ADVERTISEMENT

பட்டதாரி வாலிபர் கொடூர கொலை! முகத்தை டேப்பால் சுற்றி, கழுத்தை நெரித்து பெரியப்பா மகன் வெறிச்செயல்!!

05:22 AM Aug 10, 2020 | rajavel

ADVERTISEMENT

சேலம் அருகே, நிலத்தகராறில் சித்தப்பா மகனை கடத்திச்சென்று முகத்தை டேப்பால் சுற்றி, கழுத்தை நெரித்து பெரியப்பா மகனே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள நல்லணம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவருடைய மகன் பூபாலன் (24). எம்.ஏ., பட்டதாரி. அரசுப்பணிக்காக, உள்ளூரில் உள்ள ஒரு தனியார் போட்டித்தேர்வு மையத்தில் படித்து வந்தார்.


ஆகஸ்ட் 7ம் தேதியன்று இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற பூபாலன், அவருக்குத் தெரிந்த சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். நண்பர்களிடம் விசாரித்தபோதும் அவர் எங்கு சென்றார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.


இதையடுத்து பூபாலனின் தந்தை செல்வம், மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை என்றும், சம்பவத்தன்று இரவு சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள்தான் மகனைக் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்து இருந்தார்.


இதுகுறித்து காவல் ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர். இந்நிலையில், சனிக்கிழமை (ஆக. 8) இரவு ரெட்டிமணியக்காரனூர் மண் கரடு பகுதியில் ஒரு கார் கேட்பாரற்றுக் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.


காவல்துறையினர், அந்த காரை சோதனை நடத்தினர். பின் இருக்கையில், ஒரு மூட்டை கிடந்தது. அதைப்பிரித்துப் பார்த்தபோது, கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டும், முகம் பார்சல் கட்டும் டேப்பால் சுற்றப்பட்டு, அரை நிர்வாண நிலையில் ஆண் சடலம் கிடப்பது தெரிய வந்தது. மர்ம நபர்கள், இறந்தவரின் முகத்தை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக முகத்தை முழுவதும் டேப்பால் சுற்றி வைத்திருந்தனர். அதைப் பிரித்து பார்த்தபோது, காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பூபாலன்தான் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது.


சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், பூபாலனின் பெரியப்பா கந்தசாமி மகன் ஏழுமலை (35), கார் உரிமையாளர் ஜெகன் (21), சங்ககிரி மேட்டுக்காட்டைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (26) ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.


கொல்லப்பட்ட பூபாலன் குடும்பத்துக்கும், ஏழுமலை குடும்பத்திற்கும் சில ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வருகிறது. தற்போது செல்வம் புதிதாக வீடு கட்டி வருவதால், அவருடைய மகனைக் கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்டால் சித்தப்பா கொடுத்து விடுவார் என ஏழுமலை கணக்குப்போட்டார்.


அதற்காக அவர், தனது கூட்டாளிகளை துணைக்கு அழைத்துக்கொண்டு பூபாலனை ஆக. 7ம் தேதி இரவு கஞ்சமலை பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு பூபாலன் கத்தி கூச்சல் போட்டார். அதனால் அவர்கள் பூபாலனின் வாய், முகம் என முழுவதுமாக டேப்பால் சுற்றியுள்ளனர். தப்பிச் செல்லாமல் இருக்க கை, கால்களையும் கயிற்றால் கட்டிப்போட்டுள்ளனர்.


அதன்பிறகு அவர்கள் பூபாலனை கழுத்து நெரித்துக் கொலை செய்துவிட்டு, சாக்குப்பையில் மூட்டையாக கட்டி காரின் பின் இருக்கையில் வைத்துவிட்டு, மண் கரடு பகுதியில் அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருப்பது தெரிய வந்தது.


இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். நிலத்தகராறில் சித்தப்பா மகனை பெரியப்பா மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் இளம்பிள்ளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சடலத்தை காரிலேயே வைத்துவிட்டு வந்ததன் நோக்கம் என்ன? இச்சம்பவத்தில் மேலும் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT