50 thousand pregnant women are suffering without food and drinking water in Gaza

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 7 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

Advertisment

காசாவிற்கு கொடுக்கும் பதிலடி ஹமாஸ் அமைப்பிற்கு மட்டுமல்ல, நமது எதிரிகள் கூட மறக்க முடியாத நினைவாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரமெங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது; கட்டடங்கள் நிலைகுலைந்துள்ளன.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட, அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இஸ்ரேலை சேர்ந்த ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானவர்களை ஹமாஸ் அமைப்பு பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது. மேலும், காசா மீது நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒவ்வொரு பிணைக்கைதி கொல்லப்படுவார் என்று ஹமாஸ் கூறியிருக்கிறது.

இதையடுத்து பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காசாவிற்கு மின்சாரம் வழங்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. காசாவில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே வான்வழி தாக்குதலுடன் காசா மீது தரை வழி தாக்குதலையும் தொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்காக எல்லைப் பகுதியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இஸ்ரேல் அரசு நிறுத்திவைத்துள்ளது. தரை வழி தாக்குதலுக்கு தயாராக இருக்கிறோம்; அரசு உத்தரவு கொடுத்தால் காசா மீது தாக்குதலை தொடங்குவோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் காசா நகரில் 50, ஆயிரம் கர்ப்பிணிகள் மோசமானசூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரில் 50 ஆயிரம் கர்ப்பிணிகள் உணவு, குடிநீர், சுகாதாரம் என அடிப்படை தேவையின்றி தவித்து வருகின்றனர்.மிக மோசமான சூழ்நிலையை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இது போன்ற ஒரு மோசமான சூழலை கடந்த 10 ஆண்டுகளாக பார்த்ததில்லை என்று வேதனை தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இது வரை 40 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். காசா நகரத்தில் நிவாரணப் பணிகளைமேற்கொள்ள ரூ.2,400 கோடிக்கு மேல் தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.