Skip to main content

டாஸ்மாக் கடையை மூடு... ஆற்றில் குதித்த மாணவர்கள்

Published on 01/08/2018 | Edited on 27/08/2018
Students struggle



தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பணிகொண்டான் விடுதி ஊாராட்சியில் கல்லனை கால்வாய் ஓரமாக முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென இரு டாஸ்மாக் கடைகளை கடந்த ஜூலை 7ந் தேதி திறந்தார்கள். அந்த பகுதியில் மாணவ மாணவிகள் அதிகம் செல்லும் பகுதி என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் முதல் டாஸ்மாக் நிர்வாகம் வரை மனு அளித்தும் அந்த மனுக்களை தூக்கிவீசிவிட்டு கடைகள் திறக்கப்பட்டதால் 9 ந் தேதி காலை  மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் 500 பேர் கலந்து கொண்ட சாலை மறியல் போராட்டம் நடந்தது. 
 

 

 

சுமார் 3 மணி நேரம் நடந்த சாலைமறியல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் போராடிய மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதாக ஒப்புதல் அளித்து எழுதிக் கொடுத்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. 
 

டாஸ்மாக் கடைகள் அகற்றுவது தொடர்பான கோப்புகள் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் சென்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் அந்த கோப்பு பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் வைத்திலிங்கம் எம்.பி க்கு வேண்டிய நபர்களான மாஜி மாவட்ட பொருளாளர் மதியழகன் மகன் ரமேஷ், மற்றும் அ.தி.மு.க பிரமுகர்கள் தாமரைச்செல்வன், ரவி ஆகியோர் அனுமதி இல்லாத பார் நடத்துவதால் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மறுப்பதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள்.
 

 

 

 அதனால் நிரந்தரமாக கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி 4 கிராம மக்களுடன் மாணவர்களும் மீண்டும் போராட்ம்  நடத்துவதாக அறிவித்தனர்.  மேலும்.. இதே கோரிக்கையை வலியுறுத்தி பணிக்கொண்டான்விடுதி, மேலஊரணிபுரம், கீழஊரணிபுரம் மற்றும் சிவவிடுதி கிராமத்தை சேர்ந்த அஇஅதிமுக நிர்வாகிகள்  கிளை செயலாளர்கள்  சி.மதியழகன்,  எம்.மார்க்கண்டன், பிரதிநிதிகள் எம்.சேகர், ஆர்.கார்த்திகேயன், ஆ.ஜெயக்குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் பெண் உறுப்பினர்களும் தங்களின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதுடன். 500 க்கும் மேற்பட்டோர் தங்களின் அடைப்படை கட்சி உறுப்பினர் அட்டை யையும், தாங்கள் அனிந்து வந்த வேஷ்டி, புடவைகளையும் 26/07/2018 அன்று நடைபெறும் மதுபான கடைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு சாலையில் தீ வைத்து கொளுத்துவோம் என்றும் அறிவித்தனர். 
 

இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து 26 ந் தேதி காலை ஒரு டாஸ்மாக்  கடை பூட்டப்படுவதாகவும் மற்றொரு கடைக்கு கால அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் போராட்டக்குழுவிடம் பேசப்பட்டது. ஆனால் மாணவர்கள், விவசாயிகளின் நலன் கருதி இரு கடைகளையும் பூட்டிவிட்டு வந்தால் போராட்டம் கைவிடப்படும் என்று பதில் கூறினார்கள். அதனால் மாணவர்கள், விவசாயிகள் கூடவிடாத அளவிற்கு போலிசாரை கொண்டு வந்து குவித்தனர். ஆனால் அதையும் கடந்து மாணவர்கள் பள்ளி சீருடையுடன் போராட்டக் களத்திற்கு வந்து குவிந்துவிட விவசாயிகளும் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர். 
 

அப்போது அங்கு வந்த அதிகாரிகள் முதலில் பூட்டுவதாக சொன்ன கடையையும் திறந்து வைத்துவிட்டு பிறகு பூட்டுவதாக சொன்னதுடன் போராட்டத்தில் இருந்தவர்களை கைது செய்தனர். அதனால் மாணவர்கள் எங்களையும் கைது செய்யுங்கள் என்று முன்னால் செல்ல மாணவர்களை விட்டுவிட்டு பெற்றோர்களை கைது செய்த்தால் பல மாணவர்கள் ஆற்றில் குதித்தனர். அவர்களை பொதுமக்களும் போலிசாரும் கரை ஏற்றினார்கள். 
 

 

 

ஆனாலும் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக இல்லை. கைது செய்யப்பட்டவர்களை மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர். எத்தனை முறை கைது செய்தாலும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்கின்றனர் போராட்டக்குழுவினர். மாணவர்களும் சாராயக்கடைக்கு எதிராக பள்ளி செல்வதையும் நிறுத்த தயாராக இருக்கிறோம் என்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவாத்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மாணவர்கள் நலனைவிட டாஸ்மாக் கடைகள் மீது தான் அதிக பற்று கொண்டுள்ளனர் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும்.  

 


 

சார்ந்த செய்திகள்