ADVERTISEMENT

அதிர்ச்சியளிக்கும் அரச குடும்ப விவகாரங்கள்... பரபரப்பை ஏற்படுத்திய ஹாரி, மேகன் பேட்டி!

05:21 PM Mar 08, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் தம்பதி கடந்தாண்டு அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு சர்வதேச அரசியல்வாதிகள் மட்டும் பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கையும் வெளியிட்டது. இருப்பினும் அவர்களது முடிவுக்கு மதிப்பளித்து, அரச குடும்பத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது.

அதன்பிறகு அவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று ஹாரி - மேகன் தம்பதி, அமெரிக்க ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்தனர். அப்போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்தப் பேட்டியில் மேகன், தான் கர்ப்பமாக இருந்த காலத்தில், குழந்தை பிறக்கும்போது அதனுடைய தோல் எந்தளவு கருப்பாக இருக்கும் என அரச குடும்பத்தில் விவாதங்கள் எழுந்ததாகக் கூறியுள்ளார். மேகன் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தங்களது குழந்தைக்குப் பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் கிடைக்காது போன்ற பேச்சுகளும் எழுந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச குடும்பம் பொய் கூறியதாக தெரிவித்துள்ள மேகன், தான் பாதுகாக்கப்படவில்லை என்றும், அரச குடும்பம், மற்ற குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற பொய் சொல்ல தயாராக இருந்ததாகவும், தன்னையும் தன் கணவரையும் பாதுகாக்க அவர்கள் உண்மையைச் சொல்ல தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நான் மனநல சிகிச்சை பெற வேண்டுமென குடும்பத்தின் மூத்தவர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு, அது அரச குடும்பத்திற்கு நல்லதல்ல எனக் கூறியதாக மேகன் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்பு தன்னை அழவைத்துவிட்டதாக ஹாரியின் அண்ணன் மனைவி, தன் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மேகன், அவர்தான் தன்னை அழவைத்தாகக் கூறியுள்ளார்.

அதிகாரப்பூர்வமாக திருமணம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, ஹாரிக்கும் தனக்கும் இரகசியமாக திருமணம் நடைபெற்றதாகவும் மேகன் தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டியில் பேசிய இளவரசர் ஹாரி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, தனது தந்தை சார்லஸ், தனது ஃபோனை எடுப்பதில்லை எனக் கூறியுள்ளார். மேலும், கடந்த வருடம், அரச குடும்பம் தனக்கு அளித்துவந்த நிதியை நிறுத்திவிட்டதாகவும், அதன்பிறகு தனது தாய் டயானா தனக்கு விட்டுச் சென்ற பணத்தைச் சார்ந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT