ADVERTISEMENT

சிறுவனைக் கடத்திய இளைஞர்! விசாரணையில் அதிர்ச்சித் தகவல்! 

10:40 AM Dec 06, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், திருக்கனூர் அருகே உள்ள மூங்கில்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் உதயன் (20). இவர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவருகிறார். இவர், நேற்று முன்தினம் (04.12.2021) அவரது எதிர்வீட்டைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது ஐந்து வயது மகனை தின்பண்டம் வாங்கித் தருவதாக ஆசை காட்டி திருக்கனூர் டவுனுக்குத் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவு 7 மணியளவில் உதயன் மட்டும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். வீட்டில் இருந்த தனது பாட்டியிடம், ‘மண்ணாடிப்பட்டு - திருக்கனூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் தானும் அன்பழகன் மகன் ஐந்து வயது சிறுவனும் வந்துகொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து என்னைத் தாக்கிவிட்டு சிறுவனை கடத்திச் சென்றனர். அப்போது அந்த மர்ம நபர்கள் ஒரு லட்சம் பணம் கொடுத்தால் சிறுவனை விடுவிப்பதாக கூறிவிட்டு சென்றார்கள்’ எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், சிறுவனின் தந்தை அன்பழகனிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக திருக்கனூர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அத்தகவலின் பேரில் போலீசார் திருக்கனூர் பகுதியைச் சுற்றிலும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். போலீசாருடன் மாணவர் உதயன் கூடவே சென்று தன்னைத் தாக்கிவிட்டு சிறுவனைக் கடத்திச் சென்ற இடம் இது என்று அடையாளம் காட்டியதோடு, அவர்களுடன் சேர்ந்து உதயனும் சிறுவனைத் தேடியுள்ளார்.

இதற்கிடையே, போலீசார் உதயன் பயன்படுத்திவந்த செல்ஃபோனை பறிமுதல் செய்து அந்த ஃபோனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வுசெய்தனர். அப்போது இரவு 8.30 மணி அளவில் அந்த ஃபோனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து போலீசார் பேசியபோது, மறுமுனையில் பெண் ஒருவர் பேசியுள்ளார். அந்தப் பெண் தனது பெயர் பழனியம்மாள் என்றும், தனது வீட்டில் ஒரு சிறுவனைப் கொண்டுவந்து விட்டுவிட்டு பிறகு வந்து அழைத்துச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற உதயன் இன்னும் வந்து சிறுவனை அழைத்துச் செல்லவில்லை என்பதற்காக ஃபோன் செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரிடம் விவரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்ட போலீசார், நேரடியாக அந்த வீட்டுக்குச் சென்று பழனியம்மாள் வீட்டில் இருந்த சிறுவனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து அவரது பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர். மேலும், உதயன் சிறுவனைக் கடத்திவிட்டு, மர்ம நபர்கள் என்று நாடகமாடியுள்ளார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து உதயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புதிய செல்ஃபோன் வாங்கப் விரும்பியதாகவும், அதற்குப் பணம் கிடைக்காததால் சிறுவனைக் கொண்டுபோய் ஒரு வீட்டில் விட்டுவிட்டு, பணம் கேட்டு கடத்தல் நாடகம் நடத்தி அதன் மூலம் வரும் பணத்தில் செல்ஃபோன் வாங்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கத்தில் சிறுவனைக் கடத்தியதாக கல்லூரி மாணவர் உதயன் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT