ADVERTISEMENT

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அறப்போராட்டம் வெல்லட்டும்! - சீமான் வாழ்த்து

12:15 PM Oct 15, 2018 | rajavel



யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் வெற்றிபெற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்களப் பேரினவாத இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கிற அறப்போராட்டம் பெரும் மகிழ்வினைத் தருகிறது.


ஈழப்போர் நிறைவுற்று பத்தாண்டுகளைக் கடக்கப் போகிற நிலையில் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டிருக்கிற தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் சிறையிலே வைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்.


பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எனும் பெயரில் கொடுஞ்சட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தங்களது விடுதலைக்காகத் தொடர் பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். அதற்கு வலுசேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் நடைப்பயண போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.

ADVERTISEMENT

எமது போராட்ட வடிவங்கள் மாறலாம்; ஆனால், போராட்ட இலட்சியம் ஒருபோதும் மாறப்போவதில்லை எனும் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புரட்சிகர மொழிகளுக்கேற்ப அன்னைத் தமிழ் சொந்தங்களின் விடுதலைக்காக அறப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிற தமிழ் இளையோர் கூட்டத்தின் போர்க்குணத்தினையும், போராட்ட உணர்வினையும் கண்டு உள்ளம் பூரிப்படைகிறேன்.

சர்வதேச விதிகளுக்கு மாறாக சிறைக்கொட்டடிக்குள் வதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற 107 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிக்கை என்பது மிக மிகத் தார்மீகமானது. அதனை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிற யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இணைந்திருக்கிற கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT