ADVERTISEMENT

பட்டினியில் வடகொரியா... உண்மையை ஒப்புக்கொண்ட கிம் ஜாங்!

08:29 AM Jun 18, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகொரியாவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பல லட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் கிடப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கிம் ஜாங் உன் அதிபராக உள்ள வடகொரியா நாட்டில் என்ன நடக்கிறது என்பது அவ்வளவு எளிதில் வெளி உலகத்திற்குத் தெரியாது. இதற்கு முன்பே பல சர்ச்சைகளுக்குப் பெயர் போனது வடகொரியா. அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் இறந்ததாக கூட சிலமுறை தகவல்கள் வெளியாகி, இறுதியில் அவை பொய்யாய் போகின. இந்நிலையில், தற்போது வடகொரியாவில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவுவதாகவும், அதனால் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் தவிப்பதாகவும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ணும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டே கரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் பிறப்பித்திருந்தார். இதனால் சீனாவில் இருந்து வடகொரியா பெற்றுக்கொண்டிருந்த உதவிகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து விவசாயப் பொருட்கள், உரங்கள் போன்ற உதவிகள் வடகொரியாவுக்கு கிடைக்காமல் தடைப்பட்டன. அதேபோல், புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்தது. இதனால் தற்போது அங்கு உணவுப் பஞ்சம் தலைக்கேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்காச் சோளம், அரிசி ஆகியவற்றை முதன்மை உணவாக எடுத்துக்கொள்ளும் அந்நாட்டு மக்கள், உணவுக்காக தவித்துவருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது அரிசிக்கு அங்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 15 லட்சம் டன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக ஒரு கிலோ வாழைப்பழம் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 3,300 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் பல்வேறு உணவுப் பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் (16.06.2021) வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக முதல்முறையாக நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்பே 1990ஆம் ஆண்டு உணவுப் பஞ்சத்தில் சுமார் 30 லட்சம் பேரை வடகொரியா இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT