ADVERTISEMENT

''150 பேருக்காக எந்த மாட்டுக்காரனாவது காளையை அவிழ்த்துவிடுவானா?''-எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஆதங்கம்!  

08:28 AM Jan 12, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழக அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டிருந்தது அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் 300 வீரர்களும், 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மேலும் போட்டி நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விதித்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், காளைகளின் உரிமையாளர் என அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்பொழுது பேசிய அவர், ''தமிழகத்தின் பாரம்பரியத்தையும் குறிப்பாகத் தென் பகுதியான மதுரையின் கலாச்சாரத்தை ரொம்ப ஆழமாக பதியவைக்கும் திருவிழா ஜல்லிக்கட்டு. தை மாதம் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு. அதற்கு அடுத்த நாள் பாலமேடு, அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இந்த கலாச்சார திருவிழாவை கரோனாவை காரணம்காட்டி தடை செய்கிறார்கள். இந்த வருடமும் நடக்கவில்லை. கரோனா தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒன்று தடை செய்ய வேண்டும். இது 10 பேர், 100 பேர் பார்க்கக்கூடிய திருவிழா அல்ல, ஆயிரக்கணக்கான பேர் திரள, மக்களுடைய அத்தனை சந்தோஷத்திற்குமான திருவிழா. ஆனால் இந்த அரசாங்கம் என்ன செய்துள்ளது. 150 பேர் மட்டும் பார்வையாளர்கள் என தெரிவித்துள்ளது.

150 பேருக்காக எந்த மாட்டுக்காரனாவது காளையை அவிழ்த்துவிடுவானா? அந்த 150 பேர் யார்? அந்த 150 பேரை எப்படித் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? இது ஒரு தேவைஇல்லாத காரியமாக தெரிகிறது. நல்ல மிகச்சிறந்த அரசாங்கம் இருக்கின்ற நேரம் இது, முதல்வரும் சரி, அவருக்காக இருக்கக்கூடிய அத்தனை அதிகாரிகளும் சரி, அமைச்சர்களும் சரி எல்லாமே முற்போக்கான ஆட்கள்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த காரியத்தில் முடிவெடுத்திருப்பது சரியாக தெரியவில்லை. கரோனாவை காரணம்காட்டி ஜல்லிக்கட்டை தாராளமாக நிறுத்தலாம். இப்படி நடைபெறும் ஜல்லிக்கட்டு ஒரு அபத்தமான காரியம். 150 பேர் என்றால் எந்த 150 பேர்? மாடு பிடிக்கவே 150 பேர் வருவார்கள். அறிவார்ந்த முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் இருக்கின்ற அரசாங்கம் இவ்வாறு முடிவு பண்ணலாமா?

ஜல்லிக்கட்டு யாருக்கு நடத்துறீங்க, போலீஸுக்கா? மேடையில் இருக்கின்ற அதிகாரிக்கு நடத்துறீங்களா? இது மக்கள் திருவிழா. இது தமிழகத்தினுடைய திருவிழா. தீபாவளி என்பது அகில இந்திய அளவில் எல்லாரும் கொண்டாடக்கூடிய பண்டிகை. தைப்பொங்கல் என்பது தமிழ்நாட்டில், குறிப்பாக தென் மாவட்டங்களில் உறவை கொண்டாடுகிற, கலாச்சாரத்தை கொண்டாடுகிற, பண்பாட்டை கொண்டாடுகிற திருவிழா. ஜே... ஜே... என்று இருக்கும். இப்படிப்பட்ட ஒரு குதூகலமான விழாவை 150 பேர் தான் பார்க்கலாம் என்றால் என்ன அர்த்தம். எனவே இது சரியான முடிவாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT