ADVERTISEMENT

கபடி விளையாடியபோது வீரருக்கு நேர்ந்த சோகம்

01:14 PM Jul 26, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள மானடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கபடி குழு சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 63 அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் பெரியகுரங்கணி அணியும், கீழக்குப்பபம் அணியும் மோதின. இதில் பெரிய குரங்கணி அணிக்காக அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் என்கிற விமல்ராஜ் (வயது 22) கலந்துகொண்டு விளையாடினர்.

கபடி விளையாட்டின் பரபரப்பான கட்டத்தில் விமல்ராஜ் ரெய்டு சென்றார். அவரை எதிரணியினர் பிடிக்க முயன்றனர். உடனே விமல்ராஜ் அவர்களிடமிருந்து பிடிபடாமல் இருக்க துள்ளிக்குதித்து தாவினார். அப்போது கீழே விழுந்த அவரை எதிர் அணியை சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் மடக்கினார். அப்போது அவரது கால் விமல்ராஜ் தொண்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் இருந்தது. உடனே விமல்ராஜ் எழுந்திருக்க முயன்றார் ஆனால் அவரால் எழுந்திருக்க முடியாமல் திடீரென சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா, முத்தாண்டிக்குப்பம் காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கபடி விளையாட்டின் போது வீரர் சுருண்டு விழுந்து இறந்ததால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. உயிரிழந்த வீரர்க்கு கல்லூரி மாணவர்கள், கபடி வீரர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.


விமல்ராஜ்க்கு சிறுவயதிலேயே கபடி விளையாட்டு மீது அதீத ஆர்வம் இருந்தது. தீவிர பயிற்சி மேற்கொண்டு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தனது அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். விமல்ராஜ் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள கபடி அகாடமியிலும் பயிற்சி பெற்று வந்தார். விடுதியில் தங்கியிருந்த விமல்ராஜ் மானடிக்குப்பத்தில் நடந்த போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT