 5, 9-ஆம் வீடுகளிலோ அமையப்பெறுவது நல்லது.

நவகிரகங்களில் சுபகிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடியவை குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், சுபர் சேர்க்கைப்பெற்ற புதன் ஆகியவை ஆகும். சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது, தேய்பிறைச் சந்திரன், பாவிகள் சேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவை பாவகிரகங்களாகும். மணவாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சுபர் இருப்பது, பார்ப்பது, 7-ஆம் அதிபதி சுபர் சேர்க்கைப் பெறுவது, சுபர் நட்சத்திரங்களில் அமைவது போன்றவை முக்கியம்.

7-ஆம் அதிபதி பாவியாக இருக்கும்பட்சத்தில் சுபர் நட்சத்திரத்தில் அமைவதும், சுபர் பார்வையுடனிருப்பதும், சொந்தவீட்டில் அமைவதும் கெடுதியில்லை. 7-ஆம் அதிபதி, களத்திரகாரகனான சுக்கிரன் ஆகியோர் கிரகச் சேர்க்கையின்றி தனித்து அமையப்பெற்று சுபர் நட்சத்திரத்தில், சுபர் பார்வையுடன் இருப்பது நல்லது.

ஒரு ஜாதகத்தில் எந்தவொரு ஸ்தானத்திற்கும் சுபகிரகப் பார்வை இருப்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக "குரு பார்வை கோடி புண்ணியம்' என்பார்கள். குரு பகவான் தான் இருக்கும் இடங்களிலிருந்து 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களைப் பார்வை செய்வார். குரு பார்வை பெறும் பாவங்களுக்கு எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும் அதன் கெடுதிகள் அனைத்தும் விலகி நற்பலன்கள் உண்டாகும். இவ்வளவு மகத்துவங்களைப் பெற்ற குருவின் பார்வை ஜென்ம லக்னத்திற்கோ, 7-ஆம் வீட்டிற்கோ, 7-ஆம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ அமையுமானால் மணவாழ்க்கையானது மிகவும் சிறப்புவாய்ந்ததாக இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT