Skip to main content

மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்; கணவன் மனைவியின்  பரபரப்பு வாக்குமூலம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Wife arrested for indecent old woman for jewelry

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி யசோதா (64). இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணியன் இறந்துவிட்டார். யசோதா மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யசோதா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் யசோதாவின் மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் யசோதா வீட்டுக்கு வந்து தாயின் உடலை பார்த்து கதறி அழுதனர். முதலில் வயது முதுமை காரணமாக யசோதா இறந்துவிட்டதாக அவர்கள் நினைத்தனர். பின்னர் யசோதாவின் உடலை அடக்கம் செய்யும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது யசோதா கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் சங்கிலி மற்றும் அரை பவுன் கமலுக்கு பதிலாக கவரிங் நகை இருந்ததைக் கண்டு அவர்களுடைய மகள்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதனால் தாயின் சார்வில் மர்மம் இருப்பதாக கருதி அவர்கள் இது குறித்து பவானிசாகர் போலீசில் புகார் அளித்தனர். 

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யசோதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இந்நிலையில் போலீசாரின் சந்தேக பார்வை யசோதா வீட்டின் அருகே வசித்து வரும் பழனிச்சாமி என்பவர் மீது திரும்பியது. பழனிச்சாமி அடிக்கடி மதுபோதையில் யசோதா வீட்டுக்கு சென்று வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து பழனிச்சாமியிடம் போலீசார் கெடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாரிடம் யசோதாவை கொன்றதை பழனிச்சாமி ஒப்புக்கொண்டார். 

இது குறித்து போலீசார் கூறியதாவது:- மூதாட்டி யசோதா வீட்டின் அருகே பழனிச்சாமி மனைவி தேவியுடன் வசித்து வந்தார். பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதே சமயம் அவருக்கு பண தேவையும் இருந்துள்ளது. இதனால் பண தேவைக்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது யசோதாவின் நகை அவரது பார்வையை உறுத்தியது. இதை அடுத்து நேற்று முன்தினம் பழனிசாமி மது போதையில் யசோதா வீட்டிற்கு சென்றுள்ளார். பழனிச்சாமி உடன் அவரது மனைவியும் உடன் சென்றுள்ளார். அப்போது பழனிச்சாமி யசோதா கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்று உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த யசோதா தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி மூதாட்டியின் வாயை தனது கையால் பொத்தியுள்ளார். இதில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர் வீட்டிலிருந்த தலையணையால் முகத்தில் அமுக்கி உள்ளார். இதற்கு அவரது மனைவியும் உதவியாக இருந்து உள்ளார். சிறிது நேரத்தில் யசோதா பரிதாபமாக இறந்தார். பின்னர் பழனிச்சாமி மூதாட்டி அணிந்திருந்த நகையை கழட்டி விட்டு தாங்கள் கொண்டு வந்த கவரிங் நகையை மூதாட்டிக்கு அணிவித்து  விட்டு ஒன்றும் தெரியாதது போல் சென்றுவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் பவானிசாகர் போலீசார் மர்மசாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி பழனிச்சாமி அவரது மனைவி தேவி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்