ADVERTISEMENT

ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த காவலர்; டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் நலம் விசாரிப்பு

05:01 PM Aug 01, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

போலீஸ் அதிகாரிகளைத் தாக்க முயன்றதால் தான் ரவுடிகளை என்கவுன்டர் செய்யும் சூழல் ஏற்பட்டதாகத் தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் காரணை - புதுச்சேரி செல்லும் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அதிவேகமாக வந்த காரை போலீசார் சோதனை செய்ய காரை நிறுத்த முற்பட்டபோது, நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலீஸ் ஜீப் மீது மோதி நின்றது. கார் அருகில் சென்றபோது, அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலீசாரை நோக்கித் தாக்க முற்பட்டனர்.

போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் என்ற இருவரும் உயிரிழந்தனர். சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்கு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் காரில் வந்த மற்ற இரு ரவுடிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அதில் ஒருவர் அரிவாளால் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனின் இடது கையில் வெட்டிவிட்டு மீண்டும் தலையில் வெட்ட முற்பட்டபோது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுப்பட்டது. காயம்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகள் இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது ரவுடிகள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சிகிச்சை பெற்றுவரும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை நேரில் சந்தித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''போலீசார் வாகன சோதனையின் பொழுது சம்பந்தப்பட்டவர்களை நிறுத்த முயன்றபொழுது அவர்களது கார் நமது வண்டி மீது மோதியுள்ளது. மேலும் நம்ம போலீஸ் அதிகாரிகளைத் தாக்க முயன்றுள்ளார்கள். உதவி ஆய்வாளரின் தலையில் வெட்ட முயன்று தப்பித்தார். இருப்பினும் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. காவலர்கள் சமயோசிதமாக செயல்பட்டு தற்காப்பிற்காக துப்பாக்கியால் ரவுடிகளை என்கவுன்டர் செய்துள்ளனர்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT