ADVERTISEMENT

போலீஸை ஓட ஓட விரட்டிய போதை ஆசாமிகள்

11:55 AM Aug 23, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர்களை விசாரிக்கச் சென்ற காவலரைக் கஞ்சா போதையில் இளைஞர்கள் விரட்டி அடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திருமாவளவன் என்பவர் நேற்று முன் தினம் அப்பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்குச் சென்றுள்ளார். அப்போது, கஞ்சா போதையிலிருந்த மூன்று பேர் திருமாவளவனை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். ஆனால், தன்னிடம் பணம் இல்லை எனத் திருமாவளவன் கூற, போதையிலிருந்த இளைஞர்கள் அவரைத் தாக்கியதோடு, ஆபாச வார்த்தையில் பேசியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த திருமாவளவன் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு விசாரிக்கச் சென்றார்.

அப்போது போதையிலிருந்த இளைஞர்கள் விசாரிக்க வந்த காவலர் சரவணனை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவரைக் கத்தியைக் காட்டி விரட்டியுள்ளனர். அந்த காவலரிடம் லத்தி இருந்தும் திரும்பி ஓடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி போலீசார், கத்தியைக் காட்டி போலீஸை மிரட்டிய, போதையில் அட்டகாசம் செய்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி(19), சூர்யா(20), சந்தோஷ்(19) மற்றும் இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேரை மடக்கிப் பிடித்துக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் பிடிபட்ட 5 பேரும் மாங்காடு, கோவூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாகச் செல்பவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், செல்போன், நகை, பை உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும் மாங்காடு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட செல்போன், நகை உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்த மாங்காடு போலீசார் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT