vikas dubey

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடியான விகாஸ் துபேவைமத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உ.பி. மாநில போலீசார் கைது செய்தனர். விகாஸ் துபே, இன்று காலை கான்பூருக்கு அழைத்து வரப்பட்டபோது, பாதுகாப்புப் பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தைப் பயன்படுத்தி, விகாஸ் துபே தப்ப முயன்றதாகவும் அப்போது நடைபெற்ற என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

உத்திரப்பிரதேச மாநிலம் பிக்ரு கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே. சிறு வயதிலேயே சின்னச் சின்ன திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டார். பின்னர் வழிப்பறி, மிரட்டல் விடுப்பது போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டார். 1990 இல் முதல் கொலையைச் செய்த விகாஸ் துபே தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டார். இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு அம்மாநிலத்தில் விகாஸ் துபே மிகப்பெரிய ரவுடியாக பேசப்பட்டார். துப்பாக்கிகளுடன் கூடிய கூட்டாளிகள் இவருடனேயே இருப்பார்கள்

அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட விகாஸ் துபேவை, பல கட்சிகள் தங்களது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தன. இருப்பினும் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 1995 - 96 இல் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தித் தனது மனைவியையும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தார்.

Advertisment

பகுஜன் சமாஜ் கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்கள் பலரைச் சந்தித்து ஆதரவுகளைப் பெற்றுக்கொண்ட விகாஸ் துபே, தனது 'தாதா' தொழிலையும் திறமையாகச் செய்து வந்தார். இதனால் பதவி, கட்சியில் செல்வாக்கு போன்றவற்றால் இவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும் காவல்துறையினரால் இவரை விசாரணை செய்யவோ, கைது செய்யவோ நெருங்க முடியவில்லை. பணம், அரசியல் பின்புலம் என ராஜயோகமாக வாழ்ந்து வந்த விகாஸ் துபே 1999 இல் வெளிவந்த 'அர்ஜுன் பண்டிட்' படத்தைப் பார்த்து தன் பெயரையும் விகாஸ் பண்டிட் என மாற்றிக்கொண்டார்.

2001 இல் உத்திரப்பிரச மாநில பா.ஜ.க. முக்கிய தலைவரானசந்தோஷ் சுக்லாவை, ஷிவ்லி காவல் நிலையத்திலேயே வைத்து விகாஸ் துபே சுட்டுக் கொன்றார். காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்தபோது சுமார் 25 போலீசார் இருந்தபோதும் விகாஸ் துபேவைக் கைது செய்ய முடியவில்லை. மாநிலம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த வழக்கில் 2002 இல் தாமாகவே முன்வந்து விகாஸ் துபே சரண் அடைந்தார். ஆனால் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த போலீசார் பலரும் விகாஸ் துபேவுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். இதனால் விகாஸ் துபே அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் பல்வேறு வழக்குகள் அவர் மீது இருந்து வந்தது.

ஒரு கொலை வழக்குக்காக விகாஸ் துபேவைத் தேடி வந்த தனிப்படை போலீசார் குழு, அவரைக் கைது செய்வதற்காக கடந்த 3ஆம் தேதி கான்பூருக்குச் சென்றது. போலீசார் வருவது முன்பே தெரிந்தததால் சாலைகளில் போலீஸ் வாகனங்கள் வர முடியாதபடி பெரிய கனரக வாகனங்களைச் சாலையில் மறித்து நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது போலீசார் அந்தச் சாலையின் குறுக்கே இருந்த வாகனத்தை நகர்த்தி வைத்துவிட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

அப்போது சற்று உயரமான இடங்களில் இருந்த விகாஸ் துபே கூட்டாளிகள் போலீசாரை நோக்கிசரமாரியாகச் சுடத் தொடங்கினர். சுற்றி வளைத்துச் சுட்டத்தில் ஒரு டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.க்கள், 4 கான்ஸ்டபிள் என போலீசார் 8 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து விகாஸ் துபே தலைமறைவானார்.

http://onelink.to/nknapp

விகாஸ் துபே பற்றி 'துப்பு'கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அந்தத் தொகை இரண்டரை லட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும் விகாஸ் துபேவைப் பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனில் உ.பி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். ரவுடிகளுக்குத் தகவல் தெரிவித்து துணையாக இருந்ததாக போலீசார் நான்கு பேர் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளனர்.