ADVERTISEMENT

“ஒவ்வொரு கடைசி நபரையும் நாங்கள் வேட்டையாடுவோம்” - இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை

07:43 AM Oct 13, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 7 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரமெங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது; கட்டடங்கள் நிலைகுலைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட, அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இஸ்ரேலை சேர்ந்த ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானவர்களை ஹமாஸ் அமைப்பு பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது. மேலும், காசா மீது நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒவ்வொரு பிணைக்கைதி கொல்லப்படுவார் என்று ஹமாஸ் கூறியிருக்கிறது.

இதையடுத்து பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காசாவிற்கு மின்சாரம் வழங்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. காசாவில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே வான்வழி தாக்குதலுடன் காசா மீது தரை வழி தாக்குதலையும் தொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்காக எல்லைப் பகுதியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இஸ்ரேல் அரசு நிறுத்திவைத்துள்ளது. தரை வழி தாக்குதலுக்கு தயாராக இருக்கிறோம்; அரசு உத்தரவு கொடுத்தால் காசா மீது தாக்குதலை தொடங்குவோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சிறுவர், சிறுமிகளை கையை பின்னால் கட்டி தலையில் சுடுவது, மக்களை உயிருடன் எரித்து கொல்வது, பெண்களை கற்பழிப்பது, ராணுவ வீரர்களின் தலையை துண்டித்து கொடூரமாக கொல்வது போன்ற செயல்களில் ஹமாஸ் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டினார். மேலும், ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 31 நேட்டோ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் மாநாட்டில் பேசிய இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கல்லன்ட் ஹமாஸ் என்பது காஸாவின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு; நாங்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் படை ஹமாஸை அழிக்கும்; ஹமாஸில் இருக்கும் ஒவ்வொரு கடைசி நபரையும் நாங்கள் வேட்டையாடுவோம்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT