Skip to main content

ஏழை எளிய மக்களுக்கு தொடரும் மனிதநேய உதவிகள்... 

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

Continued humanitarian assistance to poor people ...

 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் திட்டக்குடி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிகை ஊடக நண்பர்கள் ஒன்றிணைந்து 'அச்சம் தவிர்' என்ற வாட்ஸ் அப் குழுவை நடத்திவருகிறார்கள். இந்தக் குழுவின் மூலம் பொதுமக்களுக்கான தகவல்கள், உதவிகள், மக்கள் பிரச்சனைகளை அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று அதன்மூலம் தீர்வு காண்பது போன்றவற்றை செய்துவருகின்றனர். 


இந்தக் குழு நண்பர்கள் ஒன்றிணைந்து பெண்ணாடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில், சர்ச், பள்ளிவாசல் போன்ற இடங்களில் பணி செய்யும் அர்ச்சகர்கள், போதகர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்குத் தங்களால் முடிந்த நிவாரண உதவியை செய்வதற்கு முடிவு செய்தனர். அதன்படி குழுவில் உள்ள நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் உதவியுடன் அரிசி, மளிகைப் பொருட்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டு அதை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

 

Continued humanitarian assistance to poor people ...

 

இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சிவகணேசனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி அவர், நேற்று (13.06.2021) மாலை 5 மணி அளவில் பெண்ணாடம் பஸ் நிலையம் அருகில் நிவாரண உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், “தமிழக முதல்வர் கரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தி தமிழகத்தில் யாருக்கும் கரோனா இல்லாத அளவில் கொண்டுவருவதற்கு கடும் முயற்சி செய்துவருகிறார். அது நிச்சயம் நடக்கும். நாம் அனைவரும் நிம்மதி பெறுவோம். முதல்வரின் அனுமதியோடு பெண்ணாடம் பகுதியில் ஒரு மருத்துவமனை, புறவழிச்சாலை ஆகியவற்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை செய்துவருகிறேன். அது நிச்சயம் நடக்கும். நாம் ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையுடன், பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்து பணிகளைச் செய்ய வேண்டும். அதேபோன்று குடும்பத்தில் உள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டும். இதன்மூலம் கரோனாவிலிருந்து அனைவரும் மீண்டு வருவோம்” என்று பேசினார்.

 

Continued humanitarian assistance to poor people ...

 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் சிவ. தியாகராஜன், திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன், நெய்வேலி நில எடுப்பு வட்டாட்சியர் செந்தில்வேல், டி.எஸ்.பி.க்கள் விருத்தாசலம் மோகன், திட்டக்குடி வெங்கடேசன், சப் இன்ஸ்பெக்டர் கமிலா பானு, பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி, அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து நடைபெற்றது. அச்சம் தவிர் குழுவினர் எளிய மக்களுக்கு உதவியது கண்டு அமைச்சர் உட்பட அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்