ADVERTISEMENT

அதிகாரிகளை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்; விளக்கம் சொன்ன ஆளும்கட்சி ஒன்றிய செயலாளர்

03:48 PM Nov 12, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் இருந்து, ஆந்திர மாநில எல்லை – தமிழக எல்லை முடியுமிடத்தில் உள்ள பரதராமி வரை 12 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை (எஸ்.எச். -88) கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் சாலை சரியில்லாததால் அடிக்கடி பழுதடைகின்றன. வாகன ஓட்டிகளும் விபத்துக்களில் சிக்குகின்றனர்.


வேலூர் மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கம், குடியாத்தம் நகர தாலுக்கா குழு சார்பில் குடியாத்தம் முதல் பரதராமி வரையிலான உயிர் பலிவாங்கும் குண்டும் குழியுமான நெடுஞ்சாலை சீரமைக்காதததை கண்டித்தும், டெண்டர் விட்டு 6 மாத காலம் ஆகியும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறையை கண்டித்தும், தமிழக அரசே உடனே நடவடிக்கை எடு என்பதை வலியுறுத்தி நவம்பர் 11ஆம் தேதி சி.ஐ.டி.யூ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த சூழ்நிலையில் 2020-21 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் 12 கி.மீ. நீளத்திற்கு தற்போதுள்ள 7 மீட்டர் அகலத்திலிருந்து 10.50 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இப்பணிக்கு ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டு 3 மாதங்களுக்கு முன் டெண்டர் விடப்பட்டது என்றும் சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக உள்ள அகற்ற வேண்டிய மரங்கள் மின்கம்பங்களின் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் ராமு விளக்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் தலித்குமார் கேள்விகள் எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு அதிகாரி சொல்ல வேண்டியதை ஆளும் கட்சி நிர்வாகி சொல்வது ஏனோ? பணிகள் 4 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட உள்ளன என்றும் கரோனா காரணமாக அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் சாலைப்பணிகள் மேற்கொள்ள காலதாமதம் ஏற்படுவதால், சாலையில் உண்டாகும் பள்ளங்களை அந்தந்த ஒப்பந்ததாரர்கள் மூலம் உடனுக்குடன் நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்து வருகின்றனர் என்றும் ராமு கூறுகிறார்.

ஊரடங்கு தளர்வுகள் நிலையில், பொது போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் காலதாமதம் என்ற விளக்கமே தவறு. விரைவில் சாலைப்பணிகள் தொடங்கி, முடிக்கப்பட்டு. மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்பதைவிட, போர்க்கால அடிப்படையிலான சீரமைப்பு அவசியம். இந்தச் சாலையை விரிவுபடுத்தி, செப்பனிட நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது தெரிந்தும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுவது வேதனைக்குரியது என்கிறாரே வி.ராமு.


சாலையில் பயணிப்போருக்கு தெரியும் வலியும் வேதனையும், ரத்தக் கண்ணீரும், துயரமும் 12 கி.மீ. தொலைவு பயணிப்போரை கேளுங்கள் அல்லது பயணித்து பாருங்கள் உண்மை தெரியும். சாலையை விரைவில் சீரமைக்கக்கோரி, சாலையில் மழை பெய்யும்போது தேங்கும் நீரில் நாற்று நடும் போராட்டத்தை நடத்துகிறோம். அப்போது தெரியும் சாலையின் அவலம் எனக்கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT