ADVERTISEMENT

“முட்டை பெர்சன்டைல் எடுத்தால் டாக்டர் ஆகிடலாம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

02:57 PM Oct 21, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ‘நீட் விலக்கு - நம் இலக்கு’ என்ற தலைப்பில் 50 நாட்களில், 50 லட்சம் கையெழுத்திட்டு, குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கும் கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முதல் கையெழுத்திட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நீட் தேர்வு வந்தால் தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்று சொன்னார்கள். மருத்துவ கல்லூரிகளில் பணம் பெற்று கொண்டு சீட் கொடுக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் தற்போது மருத்துவ மேற்படிப்பில் (PG) சேர்வதற்கு எத்தனை பெர்சென்டைல் எடுக்க வேண்டும் என்று தெரியுமா?. (முட்டையை காட்டி) முட்டை எடுத்தால் டாக்டர் ஆகி விடலாம். மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்கு முட்டை பெர்சன்டைல் எடுத்தால் போதும், மருத்துவ கல்லூரியில் சேர்ந்து டாக்டர் ஆகி விடலாம் என உத்தரவிட்டுள்ளனர்” என பேசினார்.

மேலும் இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ஒட்டுமொத்த தமிழ்நாடே நிராகரிக்கும் நீட் என்னும் அநீதியை ஒழிக்க திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மற்றும் மருத்துவ அணி முன்னெடுக்கும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கி வைத்துள்ளோம். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டு ஊக்கம் தந்துள்ளார். இந்த கையெழுத்து இயக்கத்தின் தொடக்க நிகழ்வில், தகுதி, தரம் என்று கூறி நீட்டை திணித்தவர்கள், இன்றைக்கு மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் 0 பெர்சன்டைல் எடுத்தால் போதும் என்று சொல்லும் கொடுமைகளை விளக்கி உரையாற்றினோம்.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாட்டின் கல்லூரிகள், பள்ளிகள், ஊர்கள், வீதிகள் என மூலைமுடுக்கெல்லாம் சுற்றி சுழன்று தமிழ்நாட்டு மக்களின் கையெழுத்தை பெற்றிடுவோம். அனைத்துக் கட்சி நண்பர்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள், நீட் தேர்வுக்கு எதிரான தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றிட வேண்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “ தம்பி உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்துல, நான் கையெழுத்து போட்டுடேன். நீங்க...?. நீட் விலக்கு நம் இலக்கு” என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT