Skip to main content

சீட்டு மோசடி; ஒன்றரை கோடியை இழந்த அப்பாவி பொதுமக்கள்! 

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

people lost  One and a half million

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள கண்டமநல்லூர் ஊரை சேர்ந்தவர்கள் ஏழுமலை, மணவாளன், லோகு, சுமதி, மகாலட்சுமி, வரதராஜன், மீராபாய் இவர்கள் ஏழு பேரும் கூட்டாக சேர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு முதல் மாதாந்திர ஏல சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் செஞ்சி அருகில் உள்ள மேல்மலையனூர், கண்டமனல்லூர், சமத்தகுப்பம், மேல் காரணை, கங்கபுரம், அன்னமங்கலம், சீயமங்கலம், வளத்தி உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து மாதந்தோறும் இவர்களிடம் பணம் செலுத்தி வந்தனர். 

 

இதில் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் முதல் 12 லட்சம் வரை பணத்தை செலுத்தி உள்ளதாக கூறப்படுறது. சீட்டுப் பணம் செலுத்தியவர்களுக்கு அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மேற்படி ஏழு நபர்களும் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பணத்தை பறிகொடுத்த மக்கள் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதாவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி.. உத்தரவிட்டார். 

 

அதன்படி மணவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், விசாரணை நடத்தி அவர்களை கைது செய்வதற்காக தேடி வந்தனர். இந்த நிலையில் மணவாளன், ஏழுமலை, வரதராஜன் ஆகிய மூன்று பேரையும் மேல்மலையனூர் அருகில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் ஒரு கோடியே 38 லட்சம் சீட்டு பணம் மற்றும் மூன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நகை ஆகியவற்றை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தலைவராக உள்ள லோகு, சுமதி மகாலட்சுமி, மீராபாய் ஆகிய நால்வரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த மோசடி கும்பலுக்கு தலைமை வகித்த மணவாளன் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அதனால் அவர் மீது நம்பிக்கை வைத்து சுற்றுப்பட்டு கிராம மக்கள் சீட்டு பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்