ADVERTISEMENT

வீட்டுக்குள் புகுந்த இளம்பெண்; மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

04:19 PM Oct 05, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது கொல்லங்குடி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. 70 வயதான இவர், தனது கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், லட்சுமிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேற்படி இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில், மூதாட்டி லட்சுமி கொல்லங்குடியில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

மேலும், வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டி லட்சுமியை அவரது மகன்களும் மகளும் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 3 ஆம் தேதியன்று மூதாட்டி லட்சுமி தனது உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மதியம் ஒரு மணியளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அந்த நேரத்தில், மூதாட்டி லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இத்தகைய சூழலில், சிறிது நேரம் கழித்து 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மூதாட்டி லட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, நீங்கள் யார் என்று லட்சுமி அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு, தான் உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வாங்கிக் கொடுக்க வந்திருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், நீங்கள் கைம்பெண்ணாக இருந்தால் கூடுதலாக 500 ரூபாய் பெற்றுத் தருவதாகக் கூறி தொடர்ந்து பேச்சு கொடுத்துள்ளார்.

ஒருகட்டத்தில், இதை நம்பிய மூதாட்டி லட்சுமி அந்த பெண்ணை வீட்டுக்குள் அழைத்து அமர வைத்துள்ளார். இதற்கிடையில் மூதாட்டி லட்சுமி, மதகுபட்டி ராமலிங்கபுரத்தில் உள்ள அவரது மகள் மல்லிகாவை செல்போனில் அழைத்து, “இங்க வெரிஃபிகேஷனுக்கு வந்திருக்காங்க மா... ஆயிரம் ரூபாய் தருவாங்களாம்... நீயும் இ-சேவை மையத்துல பதிவு பண்ணு. உனக்கும் பணம் கொடுப்பாங்க. பேத்திய அனுப்பி என்னன்னு பாக்க சொல்லு...” என வெளியூரில் இருக்கும் தனது மகளிடம் இதுகுறித்து பேசியுள்ளார். மேலும், வீட்டுக்குள் புகுந்த அந்த பெண்ணிடமும் லட்சுமியின் மகள் பேசியுள்ளார்.

இதையடுத்து, மூதாட்டி லட்சுமியிடம் அடையாள அட்டைகளைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளம்பெண், அந்த பகுதி முழுவதும் சுற்றிப் பார்த்துள்ளார். அந்த நேரத்தில், அப்பகுதி முழுவதும் ஆள் நடமாட்டம் இல்லாததைத் தெரிந்துகொண்டு அந்த பெண் ஒரு அதிர்ச்சி திட்டத்திற்கு தயாராகியுள்ளார். ஆனால், அந்த மூதாட்டி சிறு பிள்ளை போல் அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த அந்த பெண் மூதாட்டி லட்சுமி அணிந்திருந்த 30 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி அந்த பெண்ணைத் தடுத்து நிறுத்திவிட்டு கூச்சலிடத் தொடங்கியுள்ளார். அந்த சமயத்தில், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து உடனடியாகத் தப்பிக்க வேண்டும் என முடிவு செய்த அந்த பெண், மூதாட்டியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும், இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகைய சூழலில், சிறிது நேரம் கழித்து உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூதாட்டி லட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கத்திக் கூச்சலிடவே அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடினர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகங்கை டிஎஸ்பி சிபிசாய் சவுந்தர்யன் தலைமையிலான போலீசார், மூதாட்டி லட்சுமியின் வீட்டை முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்பிறகு, அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காளையார்கோவில் போலீசார் மூதாட்டி லட்சுமியை கொலை செய்தது யார் எனத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருவர் மூதாட்டியின் வீட்டுக்கு அருகே வந்து சென்றதும் அவரது கையில் ஒரு கட்டைப்பை வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, விறுவிறுவென கிளம்பிய அந்த பெண் தொண்டி பேருந்தில் ஏறி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

அதே வேளையில், நகைகளைக் கொள்ளையடிக்கும்போது இவர்களுக்குள் நடந்த மோதலில் மூதாட்டி லெட்சுமி இறந்துவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். இத்தகைய சூழலில், சிசிடிவி காட்சிகள் காவல்துறைக்கு கிடைத்தாலும், அந்தப் பெண்ணை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது, போலீசார் திரட்டிய ஆதாரங்களை வைத்துக்கொண்டு தலைமறைவாகியிருக்கும் அந்த பெண்ணை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் காளையார்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாமல் திணறி வரும் காவல்துறையினருக்கு இந்த மூதாட்டி கொலை வழக்கு மேலும் சவாலாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT